விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/அறிமுகம் (வரைவு 2)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்டு கன்னிங்காம், விக்கியைக் கண்டுபிடித்தவர்

உலகில் உள்ள கணினிகள் எல்லாம் தம்மிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பரவிய நுட்பக் கட்டமைப்பே இணையம். இணையம் 1970களில் வடிவமைக்கப்பட்டது. தொடக்ககாலத்தில் பெரும் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுக்கு இடையே மட்டுமே இணையம் இருந்தது. இணையம் ஊடான மின்னஞ்சல் (email), கோப்புப் பரிமாற்றம் (file sharing), பயனர்வலை (Usenet) ஆகியவை ஊடாகத் தகவல் பரிமாற்றம் நடந்தது. இன்று பரவலாக அறியப்பட்ட இணைப்புகளூடான (hyperlink) வலைத்தளங்களை (websites) கொண்ட உலகளாவிய வலை (worldwide web) 1990களில் உருவாக்கப்பட்டது. இது ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வு ஆவணங்களை இலகுவில் பகிர்ந்து கொள்ள உதவும் வண்ணம் உருவாக்கப்பட்டது.

1990களில் உலகளாவிய வலையில் தகவல்களைப் பகிர்வதும், ஊடாடுவதும் நுட்பச் சிக்கல் நிறைந்த ஒரு செயற்பாடாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக தமிழில் வலைத்தளங்கள் உருவாக்குவதோ, தமிழ் வலைத்தளங்களைப் படிப்பதோ பல படிகளைக் கொண்ட ஒரு செயற்பாடாக இருந்தது. ஒரு வலைத்தளத்தை உருவாக்கி கருத்துப் பகிர நிறைய நுட்ப அறிவு தேவைப்பட்டது. வலைத்தளங்கள் வெறுமே நிலையான பக்கங்களை மட்டும் கொண்டிருந்தன, ஊடாட்ட (interactive) வசதிகளைக் கொண்டு இருக்கவில்லை. இந்தக் குறைகளை வலை 2.0 எனப்படும் தொழில்நுட்பங்கள் பூர்த்தி செய்தன. இந்த வளர்ச்சிப் படியில் உருவான நுட்பங்களே வலைப்பதிவு (blog), விக்கி (wiki), மன்றம் (forum) போன்ற வலைச்செயலிகள். இவை பரந்துபட்ட பயனர்கள் இணையம் ஊடாக கருத்துப்பரிமாற, சேர்ந்தியங்க உதவின.

விக்கி எனப்படுவது பொதுவாக மற்றவர்களுடன் கூட்டாக உள்ளடக்கத்தை சேர்க்கவும் மாற்றவும் நீக்கவும் உதவுகின்ற வலைச் செயலி ஆகும். இதில் எளிய குறியீட்டு மொழி அல்லது இணைய உரைத் தொகுப்பான் மூலமாக உரை எழுதப்பட்டிருக்கும்.[1][2] விக்கி என்பது ஒருவகை உள்ளடக்க மேலாண்மை அமைப்பு என்றாலும், வலைப்பதிவு போன்ற பெரும்பான்மையான பிற அமைப்புக்களிலிருந்து வேறானது; இதில் ஆக்கியவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் யாரென்று வரையறுக்கப்படுவதில்லை என்பதும், கட்டமைப்பு முதலிலேயே வரையறுக்கப்படாது பயனர்களின் தேவைக்கேற்ப உருவாகும் தன்மை கொண்டது என்பதும் முதன்மையான வேறுபாடுகளாகும்.[2] வார்டு கன்னிங்காம் என்பார் விக்கி வலைச்செயலியை முதன்முதலில் உருவாக்கியவராக அறியப்படுகிறார்.[3]

இந்த விக்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைவரும் தொகுக்கக் கூடிய, கூட்டாக உருவாக்கக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆக ஆங்கில விக்கிப்பீடியா சனவரி 2001 இல் தொடங்கப்பட்டது. கட்டற்ற என்பது அதன் திறந்த நிலையை, யாரும் திருத்த, பயன்படுத்தக் கூடிய உரிமையக் குறிக்கிறது. இதனை சிம்மி வேல்சு, லாரி சங்கர் ஆகிய இரு அமெரிக்கர்கள் தொடங்கினார்கள்.

