விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 10, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Paradox hermaph 060924 ltn.jpg

ஆசிய மரநாய் தெற்காசிய நாடுகளிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் வாழும் புனுகுப் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய ஊனுண்ணி விலங்காகும். 2008ஆம் ஆண்டு இது தீவாய்ப்புக் கவலையற்ற இனமாக வகைப்படுத்தப்பட்டது. ஏனெனில், ஆசிய மரநாய்கள் பல்வேறு வகையான வாழிடங்களுக்கும் எளிதில் இசைவாக்கம் அடையக்கூடியவை. மேலும் இவை மிகப் பெரும் எண்ணிக்கையில் நன்கு பரவிக் காணப்படுகின்றன. இவை மாம்பழம், இறம்புட்டான், கோப்பி போன்ற பழங்களையும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள் போன்றவற்றையும் உணவாகக் கொள்ளும். ஆசிய மரநாய்கள் வட அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் ரக்கூன் விலங்குகளைப் போன்று குழிகள் முதலானவற்றில் வாழும். மேலும் இவை எலிக்கோனியா போன்ற தாவரங்களின் கள்ளையும் உட்கொள்வதால் கள்ளுண்ணும் பூனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் இறைச்சித் துண்டுகளிலிருந்து பெறப்படும் கொழுப்பு ஆளிவிதை எண்ணெயுடன் சொறி சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கோப்பி லுவாக் என்பது விலங்குகள் பகுதியாக உட்கொண்ட கோப்பிப் பழங்களை அவற்றின் வாயிலிருந்து பறித்தெடுத்துத் தயாரித்ததாகும். தற்காலத்தில் உலகில் மிக உயர்ந்ததும் ஆகக் கூடிய விலை கொண்டதுமான கோப்பி வகை இதுவாகும். இதற்கு இந்த மரநாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும்..


Angaian Kailasanathan.jpg

அங்கையன் கைலாசநாதன் (1942-1976) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால் பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் இலங்கை வானொலியில் தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், வானொலி மஞ்சரி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 17 ஆண்டுகள் எழுதியவர். ஈழத்து நெய்தல் நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளிவந்த முதல் ஈழத்து நாவல் இவரது "கடல் காற்று" என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். இரண்டாவது பதிப்பையும் கண்டது. விவசாயிகளின் ஆதிக்கத்தை விவரிக்கிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புப் பட்டதாரியான இவர் ஈழத்தின் மெல்லிசைப் பாடல் முன்னோடி ஆவார். "மணிக்குரல் ஒலித்தது' என்ற புகழ் பெற்ற பாடல் உட்பட பல மெல்லிசைப் பாடல்களை எழுதியிருக்கிறார். புதினங்கள், வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதினார். சிங்களப் புதினம் ஒன்றையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். "சமூக தீபம்' என்ற இதழை வெளியிட்டார். வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகள் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன. மேலும்..