விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 25, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேதை உள்ளான் (Ruff) என்பது "கரைப்பறவைகள்" வகையைச் சார்ந்த ஒரு பறவை. பல உள்ளான் வகைப் பறவைகளும் இப்பிரிவிலடங்கும். இப்பறவையின் விலங்கியல் பெயர் Philomachus pugnax ஆகும். இந்தியாவில் இது பரவலாகக் காணப்படும் குளிர்கால-வரவி ஆகும்; மேலும் இது ஒரு வழிசெல் இடம்பெயர்வி. நீண்ட கழுத்து, சிறிய தலை, நுனியில் சற்று-சரிந்த சிறிய அலகு, பானை வயிறு, சற்றே-பெரிய ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறக் கால்கள் கொண்ட கரைப்பறவை. இப்பறவை பால் ஈருருமை உடையது. இவை வட ஐரோப்பா, சைபீரியாவிலுள்ள ஆர்க்டிக் துந்துரா சமவெளிப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிரான பனிக்காலங்களில் இவை குடிபெயர்ந்து தென் ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் கடற்கரை-சதுப்பு நிலங்களுக்கு; தெற்காசியா, அவுசுதிரேலியா நோக்கியும் செல்கின்றன. இந்தியாவில், குறிப்பாக கோடிக்கரை வனவிலங்குகள், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பேதை உள்ளான்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.


தீ எச்சரிக்கை அமைப்பு (Fire Alarm System) எனப்படுவது வணிக, அலுவலக, குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் ஏற்ப்படும் தீ விபத்துகளை கணித்து எச்சரிக்கை செய்ய உதவும் ஒரு தானியங்கி மின்னணு அமைப்பு ஆகும். இவை பொருத்தப்பட்டிருக்கும் இடங்களில் தீ விபத்துகள் ஏற்படும் பொழுது இவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பான்கள் அதிக அழுத்த ஒலியை எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்கின்றன. பெரும்பாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தப்படும் இவை, தானியங்கி மற்றும் மனித தூண்டல் மூலமும் இயங்கவல்லன. மையக்கட்டுப்பாட்டு அமைப்பு, கணிப்பான் அமைப்பு, எச்சரிக்கை அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளை அடிப்படையாகக்கொண்டு இவை செயல்படுகின்றன.