விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 30, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரியலில் பல்லுருத்தோற்றம் எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட இனத்தில், அதன் உறுப்பினர்களிடையே பல்வேறு தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் ஆகும். அதாவது ஓர் இனத்தின் இனத்தொகையில், அல்லது அவ்வினம் வாழும் சேர்ந்திருப்பில் அல்லது சமூகத்தில் உள்ள உறுப்பினர்களிடையே, பாலின வேறுபாடுகள் தவிர்த்த, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய, தொடரற்ற, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வகையான தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் ஆகும். தோற்றவமைப்புக்கள் வேறுபட்டு இருப்பினும், அவை யாவும் ஒரே வாழ்விடத்தை, ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடியவையாகவும், தமக்கிடையே தடைகளற்ற இனச்சேர்க்கை செய்யக்கூடியனவாகவும் இருந்தால் மட்டுமே அவை பல்லுருத்தோற்ற பண்பை உடைய ஒரு இனமாக வரையறுக்கப்படும். பல்லுருத்தோற்றம் இயற்கையில் காணப்படும் ஒரு பொதுவான தோற்றப்பாடாகும். பல்லுருத்தோற்றமானது, உயிரியற் பல்வகைமை, மரபியல் வேறுபாடு, இசைவாக்கம் என்பவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. வேறுபட்ட சூழலில் ஓர் இனம் தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொள்ள, இந்த தோற்ற வேறுபாடுகள் உதவும். இதனால் இந்த பல்லுருத்தோற்றம் தொடர்ந்து பல சந்ததிகளூடாகப் பேணப்படும். மேலும்...


மலேசியப் பழங்குடியினர் அல்லது "ஒராங் அஸ்லி" எனப்படுவோர் தீபகற்ப மலேசியாவின் பூர்வீகக் குடியினர். கிபி 1ம் நூற்றாண்டில் முதல் இந்திய வணிகர்கள் வந்து இறங்கும் வரை அஸ்லி பழங்குடியினர் அவர்கள் இருந்த இடத்திலே வசித்தனர். உட்புறப் பகுதியில் வாழ்ந்த அவர்கள், பிசின் அல்லது களிம்பு, நறுமணக் கட்டைகள், தோகைகள் முதலியவற்றை மாற்றாக உப்பு, துணிமணி மற்றும் இரும்புக் கருவிகள் பண்டமாற்று செய்தனர். மலாய் ஆட்சியாளர் தோற்றத்தின் போது அஸ்லி பழங்குடி அடிமைகளை பண்டமாற்றத்திற்கு பயன்படுத்தினர். மேலும் வெளி உலகத் தொடர்பைத் தடுப்பதற்கு உட்புறப் பகுதிக்கு குடியேறினர். ஆங்கிலேயரின் காலனித்துவ வருகையால் மேலும் அவர்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களை கிறித்தவ மதபோதர்களும் மனித இன ஆராய்ச்சியாளர்களும் குறி வைத்தனர். 1948 முதல் 1960 வரையிலான மலேசிய அவசர காலத்தின் போது அஸ்லி பழங்குடியினர் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய பங்காக இருந்தனர். அவர்கள் உதவியுடன் மலாய் இராணுவம் கம்யூனிசக் கலகக்காரர்களை தோற்கடித்தது. மேலும்...