விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/விக்கி என்றால் என்ன?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வார்டு கன்னிங்காம், விக்கியைக் கண்டுபிடித்தவர்

உலகில் உள்ள கணினிகள் எல்லாம் தம்மிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பரவிய நுட்பக் கட்டமைப்பே இணையம். இணையம் 1970களில் வடிவமைக்கப்பட்டது. தொடக்ககாலத்தில் பெரும் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுக்கு இடையே மட்டுமே இணையம் இருந்தது. இணையம் ஊடான மின்னஞ்சல் (email), கோப்புப் பரிமாற்றம் (file sharing), பயனர்வலை (Usenet) ஆகியவை ஊடாகத் தகவல் பரிமாற்றம் நடந்தது. இன்று பரவலாக அறியப்பட்ட இணைப்புகளூடான (hyperlink) வலைத்தளங்களை (websites) கொண்ட உலகளாவிய வலை (worldwide web) 1990களில் உருவாக்கப்பட்டது. இது ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வு ஆவணங்களை இலகுவில் பகிர்ந்து கொள்ள உதவும் வண்ணம் உருவாக்கப்பட்டது.

1990களில் உலகளாவிய வலையில் தகவல்களைப் பகிர்வதும், ஊடாடுவதும் நுட்பச் சிக்கல் நிறைந்த ஒரு செயற்பாடாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக தமிழில் வலைத்தளங்கள் உருவாக்குவதோ, தமிழ் வலைத்தளங்களைப் படிப்பதோ பல படிகளைக் கொண்ட ஒரு செயற்பாடாக இருந்தது. ஒரு வலைத்தளத்தை உருவாக்கி கருத்துப் பகிர நிறைய நுட்ப அறிவு தேவைப்பட்டது. வலைத்தளங்கள் வெறுமே நிலையான பக்கங்களை மட்டும் கொண்டிருந்தன, ஊடாட்ட (interactive) வசதிகளைக் கொண்டு இருக்கவில்லை. இந்தக் குறைகளை வலை 2.0 எனப்படும் தொழில்நுட்பங்கள் பூர்த்தி செய்தன. இந்த வளர்ச்சிப் படியில் உருவான நுட்பங்களே வலைப்பதிவு (blog), விக்கி (wiki), மன்றம் (forum) போன்ற வலைச்செயலிகள். இவை பரந்துபட்ட பயனர்கள் இணையம் ஊடாக கருத்துப்பரிமாற, சேர்ந்தியங்க உதவின.

விக்கி எனப்படுவது பொதுவாக மற்றவர்களுடன் கூட்டாக உள்ளடக்கத்தை சேர்க்கவும் மாற்றவும் நீக்கவும் உதவுகின்ற வலைச் செயலி ஆகும். இதில் எளிய குறியீட்டு மொழி அல்லது இணைய உரைத் தொகுப்பான் மூலமாக உரை எழுதப்பட்டிருக்கும்.[1][2] விக்கி என்பது ஒருவகை உள்ளடக்க மேலாண்மை அமைப்பு என்றாலும், வலைப்பதிவு போன்ற பெரும்பான்மையான பிற அமைப்புக்களிலிருந்து வேறானது; இதில் ஆக்கியவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் யாரென்று வரையறுக்கப்படுவதில்லை என்பதும், கட்டமைப்பு முதலிலேயே வரையறுக்கப்படாது பயனர்களின் தேவைக்கேற்ப உருவாகும் தன்மை கொண்டது என்பதும் முதன்மையான வேறுபாடுகளாகும்.[2] வார்டு கன்னிங்காம் என்பார் விக்கி வலைச்செயலியை முதன்முதலில் உருவாக்கியவராக அறியப்படுகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. wiki, 1, London: Encyclopædia Britannica, Inc., 2007, http://www.britannica.com/EBchecked/topic/1192819/wiki, பார்த்த நாள்: April 10, 2008 
  2. 2.0 2.1 Mitchell, Scott (July, 2008), Easy Wiki Hosting, Scott Hanselman's blog, and Snagging Screens, MSDN Magazine, http://msdn.microsoft.com/en-us/magazine/cc700339.aspx, பார்த்த நாள்: March 9, 2010 
  3. Cunningham, Ward (June 27, 2002), What is a Wiki, WikiWikiWeb, http://www.wiki.org/wiki.cgi?WhatIsWiki, பார்த்த நாள்: April 10, 2008