விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 7, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராணி லட்சுமிபாய் அல்லது சான்சி இராணி வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார். சான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா ராணி லட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் சான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் ராணி லட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல்நலமிழந்து இறந்தார். மேலும்...


கருச்சிதைவு என்பது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முளையமோ அல்லது முதிர்கருவோ. மேலும் உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கும். இது பொதுவாக கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில், அதாவது கருக்காலத்தின் 24 கிழமைகளுக்குள் தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாகும். கருத்தரிப்புக் காலத்தின் மிக ஆரம்ப நிலையில், இறுதி மாதவிடாய்க் காலத்திலிருந்து 6 கிழமைகளுக்குள் நிகழும் கருச்சிதைவை 'முன்னதான கருப்ப இழப்பு'அழைப்பர். கருச்சிதைவானது 6 கிழமைக்குப் பின்னர் நிகழ்ந்தால் அது 'தன்னிச்சையான கருக்கலைப்பு' என்று அழைக்கப்படும். மருத்துவரீதியில் பொதுவாக தன்னிச்சையாகவோ அல்லது தூண்டுதல் மூலமோ முளையம் அல்லது முதிர்கரு சிதைந்து கருப்பையிலிருந்து அகற்றப்படும்போது, அது கருக்கலைப்பு என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் இது தன்னிச்சையாக நிகழும்போது, பெண்கள் அதனை கருக்கலைப்பு எனக் கூறப்படுவதை விரும்புவதில்லை. மேலும்...