விக்கிப்பீடியா:இடைச்சொல்
![]() | இந்த பக்கமோ அல்லது பகுதியோ இடைச்சொல் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
இடைச்சொல் (Bound Morph)[தொகு]
முன்னுரை[தொகு]
தொல்காப்பியர் பேசுவதற்கு, எழுதுவதற்குப் பயன்படும் சொற்களை (part of speech) ஐந்தாகக் கூறியுள்ளார். பெயர்ச் சொல், வினைச் சொல், பெயரடைச் சொல், வினையடைச் சொல், இடைச்சொல் ஆகியவற்றை அவர் பேசியுள்ளார்.
இடைச்சொல் இன்னதென்பது[தொகு]
இடைச்சொல் என்பது பெயர், வினை, பெயரடை, வினையடை ஆகிய அடிப்படைப் பொருள் தரும் நான்கு சொற்களைப்போல் (free morphs) தனித்து இயங்குவதாகாது. அது சார்புச் சொல்லாக (bound morph) – இலக்கணப் பொருள் தரும் சொல்லாக (grammatical category) – இயங்கும்.
சார்புச் சொல்லாக அமைவது[தொகு]
பெயர், வினை, பெயரடை, வினையடை ஆகிய நான்கு சொற்களைச் சார்ந்து ஒரு சொல் மற்ற சொல்லோடு இணையுமாறு தொடர் உருவாக்கத்திற்குப் பயன்படுவதைக் காணலாம்.
பெயரைச் சார்ந்து இயங்கல்[தொகு]
பெயரைப் பெயரோடோ, பெயரை வினையோடோ இணைத்துத் தொடர் உருவாக்கத்திற்குப் பயன்படும்.
எ.டு. 1. மரத்துப் பழம் (பெயர் + பெயர்) ---- மரம்(பெயர்) + அத்து(இடைச்சொல்) + பழம்(பெயர்)
2. பழத்தைப் பார்த்தது (பெயர் + வினை) --- பழம்(பெயர்) + அத்து(இடைச்சொல்) +
ஐ(இடைச்சொல்) + பார்த்தது(வினைச்சொல்)
வினையைச் சார்ந்து இயங்கல்[தொகு]
வினையைப் பெயரோடோ, வினையை வினையோடோ, வினையை வினையடையோடோ இணைத்துத் தொடர் உருவாக்கத்திற்குப் பயன்படும்.
எ.டு. 1. வீழ்ந்தது கல் (வினை + பெயர்) --- வீழ்(வினை) + ந்த்(இடைச்சொல்) + அ(இடைச்சொல்) + து(இடைச்சொல்) + கல்(பெயர்)
2. பார்த்தான் பார் (வினை + வினை) --- பார்(வினை) + த்த்(இடைச்சொல்) + ஆன்(இடைச்சொல்) + பார்(வினை)
3. ஓடினார் வேகமாக (வினை + வினையடை) --- ஓடு(வினை) + இன்(இடைச்சொல்) + ஆர் (இடைச்சொல்) + வேகமாக(வினையடை)
பெயரடையைச் சார்ந்து இயங்கல் [தொகு]
பெயரடையைப் பெயரோடு இணைத்துத் தொடர் உருவாக்கத்திற்குப் பயன்படும்.
எ.டு. நல்ல யானை (பெயரடை + பெயர்) --- நல்(பெயரடை) + ல்(இடைச்சொல்) + அ(இடைச்சொல்) + யானை(பெயர்)
வினையடையைச் சார்ந்து இயங்கல்[தொகு]
வினையடையை வினையோடு இணைத்துத் தொடர் உருவாக்கத்திற்குப் பயன்படும்.
எ.டு நாய் வேகமாகவும் மெதுவாகவும் ஓடியது ---வேகமாக மெதுவாக ஆகிய வினையடைகள் ஓடியது என்ற வினைச்சொல்லோடு இணைகின்றன. அவ்வினையடைகள் இணையும்போது உம் என்னும் இடைச்சொல் உடன்வந்து சேர்ந்து தொடர் உருவாக்கத்திற்குப் பயன்படுகின்றது.
