விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிறப்பாகப் பங்களித்து வரும் பெண்கள் சிலரைப் பற்றிய அறிமுகம்.

பூங்கோதை[தொகு]

பூங்கோதை, கோயம்புத்தூரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வரும் இவர், 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறந்த உரை திருத்துனரான இவர் புதுப்பயனர்களுக்கு உதவுவது, அனைத்து கட்டுரைகளையும் மேம்படுத்துவது முதலிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 2012 தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டியை முன்னிட்டு தமிழ் விக்சனரியில் 6000க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுக் கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். 2012 விக்கிமேனியா நிகழ்வில் பங்கேற்றுள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான உலகளாவிய விக்கிமீடியா நிதி சேகரிப்பில் இவரது வேண்டுகோள் சிறப்பான இடம்பெற்றது. இருபடிச் சமன்பாடு, பரவளைவு, சார்பு, நீள்வட்டம், அதிபரவளைவு முதலியன இவர் பெரிதும் பங்களித்த கட்டுரைகளில் சில.

பார்வதி[தொகு]

Parvathisri.jpg

பார்வதிஸ்ரீ, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும், பெரியார் பலகலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். செப்டெம்பர் 1, 2011 முதல் விக்கியில் பங்களித்து வருகிறார். தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சிற்றிலக்கியம் அறிவியல் அறிஞர்கள், கணிதம் முதலியன குறித்த கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். இவர் பங்களித்த கட்டுரைகளில் ஓணம், மதுரை சுங்குடி சேலை, தலையாட்டி பொம்மை, தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளைத்தமிழ், நெப்பந்திசு, சிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள், பட்டினப் பாலை, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், செம்பகராமன் பிள்ளை, ஆனந்த ரங்கம் பிள்ளை, ஆர்தர் சி. கிளார்க்‎, கப்ரேக்கர் முதலியன சிலவாகும். இவர் விக்கி நூல்கள், பொது போன்ற விக்கியின் பிற திட்டங்களிலும் பங்களித்து வருகிறார்.

கலை[தொகு]

User,Kalaiarasy's photo.jpeg

கலையரசி, நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர். பேர்கன் மருத்துவமனையில் நோயியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுகிறார். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை, கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு, தமிழ் விக்கி ஊடகப் போட்டி முதலிய திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார். மூச்சுத்தடை நோய், காச நோய், தொற்றுநோய், நோய்க்காரணி, கருச்சிதைவு, மலட்டுத்தன்மை சிகிச்சை, வெளிச் சோதனை முறை கருக்கட்டல், தாய்ப்பாலூட்டல், ஏபிஓ குருதி குழு முறைமை, பூச்சி, வாழ்க்கை வட்டம், பல்லுருத்தோற்றம், ஒன்றிய வாழ்வு, வித்து, வளர்ப்பூடகம், இழையம், வடமுனை ஒளி முதலிய தலைப்புகளில் எழுதியுள்ளார்.

சந்திரவதனா[தொகு]

Chandra.jpg

சந்திரவதனா செல்வகுமாரன், யேர்மனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். தமிழ்ப் பெண் வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஈழப் போராட்டம், இதழியல், அணி இலக்கணம், தமிழர் விளையாட்டுக்கள், ஈழத்து எழுத்தாளர்கள், மூலிகைகள் போன்ற துறைகளில் தமிழ் விக்கியில் எழுதி வருகிறார். சொல் அணி, எட்டுக்கோடு, பெண்கள் சந்திப்பு மலர், மயூரன், தெ. நித்தியகீர்த்தி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.