விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 31, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கால்வினும் ஆபுசும் (Calvin and Hobbes) பில் வாட்டர்சனால் உருவாக்கப்பட்ட ஒரு ஆங்கிலப் படக்கதை. நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பட்டு பின்னர் நூல்வடிவிலும் வெளியானது. இது கால்வின் என்ற கற்பனை வளமிக்க ஆறு வயது சிறுவன், ஆபுசு என்ற அவனது பொம்மைப்புலி ஆகிய இரு புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு வரையப்பட்ட படக்கதையாகும். இந்தப் பாத்திரங்களின் பெயர்கள் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சான் கால்வின் என்ற பிரெஞ்சு மறுமலர்ச்சி இறையியலாளர், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமசு ஆபுசு என்ற ஆங்கிலேய அரசியல் மெய்யியலாளர் ஆகியோரின் பெயர்களைத் தழுவி அமைக்கப்பட்டன.1985 முதல் 1995 வரை நாளிதழ்களில் இப்படக்கதை தொடராக வெளியிடப்பட்டது. இப்படக்கதை புகழின் உயரத்தில் இருந்த காலத்தில் பல நாடுகளிலுமாக 2,400 நாளிதழ்களில் வெளிவந்தது. தவிர, இதுவரை பதினெட்டு நூல்களாகவும் இவை தொகுக்கப்பட்டு 4.5 கோடி படிகளுக்கும் மேல் அச்சாகியுள்ளன. மேலும்


கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி (கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, 1892-1975) ஒரு இந்திய வரலாற்றாளரும் திராவிடவியலாளரும் ஆவார். நீலகண்ட சாத்திரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் ஒர் ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். முதுகலைப் பட்டப் படிப்பில் சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கலைக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராகவும், யுனெஸ்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தவர். தென்னிந்திய வரலாறு பற்றி 25 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ் வரலாற்றாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக நீலகண்ட சாத்திரியைக் கருதுகிறார். ஆனாலும், சாத்திரியின் காலத்தில் தமிழ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை வேறு களங்களில் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு ஆராயும் பழக்கம் வரலாற்றியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார். மேலும்..