விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 6, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922) தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க மரபிற்கேற்ப உருபெற்றது இவரது காலத்தில்தான். "தமிழ் நாடகத் தலைமையாசிரியர்" என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர் சுவாமிகள். பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியன போன்றவற்றைக் கற்றார். இதனால் வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனைப் பெற்றார். தனது 24வது அகவையில் நாடகத்துறையில் ஈடுபட்டார். சாமி நாயுடு குழுவில் பணியாற்றும்பொழுது வாழ்க்கையில் வெறுப்புற்ற சங்கரதாசர் தன் வழிபடு கடவுளாகிய முருகனின் அருள்வேண்டி அருட்செலவு மேற்கொண்டார். அரையில் மட்டும் உடையுடுத்தி அருட்செலவில் ஈடுபட்ட சங்கரதாசரை பலரும் சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர். இதனால் அவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார். மேலும்...


நொதியம் என்னும் புரதப் பொருள் உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாக செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கி ஆகும். ஏறத்தாழ உடலில் உள்ள எல்லாக் கலங்களின் இயக்கத்திற்கு தேவையான எல்லாவற்றுக்கும் நொதியங்கள் தேவைப்படுகின்றன. இவ்வினையூக்கியாகிய நொதி இல்லாவிடில், சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு அல்லது மில்லியன் கணக்கான மடங்கு மிக மெதுவாகவே நடக்கும். இப்படி மெதுவாக நடக்க நேரிட்டால் எந்த உயிரினமும் உயிர் வாழ இயலாது. எனவே நொதிகள் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மாந்த உடலில் 75,000 நொதிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கின்றார்கள். நொதி, பிற சேர்மங்களுடன் சேர்ந்து நுட்பச் செறிவு மிகுந்த வேதியியல் பொருள் அமைப்புகளை உருவாக்கி அதன் வழி வேதி வினைகள் நிகழ வழி வகுக்கின்றது. ஆனால் நொதி தன் இயல்பு மாறாமல் இருந்து இறுதியில் விடுபடுகின்றது. ஒரு நொதி ஒரு மணித்துளியில் தன் வினையை மில்லியன் கணக்கான தடவை செய்ய வல்லது. மாந்த உடலில் ஆயிரத்திற்கும் மேலான வெவ்வேறு வகை நொதிகள் உருவாகி செயல்படுகின்றன. மிக விரைவாக வினை ஆற்றுவது மட்டுமின்றி, குறிப்பிட்ட வினைகளை மட்டுமே மிக மிகத் துல்லியமாய், தக்க சூழலில் மட்டுமே, பூட்டும் அதற்கான திறவுகோலும் போல் மிகுதேர்ச்சியுடன் இயக்குகின்றது. செடிகொடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்வது முதல் மாந்தர்களின் உடலில் உணவு செரிப்பது, மூளை இயங்குவது, இதயம் துடிப்பது, மூச்சு விடுவது ஆகிய அனைத்துமே நொதிகளின் இன்றியமையாத துணையால் நிகழ்வன. மேலும்...