கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொழும்பு தமிழ் ஆவண மாநாடு 2013 ஐ ஒட்டியதாக, 2013 ஏப்ரல் 25 வியாழன் அன்று நூலக நிறுவனத்தில் "பனையோலை" கருத்தரங்கில் தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டனர்.
மயூரன், மூடிய உள்ளடக்கம் என்றால் என்ன, ஏன் திறந்த உள்ளடக்கம் தேவை என்ற நோக்கில் உரையாற்றினார். சில பத்தாண்டுகளுக்கு முன்பு தண்ணீர் விற்பனைக்கில்லை. இப்போது இருக்கிறது. அதே போல் அறிவும் விரைவில் முழுக்க விற்பனைப் பொருளாகும் அபாயம் உண்டு என்று எடுத்துக்கூறிய உவமை பங்கேற்பாளர்களைச் சென்றடைந்தது.
கோபி, கிரியேட்டிவ் காமன்சு குறித்து விளக்கி, மாணவர்கள் வருங்காலத்தில் உருவாக்கும் ஆக்கங்களைக் கட்டற்றுத் தந்தால் ஆவணப்படுத்தி வைக்க உதவும் என்று விளக்கினார்.
இந்நிகழ்வில் உரையாற்றியோர் அனைவரும் விக்கிப்பீடியர்கள் என்றாலும், இந்நிகழ்வு வழமையான தமிழ் விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டங்களில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. உண்மையில், இதனைத் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம் என்று சொல்ல இயலாது. நூலகம் திட்டம் போன்ற ஒரு திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் விக்கிப்பீடியா போன்ற ஒரு திட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன என்ற நோக்கில் இரவியின் உரை இருந்தது. குறிப்பாக, விக்கிப்பீடியா திட்டங்களில் மாற்றுக் கருத்துகளை முன்வைத்தல், முடிவெடுத்தல், நிருவாகப் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல், கொள்கை உருவாக்கம், பிற நிறுவனங்களுடனான உறவாட்டம் ஆகியவற்றில் எவ்வாறு வெளிப்படைத் தன்மை பேணப்படுகிறது என்றும், இது ஏன் முக்கியம் என்றும் விளக்கப்பட்டது. அடுத்து, தன்னார்வத் திட்டங்களுக்கு எந்தெந்த வகையில் பங்களிப்பாளர்களை ஈர்க்கலாம், தன்னார்வலர் சமூகத்தை எவ்வாறு தக்க வைக்கலாம் என்ற நோக்கில் உரையாடல் நகர்ந்தது.