1. வேகமாகவும் + ஓடியது --- வினையடை வினைச்சொல்லொடு குறிப்பிட்ட தொடர்ப் பொருளில்(வெளிப்படைப் பொருள் + குறிப்புப் பொருள் + இலக்கணப் பொருள்) சேர்வதற்கு வேகமாகவும் என உம் இடைச்சொல் தேவையாகிறது.
2. மெதுவாகவும் + ஓடியது --- வினையடை வினைச்சொல்லொடு (வெளிப்படைப் பொருள் + குறிப்புப் பொருள் + இலக்கணப் பொருள்) சேர்வதற்கு மெதுவாகவும் என உம் இடைச்சொல் தேவையாகிறது.
இலக்கணப் பொருள் தரும் சொல்லாக அமைவது.[தொகு]
இலக்கணப் பொருள் என்பது என்ன என்பது ஆராய்வதற்குரியது.
எ.டு. தோழி வந்தாள்
இவ்வாக்கியமானது, தோழி என்னும் பேச எடுத்து கொண்ட பொருள் வருதல் என்னும் வினையை நிகழ்த்தியுள்ளது என்னும் முடிந்த பொருளைத் தருகின்றது.
தோழி என்னும் பேச எடுத்து கொண்ட பொருள் பெயர்ச்சொல் என்றும் அது வாக்கியத்தினுடைய எழுவாய் என்றும் விளக்கமுடியும்.
’தோழி’ என்பது பெயர்ச்சொல் என்பதும் எழுவாய் என்பதும் தோழி என்ற சொல்லின் இலக்கணப் பொருள் (grammatical meaning) ஆகும். தோழி என்ற சொல்லிற்கு இவ் இலக்கணப் பொருள் மட்டும் அல்லாமல் வேறுபொருள்களும் உண்டு. அவ் வேறுபொருள் என்பது கருத்துப் பரிமாற்றம் சார்ந்த பொருளாகும். அவை இரண்டு வகைப்படும். அவையாவன:
1. வெளிப்படைப் பொருள் (lexical meaning)
2. குறிப்புப் பொருள் (hidden meaning)
1.வெளிப்படைப் பொருள் (lexical meaning)
வெளிப்படைப் பொருளை, அடிப்படைப் பொருள் என்றும் இடுகுறிப் பொருள் என்றும் கூறுவதுண்டு. தோழி என்ற சொல்லின் வெளிப்படைப் பொருள் (lexical meaning) என்பது ”நட்புக் கொண்ட பெண் மனிதர்” என்பதாகும்.
2.குறிப்புப் பொருள் (hidden meaning or implied sense)
பரணர் அகப் பாடல்களும் பாடியுள்ளார் என்னும்போது, ’அகப் பாடல்களும்’ என்னும் தொடர், வாக்கியத்தில் குறிப்புப் பொருளைத் தோற்றுவிக்கிறது. அக் குறிப்புப் பொருளைப் பின்வருமாறு விளக்கலாம். பரணர் புறப் பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்புப் பொருள் ஆகும்.
பின்வரும் எடுத்துக்காட்டுக்கள் கருதத் தக்கவை ஆகும்.
எடு. கந்தன் நாயைப் பார்த்தான் --- வாக்கியம் 1
நாய் கந்தனைப் பார்த்தது --- வாக்கியம் 2
வாக்கியம் ஒன்றானாலும் வாக்கியம் இரண்டானாலும் தனித்தனியே ஒவ்வொரு வாக்கியத்திலும் பேசப்பட்ட வெளிப்படைப் பொருள்கள் மூன்றாகும். அவையாவன:
1.கந்தன் – கந்தன் என்ற பெயரைத் தாங்கிய ஆண்மகன்
2.நாய் – நான்கு கால் உள்ள, ஒரு வால் உள்ள, நன்றியறிதல் உள்ள விலங்கு
3.பார்த்தல் – காணுதல் என்ற செயலைப் புரிதல்
வாக்கியம் 1-ஆனாலும், வாக்கியம் 2-ஆனாலும் கந்தன், நாய், பார்த்தல் ஆகிய மூன்று வெளிப்படைப் பொருளை – அடிப்படைப் பொருளைத் - தரும் சொற்கள் மட்டுமே வந்துள்ளன. ஆனால், சுட்டப்பட்ட இரண்டு வாக்கியங்களும் வேறுபட்ட கருத்துப் பரிமாற்றப் பொருளைத் தருகின்றன. ஒரே கருத்துப் பொருளைத் தரவில்லை. ஏனென்றால், வாக்கியம் 1-இல் வந்துள்ள தொடர்களும் அவை தரும் பொருள்களும் வாக்கியம் 2-இல் வந்துள்ள தொடர்களும் அவை தரும் பொருள்களும் ஒத்தவை அல்ல. மாறுபட்டவை ஆகும். இத்தொடர்ப் பொருள் வேறுபாட்டிற்குப் பயன்பட்டு வருவது இடைச்சொல்லே ஆகும்.
