விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 3, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெல்ஜியம் சண்டை இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்தது. மே 10-28, 1940ல் நடந்த இச்சண்டையில் நாட்சி செருமனி பெல்ஜியம் நாட்டைத் தாக்கிக் கைப்பற்றியது. 1939ல் செருமனி போலந்தைத் தாக்கிக் கைப்பற்றியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பின்னர் நேச நாடுகளும் செருமனியும் அடுத்த கட்ட மோதலுக்காக தயாராகின. இந்தக் காலகட்டம் போலிப் போர் என்றழைக்கப்பட்டது. செருமனி அடுத்து பிரான்சைத் தாக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. மாறாக செருமனியின் தளபதிகள் பெல்ஜியம், நெதர்லாந்து வழியாகத் தாக்கத் திட்டமிட்டனர். நேசப் படைகள் பெல்ஜியத்தின் மீதான தாக்குதலே செருமனியின் முக்கிய தாக்குதல் என நம்பித் தங்கள் படைகளில் சிறந்தவற்றை பெல்ஜியத்துக்கு அனுப்பின. ஆனால் செருமனியின் இன்னொரு பெரும் படை மஷினோ கோட்டை உடைத்து ஆர்டென் காடு வழியாக பிரான்சைத் தாக்கியது. செருமனியின் இந்த இருமுனைத் தாக்குதலும் செர்மானியக் கவசப் படையினரின் மின்னலடித் தாக்குதல் உத்தியும் நேசநாட்டுப் படைகளை நிலை குலையச் செய்தன. பதினெட்டு நாட்களில் பெல்ஜியம் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்தது. அடுத்த மாதம் பிரான்சும் சரணடைந்தது. மேலும்


சேர் பொன்னம்பலம் இராமநாதன் (1851 - 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். சென்னை மாநிலக் கல்லூரியில் உயர் கல்வியும், பின்னர் கொழும்பில் சட்டக் கல்வி பயின்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர், பின்னர் சட்டமா அதிபராகப் பதவிவகித்து ஓய்வு பெற்றார். 1879 இல் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 இல் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1921 இல் பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவினார். கொழும்பு பொன்னம்பலவாணேசர் கோயிலை 1912 இல் கட்டினார். மேலும்..