விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 29, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும் மேலதிகமாக தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வானூர்திகளும் அழிக்கப்பட்டன. ஈழப் போர் தொடங்கியதிலிருந்து கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும்.


சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.