விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 08, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், earthquake) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்திட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.

பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் தட்டுகளாக இருக்கின்றன. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு தட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது பன்னிரண்டு சிறிய தட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் தட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய பெருங்கடல் பகுதிகளும் அடக்கம்.


வள்ளுவர் கோட்டம், புகழ் பெற்ற திருக்குறள் என்னும் நூலைத் தமிழுக்குத் தந்த சங்ககாலத் தமிழ்ப் புலவரான திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது தமிழ் நாடு மாநிலத் தலைநகரமான சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு மற்றும் வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயிலில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை, ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.