விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 05, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Osmosis computer simulation.jpg

சவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் (Osmosis) எனப்படுவது நீரழுத்தம் கூடிய கரைசல் (கரையத்தின் செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (semi-permeable membrane) ஒன்றின் ஊடாக நீர் மூலக்கூறுகள் பரவல் ஆகும். இது கரையம் அல்லது கரைபொருளை (solute) உட்செல்ல விடாது, கரைப்பானை (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென்சவ்வினூடாக, கரைப்பானானது, சக்திப் பிரயோகமின்றி பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் தொழிற்பாடாகும். இந்த சவ்வூடு பரவலின்போது வெளியேறும் சக்தியானது வேறு தொழிற்பாடுகளில் பயன்படுத்தப் படலாம்.சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய கரைசல்களின் (solution) இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அமுக்கமே சவ்வூடு பரவல் அமுக்கம் எனப்படும்.உயிரினங்களில் இருக்கும் இவ்வகை சவ்வுகள் மாப்பொருள் (polysaccharides) போன்ற பெரிய மூலக் கூறுகளை ஊடுசெல்ல விடாதவையாகவும், நீர், மேலும் ஏற்றங்களற்ற சிறிய மூலக் கூறுகளை உட்செல்ல விடுபனவையாகவும் இருக்கின்றன.


School children in Louvre.jpg

அருங்காட்சியகம் என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும்.இவை, மக்கள் மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன், அவற்றைப் பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் உதவுகின்றன. சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமாக இயங்குகின்ற இக் கண்காட்சிகள், நிலையானவையாகவோ அல்லது தற்காலிகமானவையாகவோ இருக்கலாம். அருங்காட்சியகங்களில் பல வகைகள் உள்ளன. பல பெரிய நகரங்களில், நுண்கலைகள், பயன்படுகலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண முடியும்.