விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 22, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (1854 - 1922), ஈழத்துப் புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர். புலவர் சிறுவயதிலிருந்தே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார். 1878 ம் ஆண்டில் ஏழாலை சைவபிரகாச தமிழ் வித்தியாசாலையில் ஆசிரியராக பணியாற்றினார். இரு ஆண்டுகளின் பின் அக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானார். வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார். சாணக்கிய நீதி வெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம் என்பவை அவை. சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு ஆகும். சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த ஒரு வரலாற்று நூல். வேறாக இலக்கியசொல் அகராதி, நீதிநெறி விளக்கம் போன்றவையும், சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார். மேலும்..


மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார். மேலும்..