அனைவருடைய சிறிய சிறிய பங்களிப்புக்களைக் கூட இலகுவாக உள்வாங்கக் கூடியதாக இருந்தாலும், அதன் கட்டற்ற தன்மையாலும் ஆங்கில விக்கிப்பீடியா வேகமாக வளர்ச்சி பெறத் தொடங்கியது. தொடங்கிய சிறுது காலத்தில் இருந்தே விக்கிப்பீடியா பன்மொழிகளில் வெளிவரத் தொடங்கியது. மார்ச் 2001 இல் யேர்மன் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த சில மாதங்களில் பல ஐரோப்பிய மொழிகளிலும் சீனம், யப்பானிசு, அரபு, எபிரேயம் ஆகிய மொழிகளிலும் விக்கிப்பீடியா வெளிவந்தது. செப்டம்பர் 2001 இல் விக்கிப்பீடியாவின் பன்மொழிக் கொள்கை உறுதிசெய்யப்பட்டது.

விக்கிப்பீடியா பயன்படுத்திய விக்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலைக்களஞ்சியம் மட்டும் அல்லாமல் பிற கட்டற்ற உள்ளடக்கங்களையும் உருவாக்க முடியும் என்று உணரப்பட்டது. அதன்படி, யாரும் தொகுக்கக் கூடிய, கட்டற்ற, பன்மொழி அகரமுதலியாக விக்சனரி டிசம்பர் 2002 இல் தொடங்கப்பட்டது. விக்கிநூல்கள், விக்கிமேற்கோள்கள், விக்கிமூலம், விக்கிசெய்திகள், விக்கிப்பொதுவகம், விக்கித்தரவுகள், விக்கிப்பல்கலைக்கழகம், விக்கி உயிரினங்கள் உட்பட்ட திட்டங்கள் இவ்வாறு தொடங்கப்பட்டன.

விக்கிப்பீடியாவும் இணைந்த பல திட்டங்களும் வேகமாக வளர்ச்சி பெற்று வந்தாலும் அவற்றை ஒருங்கே பேணி, நெறிப்படுத்த வளங்களும் கட்டமைப்பும் தேவைப்பட்டது. அதே வேளை இந்த வலைத்தளங்களில் விளம்பரங்களைக் காட்டவோ, அல்லது அனுமதியைக் கட்டுப்படுத்தவோ தொடங்கியவர்களோ, திட்டப் பங்களிப்பாளர்களோ விரும்பவில்லை. ஆகவே இத் திட்டங்களைப் பராமரிக்க, வளர்க்க பொறுப்பாக இலாபநோக்கமற்ற தொண்டுநிறுவனமாக விக்கியூடக அறக்கட்டளை (Wikimedia Foundation) 2003 இல் உருவாக்கப்பட்டது. விக்கியூடகம் என்பது விக்கியூடக அறக்கட்டளையின் மேற்குறிப்பிடப்பட்ட செயற்திட்டங்களையே குறிக்கிறது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "wiki", பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், vol. 1, London: Encyclopædia Britannica, Inc., 2007, பார்க்கப்பட்ட நாள் April 10, 2008
  2. 2.0 2.1 Mitchell, Scott (July, 2008), Easy Wiki Hosting, Scott Hanselman's blog, and Snagging Screens, MSDN Magazine, பார்க்கப்பட்ட நாள் March 9, 2010 {{citation}}: Check date values in: |date= (help)
  3. Cunningham, Ward (June 27, 2002), What is a Wiki, WikiWikiWeb, பார்க்கப்பட்ட நாள் April 10, 2008