கந்தன் நாயைப் பார்த்தான் --- வாக்கியம் 1
வாக்கியம் 1-இல் 1.கந்தன் 2.நாய் 3.பார்த்தல் என்ற மூன்று பொருள்கள் இருந்தாலும்
வேறுபடும் தொடர்ப் பொருள்கள் எவை என்பது ஆராயத்தக்கது.
வாக்கியம் 1-இல் காணப்படும் தொடர்ப் பொருள்களாவன:
1.கந்தன் பார்த்தான் --- தொடர் 1
2.நாயைப் பார்த்தான் --- தொடர் 2
கந்தன் பார்த்தான் --- தொடர் 1 - எழுவாய்ப் பயனிலைத் தொடர். நாயைப் பார்த்தான் ---தொடர் 2 - செயப்படுபொருள் பயனிலைத் தொடர்
நாய் கந்தனைப் பார்த்தது --- வாக்கியம் 2
வாக்கியம் 2-இல் 1.நாய் 2.கந்தன் 3.பார்த்தல் என்ற மூன்று பொருள்கள் இருந்தாலும் தொடர்ப் பொருள்கள் வேறுபடுகின்றன.
வாக்கியம் 2-இல் காணப்படும் தொடர்ப் பொருள்களாவன:
1. நாய் பார்த்தது --- தொடர் 1
2. கந்தனைப் பார்த்தது --- தொடர் 2
நாய் பார்த்தது என்னும் தொடர் 1 எழுவாய்ப் பயனிலைத் தொடர் ஆகும். கந்தனைப் பார்த்தது என்னும் தொடர் 2 செயப்படுபொருள் பயனிலைத் தொடர் ஆகும்.
சுட்டப்பட்ட இரண்டு வாக்கியங்களிலும், கந்தன், நாய், பார்த்தல் ஆகிய மூன்று வெளிப்படைப் பொருள்கள் வந்துள்ளன என்றாலும் அவ்விரண்டு வாக்கியங்களிலும் தொடர்ப் பொருள்கள் ஒத்து அமையவில்லை அவ்வேறுபாட்டை இரண்டு தொடர்களையும் ஒப்பிட்டுக் காணலாம்
கந்தன் பார்த்தான் --- வாக்கியம் 1-இன் தொடர் 1
நாய் பார்த்தது ---- வாக்கியம் 2-இன் தொடர் 1
வாக்கியம் 1-இன் தொடர் 1-இல் எழுவாய்ப் பயனிலைத் தொடர் இருந்தாலும் எழுவாய் என்பது கந்தன் ஆகும்.
வாக்கியம் 2-இன் தொடர் 1-இல் எழுவாய்ப் பயனிலைத் தொடர் இருந்தாலும் எழுவாய் என்பது நாய் ஆகும்
இவ்வாறு இரண்டு தொடர்களிலும் எழுவாய் வேறுபடுவதால் தொடர்ப் பொருள்களும் வேறுபட்டுவிடுகின்றன.
வாக்கியம் 1-இன் தொடர் 2-இல் செயப்படு பொருள் பயனிலைத் தொடர் இருந்தாலும் செயப்படு பொருள் என்பது நாய் ஆகும்.
வாக்கியம் 2-இன் தொடர் 2-இல் செயப்படு பொருள் பயனிலைத் தொடர் இருந்தாலும் செயப்படு பொருள் என்பது கந்தன் ஆகும்.
