விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 1, 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆன்டன் செகாவ் (1860–1904) புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படும் ஓர் உருசிய எழுத்தாளர் ஆவார். நாடக ஆசிரியராக இருந்து படைத்த, கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் அவரது சிறந்த சிறுகதைகள் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்தின. செகாவ் தனது இலக்கியப் பயணத்துடன் கூடவே, மருத்துவப் பணியையும் மேற்கொண்டு வந்தார். செகாவின் நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன. இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும்...


எயித்தியப் புரட்சி (1791–1804) கரிபியனில் உள்ள பிரெஞ்சுக் குடியேற்ற நாடான செயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டி ஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கிய புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் அமெரிக்காக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றியது. கரிபியன் தீவுகளின் செல்வச்செழிப்பு ஐரோப்பிய சர்க்கரைத் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த கரும்புத் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். மேலும்...