நாயைப் பார்த்தான் --- வாக்கியம் 1-இன் தொடர் 2
கந்தனைப் பார்த்தது ---- வாக்கியம் 2இன் தொடர் 2
இவ்வாறு இரண்டு தொடர்களிலும் செயப்படுபொருள் வேறுபடுவதால் தொடர்ப் பொருள்களும் வேறுபட்டுவிடுகின்றன.
எழுவாய்ப் பயனிலை உறவுநிலைத் தொடரும் செயப்படு பொருள் பயனிலை உறவுநிலைத் தொடரும் உறவுநிலையிலும் பொருள் நிலையிலும் வேறுபட்டனவாகும். இவ்வேறுபாட்டை உணர்த்துவதற்கு இடைச்சொல் பயன்படுவதாகும். எழுவாய்ப் பயனிலை உறவுநிலைத் தொடரிலும், செயப்படு பொருள் பயனிலை உறவுநிலைத் தொடரிலும் ஒரு குறிப்பிட்ட பெயர்ச்சொல்லே எழுவாயாகவும் செயப்படு பொருளாகவும் நிற்க வாய்ப்புண்டு அவ்வேளையில் அக்குறிப்பிட்ட பெயர்ச்சொல் எழுவாய் நிலையில் இருந்து செயப்படு பொருள் நிலைக்கு வரும்போது அதனை உணர்த்துவதற்கு ”ஐ” என்னும் இடைச்சொல் பயன்படுத்தப்படும். இவ்விடத்தில் கருதப்படும் பொருளே இலக்கணப் பொருளாகும்.
இடைச்சொல்லின் வகைகள்:[தொகு]
தொல்காப்பியர் இடைச்சொல்லை ஏழு வகைப்படுத்திப் பேசுகிறார். அவையாவன:
1. புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவுவன
2. வினைசெயல் மருங்கின் காலமொடு வருவன
3. வேற்றுமை உருபுகள்
4. அசைநிலைக் கிளவிகள்
5. இசைநிறைக் கிளவிகள்
6. தத்தம் குறிப்பின் பொருள் செய்வன
7. ஒப்பில் வழியால் பொருள் செய்வன
புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவுவன[தொகு]
ஒரு சொல் இன்னொரு சொல்லோடு சேரும்போது இடையில் தோன்றும் எழுத்துக்களோ ஒரு வாக்கியம் இன்னொரு வாக்கியத்தோடு பொருள் தொடர்புபடச் சேரும்போது இடையில் அமையும் சொற்களோ புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவுவன ஆகும்.
இப்பிரிவில் மேலும் மூன்று உட்பிரிவுகள் உள்ளன.
1. சாரியைகள் 2. பயன்படு எழுத்துக்கள் 3. இணைப்பு இடைச்சொற்கள் (Conjunction)
வினைசெயல் மருங்கின் காலமொடு வருவன[தொகு]
வினைச்சொல்லில் செயலை உணர்த்தும் முதல் நிலையோடு சேர்ந்து வரும் பிற பகுதிகள் இப்பிரிவில் அடங்குவனவாகும்.
இப்பிரிவில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன.
1. காலம் 2. காலமுன் 3. காலப்பின்
காலப்பின் என்ற பிரிவில் மேலும் இரண்டு பிரிவுகள் அமைகின்றன.
1. சில்லெழுத்து 2. இறுதிநிலை
வேற்றுமை உருபுகள் (prepositions)[தொகு]
பெயர் வினை உறவுநிலையே வேற்றுமை (case) எனப்படும். இவ்வுறவு நிலைகள் ஏழு வகைப்படுத்தப்படுவதால் வேற்றுமையின் வகைகள் ஏழாகின்றன. ஆனால் முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை. தொல்காப்பியர் உருபு உள்ள, இரண்டாம் வேற்றுமைமுதல் ஏழாம் வேற்றுமைவரை அமையும் வேற்றுமைகளுக்கு மட்டுமே வேற்றுமைத் தொடர் கூறியுள்ளார். இவ்வாறாக அவர் கூறும் வேற்றுமைத் தொடர்கள் ஆறு ஆகின்றன. இவை புணரியல் நிலையில் பெரிதும் ஒத்த நிலை உடையனவாக அமைவனவாகும்.
(இரண்டாம் வேற்றுமைத் தொடர்)
உருபு – ஐ
(மூன்றாம் வேற்றுமைத் தொடர்)
உருபுகள் – ஆல் ஆன் ஒடு ஓடு
வேற்றுமை உருபுகள் (நான்காம் வேற்றுமைத் தொடர்)
உருபு – கு
உறவு நிலைத் தொடர்
(ஐந்தாம் வேற்றுமைத் தொடர்)
உருபுகள் – இன், இல்
(ஆறாம் வேற்றுமைத் தொடர்)
உருபுகள் – அது, உடைய
உறவு நிலைத் தொடர்
(ஏழாம் வேற்றுமைத் தொடர்)
உருபுகள் – இல், இன், கண், கால், உள், கீழ்,
மேல், முன், பின், முதல், இடை, கடை
முதலியன
இவ்வாறாக இரண்டுமுதல் ஏழுவரை அமையும் வேற்றுமைத் தொடர்களும் அவற்றில்
பயன்பட்டுவரும் உருபுகளும் விளக்கிக்காட்டப்பட்டுள்ளன.
அசைநிலைக் கிளவி[தொகு]
இடம் நிரப்பு அல்லது அசை, சீர் நிரப்பு என்னும் நிலையில் அமையும் சொல்லே அசைநிலைக் கிளவி என்பதாகும்.
எ.டு. “பெயரின் ஆகிய தொகையுமார் உளவே” (தொல்காப்பியம்,551:1)
இங்குத் தொல்காப்பியரால் ’ஆர்’ என்னும் இடைச்சொல் அசை நிரப்பாகக் கையாளப்பட்டுள்ளது.
அது நிரையொன்றாசிரியத் தளை அமைப்பதற்குப் பயன்பட்டு வந்துள்ளது.
இசைநிறைக் கிளவி[தொகு]
உணர்ச்சியைக் காட்டும் ஒலிக் குறிப்புச் சொல்லாக அமைவதாகும்.
எ.டு. ஓ! எவ்வளவு பெரிய மலை!
தத்தம் குறிப்பின் பொருள் செய்வன[தொகு]
பெயர் அல்லது வினை அல்லது வினையடையைச் சார்ந்து கூடுதல் பொருள் தருவதாகும். வாக்கியத்தின் இறுதிச் சொல்லோடு சேர்ந்து ஒரு வகை சார்ந்த வாக்கியத்தை இன்னொரு வகை சார்ந்த வாக்கியமாக மாற்றக் கூடியதாகும்.
பெயரைச் சார்ந்து இயங்கல்[தொகு]
எ.டு. முருகனே வந்தான்
வினையைச் சார்ந்து இயங்கல்[தொகு]
எ.டு. வந்தானே அவன்
வினையடையைச் சார்ந்து இயங்கல்[தொகு]
எ.டு. வேகமாகவே ஓடினார்.
ஒரு வகை சார்ந்த வாக்கியத்தை இன்னொரு வகை சார்ந்த வாக்கியமாக மாற்றுதல்[தொகு]
எ.டு. 1. வள்ளி பாடினாள். (செய்தி வாக்கியம்)
2. வள்ளி பாடினாளா? (வினா வாக்கியம்)
ஒப்பில் வழியால் பொருள் செய்வன[தொகு]
ஒப்புமைப் பொருளுக்கு உரியதைப் போலத் தோன்றினாலும், ஒப்புமைக்கு உரியதாகாச் சொற்கள் வெளிப்படைப் பொருளுக்கு உரிய பொருளைத் தாராமல் வேறு கூடுதல் பொருள் தந்து நிற்கும்போது ஒப்பில் வழியால் பொருள் செய்வன ஆகும்.
எ.டு. 1. வள்ளி பாடினாள் போலும்.
2. நாய் ஓடியது போல.
நிறைவுரை[தொகு]
இக் கட்டுரையில் இடைச்சொல் இன்னது என்பது பற்றியும் இடைச்சொல்லின் சார்புப் பொருள் பற்றியும் அதன் இலக்கணப் பொருள் பற்றியும் அதன் ஏழு வகைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன.