விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு51

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிப்பீடியாவில் மாணவர்கள்?[தொகு]

சில நாட்களாக, புதிய பயனர்களும் ஐபிகளும் சட்டம், மனித உரிமை குறித்தான கட்டுரைகளை உருவாக்கி வருகின்றனர். எ. கா. இந்தியாவில் வாழும் உரிமை, குழந்தைத் தொழிலாளர் தினம், பிஜோ எம்மனுவேல் எதிர் கேரள மாநிலம், கல்வி பயிலும் உரிமை, இந்தியாவில் சட்ட உதவி பெறும் உரிமை, கைது செய்யப்படுபவருக்கான உரிமைகள் போன்றவை. ஏதோ ஒரு கல்லூரியில்/அமைப்பில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை விக்கியில் பங்களிக்க ஊக்குவிக்கின்றார்கள் / வீட்டுப் பாடம் தருகின்றார்கள் என நினைக்கிறேன். வழக்குகளைப் பற்றி தெளிவான விளக்கங்கள் இவற்றில் உள்ளதால் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று ஊகிக்கிறேன். இது குறித்து யாரும் ஏதாவது கேள்விப்பட்டீர்களா?. --சோடாபாட்டில்உரையாடுக 07:52, 29 மார்ச் 2011 (UTC)

நல்லது. அவர்களிடம் ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967 போன்ற சட்டத்துறைக் கட்டுரைகளை மேம்படுத்தி உதவுமாறு கேட்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 11:42, 29 மார்ச் 2011 (UTC)
  • சென்னையில் நடைபெற்ற விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு விழா மற்றும் தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீட்டு விழாவில் சென்னை சட்டக் கல்லூரியில் துணைப் பேராசிரியராக இருக்கும் நண்பர் சக்திவேல் என்பவர் கலந்து கொண்டார். அவருக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வேண்டுமென்கிற ஆர்வம் அதிகமிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. முன்பின் பழக்கமில்லாததால் நாங்கள் எவ்வளவோ மறுத்தும் எனக்கும் சில நண்பர்களுக்கும் இரவு நேர உணவிற்கான செலவை முழுமையாக அவர்தான் ஏற்றுக் கொண்டார். அவரிடம் சட்டம் குறித்த கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் குறைவாக இருக்கிறது, அதைத் தாங்கள் எழுதலாமே என்று கேட்டுக் கொண்ட போது எழுதலாம் என்று தெரிவித்தார். நண்பர் பரிதிமதியிடம் அவருடைய தொலைபேசி எண் இருக்கிறது. அவரைத் தொடர்பு கொண்டு சட்டக் கல்லூரியில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்த முயற்சிக்கலாம். அங்குள்ள மாணவர்கள் வழியாக சட்டம் குறித்த பல கட்டுரைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பொதுவாக சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் இலக்கிய ஆர்வம் அதிகம் இருக்கும் (கருத்துதான்) என்பார்கள். நண்பர் பரிதிமதி சென்னையில் இருப்பதால் முயற்சித்துப் பார்க்கலாம். நண்பர் பரிதிமதி ஆசிரியராக இருப்பதால் பள்ளித் தேர்வுகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள் போன்றவை முடிந்த பின்பு இதற்காக முயற்சிக்கலாம்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:49, 29 மார்ச் 2011 (UTC)


சட்டக் கல்லூரி தமிழிலா, ஆங்கிலத்திலா ?
சட்டக் கல்லூரியில் பயிற்றுவிக்கும் மொழி தமிழில் இருந்தாலும் சரி ஆங்கிலத்தில் இருந்தாலும் சரி. ஆனால் அங்கே படிக்கும் மாணவர்கள் பலருக்கு (90 சதவிகிதத்திற்கும் மேல்) தமிழ் மொழி தெரியும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:09, 30 மார்ச் 2011 (UTC)

கடைசியாகப் பதிவேறிய கட்டுரையில் அதை எழுதியவர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி என்ற குறிப்புள்ளது. இதன் கீழ் வரும் கல்லூரிகளில் சென்னை சட்டக்கல்லூரியும் உள்ளது. பேரா. சக்திவேலின் தொடர்பு எண் இருந்தால் உறுதிசெய்யவேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 13:54, 4 ஏப்ரல் 2011 (UTC)

காப்புநிலை[தொகு]

உயிரினங்களின் காப்பு நிலை தொடர்பான சில கட்டுரைகளைப் பார்த்ததுடன், சில தொகுப்புக்களையும் செய்து வருகின்றேன். காப்புநிலையைக் குறிப்பதற்கான ஒரு வார்ப்புருவையும் தயார்ப்படுத்தினேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட காப்புநிலைக்கு, த.வி. யில் பல இடங்களில் தமிழாக்கம் வெவ்வேறாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. பல காப்புநிலைகளுக்கிடையிலும், மிக அதிக வேறுபாடுகள் இன்மையால், தமிழாக்கம் செய்யும்போது, ஒரு பொதுமைப்படுத்தல் இல்லாமல் போவதை உணர முடிகின்றது. அதனால் இந்த பொதுமைப்படுத்தலை ஏற்படுத்துவது நல்லது எனத் தோன்றுகின்றது. வார்ப்புரு:Taxobox இல் தமிழாக்கம் இடம்பெற்றிருப்பினும், அவை சரியாக த.வி யின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி குறிப்பிடப்படவில்லை என நினைக்கின்றேன். எடுத்துக்காட்டாக Vulnerable = VU என்பது வார்ப்புரு:Taxobox இல் அழிவாய்ப்பு இனம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு விலங்கின் கட்டுரைப் பக்கத்தில் அது ஊறுபடத்தக்க நிலை என்று இருந்தது. இதனை பொதுமைப்படுத்தாவிட்டால் அது எந்நிலை என அறிந்து கொள்ளல் சிரமமாகும். எனவே அதனை பொதுமைப்படுத்த உதவுங்கள். சிவப்புப் பட்டியல் பக்கத்தில், முக்கியமான 9 காப்புநிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் தமிழ்ப் பெயர்கள் சரியா எனப் பார்த்துக் கூறுங்கள். இவை வார்ப்புரு:Taxobox இல் உள்ள தமிழாக்கத்தில் இருந்து சிறிது வேறுபட்டுள்ளது. உதாரணமாக, Conservation Dependant என்பதற்கு காப்பு நிலையைப் பொருத்தது என்பதைவிட பாதுகாக்கப்படும் நிலையிலுள்ள இனம் எனக்கூறுவது பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகின்றது. எனவே தயவுசெய்து சிவப்புப் பட்டியல் பக்கத்தைப் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களைக் கூறினால், அந்த மாற்றங்களை வார்ப்புரு:Taxobox இலும் செய்வது நல்லது எனத் தோன்றுகின்றது. தங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கின்றேன். நன்றி.--கலை 23:23, 29 மார்ச் 2011 (UTC)

சுந்தர் இது தொடர்பான தனது கருத்தை பேச்சு:சிவப்புப் பட்டியல் இல் கொடுத்துள்ளார். மற்றவர்களும் அங்கேயே கொடுத்தால் நல்லது. நன்றி. --கலை 11:09, 30 மார்ச் 2011 (UTC)

2011 தமிழகப் பொதுத் தேர்தல்[தொகு]

தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டப்பேரவைக்கானப் பொதுத்தேர்தலையொட்டி பல கட்டுரைகள் ஆக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து ஓர் வலைவாசல் அமைக்கலாம். துடுப்பாட்ட உலகக்கிண்ணம் முடிவடைந்த நிலையில் முதற்பக்கத்தில் செய்திகளில் அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்த வலைவாசலுக்கு தொடுப்புத் தர வேண்டும். --மணியன் 03:24, 3 ஏப்ரல் 2011 (UTC)

எழுத்துப் பெயர்ப்பு வசதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ?[தொகு]

சில ஐ.பிகள் ஆங்கில உரையை வெட்டி ஒட்டி தமிழ் எழுத்துபெயர்ப்பை தெரிவு செய்து பதிகிறார்கள். இதை தடுக்க வியலுமா ? இந்த எழுத்துபெயர்பு வசதியை விருப்பத் தேர்வாக்குவது தீர்வாகுமா ?--மணியன் 06:19, 3 ஏப்ரல் 2011 (UTC)

இது push translation tactics ஆல் வரும் பக்கவிளைவு. பலர் தங்கள் பிரிய கட்டுரையை அதிகமான விக்கிகளில் இடம்பெறச் செய்வது போட்டியாக உள்ளது. (சிலி மொழி விக்கியில் இந்தப் பழக்கம் பெரிய பிரச்சனை). ஏதேனும் ஒரு குப்பை வடிவில் ஒரு கட்டுரையை உருவாக்கி விட்டால், அந்தந்த விக்கிக்காரர்கள் அதை சரி செய்துவிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் இது நடக்கிறது. எழுத்துப்பெயர்ப்பு வசதியை விருப்புத் தேர்வாக்குவதற்கு பதில், இத்தகு கட்டுரைகளை சரிசெய்யாமல் உடனடியாக நீக்கி விட்டால், பின் இதுபோல நடக்காது. நான் சிறிது காலமாக இதை செய்து வருகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:30, 3 ஏப்ரல் 2011 (UTC)
மேலும் நாம் இங்கு இந்த வசதியை எடுத்தாலும் பிற எழுத்துப்பெயர்ப்பு தளங்களைக் (கூகுள் போல) கொண்டு இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். எனவே கண்டவுடன் நீக்குவது தான் இதற்கு உகந்த எதிர்வினை--சோடாபாட்டில்உரையாடுக 06:49, 3 ஏப்ரல் 2011 (UTC)
அப்படியே செய்வோம்.--மணியன் 08:04, 3 ஏப்ரல் 2011 (UTC)
அப்படியே செய்துள்ளேன்:)--Kanags \உரையாடுக 09:14, 3 ஏப்ரல் 2011 (UTC)

முதற்பக்கப் படிமங்கள்[தொகு]

முதற்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள பொதுப் படிமங்கள் எனது கணினியில் தெரியவில்லை. வேறு யாருக்கும் தெரியவில்லை என்றால் இவற்றைத் தற்காலிமாக தமிழ்விக்கியில் தரவேற்றலாமா?--Kanags \உரையாடுக 09:14, 3 ஏப்ரல் 2011 (UTC)

காமன்சில் சில நாட்களாக இந்த வழு உள்ளது. சரி செய்ய விக்கிமீடியா நிரலாளர்கள் முயன்று வருவதாக விக்கிமீடியா தலைமை தொழில்நுட்ப அதிகாரி டானீசு கூப்பர் அறிவித்துள்ளார். அதுவரை தற்காலிகமாக த.விக்கியில் ஏற்றிவிடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 09:31, 3 ஏப்ரல் 2011 (UTC)

HotCat[தொகு]

HotCat கருவி வேலை செய்யவில்லை.--Kanags \உரையாடுக 12:43, 5 ஏப்ரல் 2011 (UTC)

எனக்கும் வேலை செய்யவில்லை. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 14:58, 5 ஏப்ரல் 2011 (UTC)
என் விருப்பத்தேர்வுகள் வழியாகத் தெரிவு செய்தால் வேலை செய்யவில்லை. மீடியாவிக்கி வழு போல் உள்ளது. சரியாகும் வரை அவரவர் vector.js இல் பின்வரும் நிரல் துண்டை ஒட்டினால் திரும்ப வரும்.

importScript('MediaWiki:Gadget-HotCat.js'); --சோடாபாட்டில்உரையாடுக 16:24, 5 ஏப்ரல் 2011 (UTC)

எதுவும் செய்யாமலேயே தற்போது வேலை செய்கிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:13, 6 ஏப்ரல் 2011 (UTC)

விக்கிபீடியா விமர்சனங்கள்[தொகு]

விக்கிபீடியா என்பது கட்டற்ற கலைக்களஞ்சியம். ஆங்கிலத்தில் எந்த ஒரு பெயர் அல்லது தலைப்பு கொண்டு தேடினால், அந்த தலைப்பு தொடர்பான முழு தகவல்களும் அக்குவேறு ஆணிவேறாக கிடைத்துவிடுகின்றன. தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள மேற்கோள்கள் வழங்கபடுகின்றன. ஒன்றின் வெற்றி தோழ்வி இரண்டும் எழுதப்படுகின்றன. ஒரு விஷயம் தொடர்பான கருத்து எதிர்கருத்து இரண்டும் உள்ளன. முடிந்தவரையில் பக்கசார்பு இல்லாமல் உள்ளன. அதேமாதிரி தமிழில் விக்கிபீடியா இருப்பதைப் பார்க்கவும் மிகவும் சந்தோசமாக உள்ளது. தமிழில் தேடும் போது ஆங்கிலம் மாதிரியே, ஒவ்வொரு விஷயம் தொடர்பிலும் அக்குவேறு ஆணிவேறு என்று முழுதகவலும் கிடைத்தால் எல்லோரும் எவ்வளவு பிரயோசனம் அடைவார்கள்?

இதனை நினைத்தவுடன் எனக்கு விக்கிபீடியாவில் எழுதவோணும் என்று நினைவு வந்துள்ளது. அதற்கு முன் இங்குள்ள நண்பர்கள் என்னென்ன எழுதியிருக்கிறார்கள், எப்படி எழுதியிருக்கிறார்கள், பேச்சு பக்கம், வரலாறு பக்கம் எல்லாவற்றையும் வாசித்து வருகிறேன். இதுவரை தமிழ்க் கட்டுரைகள்: 29,895 என்று போட்டிருக்கிறது. இதில் ஒரு 200 கட்டுரையையாவது வாசித்துவிட்டு எழுதினால் தான், மற்ற நண்பர்கள் மாதிரி எனக்கு எழுதமுடியும் இல்லையா? அதனால் வாசிக்கிறேன். கொஞ்சம் இந்த விக்கிபீடியா பற்றி தெரிந்துகொண்ட பின் நானும் நிறைய எழுதுவேன்.

ஆலமரத்தடி ஒன்றும் இருக்குது. இங்கே சந்தேகங்களை கேட்கலாம் என்று பார்த்தேன். எனக்கும் கொஞ்சம் சந்தேகங்கள் இருக்குது அதை நான் இங்கே கேட்கலாமா? - மொஹமட்

கொள்கையளவிலான ஐயங்களை (ஏன் இப்படி உள்ளது, இப்படி மாற்றினால் என்ன போன்றவை) இங்கும், செய்முறை ஐயங்களை (எப்படி செய்வது போன்றவை) ஒத்தாசைப் பக்கத்திலும் கேட்கலாம்--சோடாபாட்டில்உரையாடுக 05:39, 6 ஏப்ரல் 2011 (UTC)

1. பதக்கம் கொடுத்தல்[தொகு]

கட்டுரைகள் பார்க்கும் போது ஆயிரத்திற்கும் மேல் நண்பர்கள் இங்கே எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். சிலர் ஆயிரக் கணக்கில் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் பயனர் பக்கம் பதக்கம் கொடுத்திருக்குது. அது ஒரு நண்பர் ஆயிரம் கட்டுரை எழுதியதற்கு கொடுத்து மைல்கல் பதக்கம். அதுக்கு ஒரு பெருமை இருக்கு. கௌரவமும் இருக்கு. போன வருஷம் இருந்து கொடுத்து வரும் பதக்கங்கள் எந்த அடிப்படையில், எந்த தகுதி அடைப்படையில் கொடுக்கிறாங்கள் ஒன்றும் விளங்கவில்லை. வலைப்பூவில் நிறைய பதக்கங்கள் நண்பர்கள் கொடுத்து கொள்கிறார்கள். அது எந்த தகுதியின் அடிப்படையிலும் இல்லை. சும்மா நண்பர்களிடையே சந்தோஷ்த்திற்கு கொடுத்து கொள்கிறார்கள். மொண்டொசோரி பாடசாலைகளில் சின்னபுள்ளைகளுக்கு டொப்பி கொடுப்பது மாதிரி இங்கே நண்பர்கள் சிலருடைய பயனர் பக்கம் பதக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். இதுவும் அப்படி தானா?

(இதை பார்த்தவுடன் தான் நானும் நண்பர் சோடாபாட்டில் ஒரு பதக்கம் வெட்டி ஒட்டினேன். அதன் பின் அவர் நடந்து கொண்ட விடயம், பண்பின் உயர்ந்தவராக தெரிந்தார்.)

பதக்கம் பெறுவதற்கு ஒரு தகுதியும் கொடுப்பவருக்கு ஒரு தகுதியும் இருக்குது. இங்கே ஒருவர் பதக்கம் பெருவதற்கான என்னென்ன தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன? பதக்கம் பெறுபவரைத் தவிர கொடுப்பவருக்கு ஒரு தகுதி உள்ளது. இங்கே பதக்கம் கொடுப்பவருக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என விக்கிபீடியா நண்பர்கள் கொள்கை வைத்துள்ளீர்கள்?

ஆங்கில விக்கிபீடியாவின் லோகோவை [1] தமிழ் விக்கிபீடியாவில் இட்டு, பாமினி எழுத்தில் விக்கிப்பீடியா என்று மற்றம் செய்தமைக்கு ஒரு பதக்கம் கொடுக்கப்பட்டிருக்குது. இங்கே பதக்கம் மலிந்து விட்டதா? வலைப்பூவைக்களில் கூட இவ்வாறு கொடுத்துக்கொள்வதில்லை. ஒருவரை உற்சாகப்படுத்துவதற்கு உற்சாக வார்த்தைகள், புரிந்துணர்வுகள், ஊக்குவிப்புகள் அவசியம். அதற்கு பதக்கம் வழங்கி பதக்கத்தை மலிவாக்கிவிடக்கூடாது.

(செல்வா எனும் பேராசிரியர் சிலர் பயனர் பக்கம் பதக்கம் கொடுத்திருக்கிறார். அவ்வாறனவர்கள் பதக்கம் கொடுக்கும் தகுதி பெற்றவர்கள். சிறிபிள்ளை தனமாக பதக்கங்கள் வழங்கும் குணவான்கள் மலியும் போது, பதக்கம் வழங்கும் தகுதியுடையோர் இதனை செய்யவே தயங்கிவிடுவார்கள்.) - மொஹமட்


பதக்கங்கள் மற்றவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பயனர்கள் அளித்துக்கொள்பவை. அவற்றுக்கென அதிகாரப்பூர்வ கொள்கை/தகுதி என்று எதுவும் கிடையாது. கொடுப்பதற்கும் எத்தகுதியும் கிடையாது. இது ஒரு ஊக்க முயற்சி அவ்வளவே. யார் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் (இங்கு மட்டுமல்ல, அனைத்து விக்கிதிட்டங்களிலும் அப்படித் தான்). ஒருவர் செய்யும் பணி இன்னொருவருக்கு சிறப்பாகப் பட்டால், தனது பாராட்டை பதக்கங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். இது தனிப்பட்ட முறையில் ஒரு பயனர் மற்றொரு பயனருக்கு அளிக்கும் பாராட்டு போன்றதே. விக்கிப்பீடியா சின்னத்தை இற்றைப்படுத்தல் கடினமான காரியம் என்று நான் கருதுகிறேன். செய்தவர்கள் வேலை மெனகெட்டு பல நாட்கள் நிலுவையில் இருந்த அப்பணியை ஏற்று செய்துள்ளார்கள். பதக்கம் கொடுத்த என் பார்வையில் அவர்கள் முழுத்தகுதியானவர்கள். பதக்கம் என்றால் உங்கள் பார்வையும் என் பார்வையும் வேறு படுகின்றன அவ்வளவே. உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் பதக்கத்தை அளிக்காதீர்கள். அதற்காக அளிப்பவர்களை வேண்டாம் என்றும் தடுக்காதீர்கள்.
உங்களைப் பல முறை கிண்டலடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளேன் (”சின்னபுள்ளைகளுக்கு டொப்பி கொடுப்பது மாதிரி” ”சிறிபிள்ளை தனமாக” என்பதும் இதில் அடக்கம்). தயவு செய்து கொஞ்சம் மென்மையாகப் பேசுங்கள். விக்கி சமூகம் வலை உலகத்தைப் போன்றதல்ல - இங்கு ஒருவரோடொருவர் மிகுந்த மரியாதையோடு மென்மையாகவே பழகி வருகிறோம். உங்கள் வர்த்தைகளை மிகைப்படுத்ததல் நலம். --சோடாபாட்டில்உரையாடுக 06:20, 6 ஏப்ரல் 2011 (UTC)

விக்கிபீடியா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு நண்பரே! தமிழில் இப்படி ஒரு கலைக்கழஞ்சியம் அமைவது எத்தனை பிரயோசனமானது என்பதையும் நான் உணர்கிறேன். உங்கள் மீதும் தனிபட்ட வகையில் மரியாதையுண்டு. இங்கே எனது சந்தேகங்களை மட்டுமே கேட்கிறேன். உங்களின் பதிலுக்கு நன்றி. இப்பொழுது நான் பதக்கம் கொடுப்பது எப்படி என்று விளங்கிக்கொண்டேன்.

பதக்கம் கொடுப்பதற்கு அதிகாரப்பூர்வ கொள்கை/தகுதி என்று எதுவும் கிடையாது. கொடுப்பதற்கும் எத்தகுதியும் கிடையாது. எனவே கொடுப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. பெறுவதற்கு எந்த தகுதியும் இல்லை. சும்மா பாராட்டை பதக்கங்கள் மூலம் வெளிப்படுத்துவதற்கானது மட்டும் அவ்வளவே. பதில் கிடைக்கப்பெற்றேன் நன்றி.

ஆனால் ஒன்று பதக்கம் எனும் தமிழ் சொல் கொண்டுள்ள பண்பு இங்கே, பாராட்டை வெளிப்படுத்த பயன்படுகிறது. மிகவும் அருமையான தமிழ் சொற்கள் "அரும்பணி, சிறப்பு" போன்றவை இங்கே கொச்சைப் படுத்தப்படுகின்றது. - மொஹமட்

”கொச்சை” என்பது உங்களது பார்வை. விக்கியை பொறுத்தவரை எது அரும்பணி, எது சிறப்பு என்பதை சில நாட்கள் பணி செய்தால் நீங்களும் உணர்வீர்கள். நீங்கள் சொன்ன ”விக்கிப்பீடியா சின்னம் மாற்றம்” என்பதன் பின்னால் எவ்வளவு உழைக்க வேண்டுமென்பதும், எவ்வளவு வேலை செய்ய வேண்டும் அதற்கு ஆகும் நேரம் எவ்வளவு என்பதும் அதை செய்து பார்த்தவர்களே அறிவர் (அல்லது என்னைப் போல செய்ய முயன்று தோற்றவர்கள்). சில காலம் விக்கியில் பங்களியுங்கள், பின் இங்கு உள்ள பணிகளில் எவை “அரும்பணிகள்” எவை “கொச்சை” என்பது உங்களுக்குப் புலப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:49, 6 ஏப்ரல் 2011 (UTC)
  • தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பான பங்களிப்பு செய்யும் பங்களிப்பார்களுக்கு பதக்கம் வழங்குவது என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அந்தப் பதக்கம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வரையறைகளின் கீழ் அளிக்கப்பட வேண்டும் அதுவே சரியானது. கட்டுரைகளின் எண்ணிக்கை, தொகுப்பு போன்ற ஏதாவது ஒரு வரையறை இருக்க வேண்டும் என்பதை நான் ஆதரிக்கிறேன். அதுபோல் பதக்கம் அளிப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு தகுதி வரையறையும் இருக்க வேண்டும் என்பதையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் அது படிப்பு, பதவி என்பதாக இல்லாமல் விக்கிப்பீடியாவின் சிறந்த பங்களிப்பாளர்களாக, விக்கிப்பீடியா குறித்து நன்கு அறிந்தவர்களாகவும், தாம் எதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறோம் என்பதை உணர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

சோடாபாட்டிலுக்கு உண்மையில் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்று நான் கூட விரும்பினேன். அவருடைய நிர்வாகப் பணி மிகச் சிறப்பாக இருக்கிறது. அவரால் எப்படி இவ்வளவு பணியைச் செய்ய முடிகிறது என்று நான் இன்னும் கூட வியப்பில்தான் உள்ளேன். புதிதாகச் சேர்ந்த இலங்கையைச் சேர்ந்த பயனர் புன்னியாமீன் அவர்களும் குறுகிய காலத்திற்குள்ளாக சோடாபாட்டிலைப் போல் பல பங்களிப்புகளைச் செய்து முன்னிலையில் இருக்கிறார்.இவர்கள் பதக்கம் வழங்கப்பட வேண்டியவர்கள்தான். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து அதிக அளவில் பங்களிக்கும் பதக்கப் பங்களிப்பாளர்கள் நற்கீரன், கனக்ஸ், மயூரநாதன், செல்வா போன்றவர்களுடன் தற்போது சோடாபாட்டிலும், புன்னியாமீனும் சேர்ந்திருக்கிறார்கள். அண்மைய காலங்களில் சுந்தர், ரவி போன்றவர்களின் பங்களிப்புகள் குறைந்திருந்தாலும் அவ்வப்போது தங்களது பணிகளுக்கிடையில் சிறப்பான தகவல்களுடன் அவர்கள் விக்கிப்பீடியாவின் வெளியிடப் பணிகளையும் சேர்த்துப் பங்களித்து வருவது உண்மையில் பாராட்டுக்குரியது. இப்படி கலையரசி, பரிதிமதி, மாஹிர், மணியன் என்று அதிக அளவில் பங்களித்து வரும் பலரும் பாராட்டுக்குரியவர்களே...

இருப்பினும் தேவையற்ற பதக்கங்களைத் தவிர்க்கலாம். விக்கிப்பீடியா - விக்கிப்பீடியாவாக இருக்கட்டும். அது வலைப்பூவைப் போல் ஒருவருக்கொருவர் பதக்கம் கொடுப்பதாக மாற்றமாகி விடக்கூடாது என்கிற கருத்தில் நானும் உடன்படுகிறேன். பதக்கம் வழங்க எண்ணிக்கை, தொகுப்பு என்கிற ஏதாவது வரையறைகள் அவசியம். பிற சிறப்பான படைப்புகளுக்கு, பணிகளுக்கு அந்தப் பயனர் உரையாடல் பக்கத்தில் பாராட்டுகளைத் தெரிவிக்கலாம். எனவே பதக்கங்கள் ஏதாவதொரு வரையறை செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறேன். தேவையற்ற பதக்க வார்ப்புருக்களை நீக்கம் செய்யவும் பரிந்துரைக்கிறேன்--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:38, 7 ஏப்ரல் 2011 (UTC)

பதக்கம் வழங்க எண்ணிக்கை, தொகுப்பு என்கிற ஏதாவது வரையறைகள் அவசியம்., தயவு செய்து இதை அதிகார பூர்வ விசயமாக மாற்றாதீர்கள். இது போல வேறு எந்த விக்கித்திட்டத்திலும் கிடையாது. barnstar என்பதை அனைத்து விக்கித்திட்டங்களிலும் தனிப்பட்ட முறையில் பயனர்கள் பிறருக்குத் தருவனவாக உள்ளன. எந்தவொரு விக்கித்திட்டத்திலும் பதக்கம்/பாராட்டு வழங்க தகுதி தேவை என்று யாரும் கோரியதில்லை. அதுபோல “தேவையற்ற பதக்கம்” என்று யாரும் தடுப்பதுமில்லை. (ஆபாச, தனிமனித தாக்குதல் விசயங்களைத் தவிர்த்து). இந்த விக்கியன்பு என்ற கருவியே தற்பொது விக்கிமீடியா அறக்கட்டளை பயனர்களை ஊக்குவிக்க என்ன செய்யலாம் என்று நடத்திய கலந்தாலோசனைகளின் மூலம் விளைந்தது தான். அதாவது - எளிதில் பலருக்கும் பலரும் பதக்கங்களை அளிக்க வேண்டுமென்று உருவாக்கப்பட்டது. ஆங்கில விக்கியில் நூற்றுக்கணக்கான பதக்க வகைகள் உள்ளன - பணியினை பொறுத்து பல வகைகள் உள்ளன. இங்கு பத்து-பதினைந்து வகைகள் கூட இல்லை.
இது போன்ற “அதிகாரப்பூர்வ வரையறை”/ ”தேவையற்ற பதக்கம்” போன்ற பரிந்துரைகளெல்லாம் தேவையில்லாத “அதிகார வர்க்க” உருவாக்கம். கொடுப்பதும் கொடுக்காததும் தனிப்பட்ட விசயம். ஒரு கொடுப்பது பிடிக்கவில்லையென்றால் கொடுக்கப்பட்டவர் மறுத்துவிட்டுப் போகலாம். பதக்கம் என்பது தனிமனிதப் பாராட்டின் வெளிப்பாடே - பத்து வருடங்களாக அனைத்து விக்கித்திட்டங்களில் இப்படித்தான் இருந்து வந்துள்ளது. விக்கிப்பீடியா விக்கிப்பீடியாவாக இருப்பதன் வெளிப்பாடே இது. அதிகாரப்பூர்வ வரையறையை ஏற்படுத்துவதே விக்கிப்பீடியாவை ஒரு இறுக்கமான அதிகாரச் சூழலாக மாற்றுவது. பதக்கம் வழங்குவதை அதிகாரபூர்வ விசயமாக்கி தேர்வு முறைத் தகுதிகளைப் புகுத்திய “பெருமை” நமக்கு வேண்டாம். ஒரு தன்னார்வலத் திட்டத்தில் இது போன்ற வேலைகள் சூழலுக்கு ஆரோக்கியமானவை அல்ல--சோடாபாட்டில்உரையாடுக 04:05, 7 ஏப்ரல் 2011 (UTC)
சோடாவின் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன். இது போன்ற விடயங்களை நிர்வாகித்து வளங்களைச் செலவளிப்பது எமது முதன்மைப் பணிகளில் இருந்து கவனத்தை குறைத்துவிடும். --Natkeeran 04:13, 7 ஏப்ரல் 2011 (UTC)

//பதக்கம் வழங்குவதை அதிகாரபூர்வ விசயமாக்கி தேர்வு முறைத் தகுதிகளைப் புகுத்திய “பெருமை” நமக்கு வேண்டாம். ஒரு தன்னார்வலத் திட்டத்தில் இது போன்ற வேலைகள் சூழலுக்கு ஆரோக்கியமானவை அல்ல// நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்குது. ஆனால் கலைக்கழஞ்சியம் என்பதை உருவாக்குவதின் முதன்மை செயல்பாடான கட்டுரைகளை எழுதுவதற்கு முக்கியம் கொடுக்காமல், சும்மா எதையோ கிண்டிக்கொண்டு இருப்பவரெல்லாம் பதக்கம் கொடுப்பதை வேலையாக செய்துக்கொண்டிருந்தால் நல்லாதான் இறிக்கும். பதக்கத்திற்கே மரியாதை இல்லாமல் போய்விடும். இப்பவே சொல்லிட்டேன் யாரும் எனக்கு இந்த ஜுஜுபி பதக்கம் எல்லாம் தந்து ஊக்குவிப்பு எனும் பேரில் கேவலப்படுத்த வேண்டாம். - மொஹமட்

பதக்கம் வழங்குபவரின் தகுதி கணிக்கப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. இது குறித்துக் கொள்கை எதுவும் வகுக்கத் தேவையில்லை. அதே நேரத்தில் யாரும் பதக்கம் வழங்கலாம் என்றபடியால் அதனை முறைகேடாகப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு தடவைகள் கேலிக்காகவும், நக்கலுக்காகவும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது விக்கிப்பீடியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் செயல்களாக நான் கருதுகிறேன். அப்படி வழங்கப்படுமிடத்தில் அதனை நிராகரிக்கும் உரிமை அந்தப் பயனருக்கு உண்டு.--Kanags \உரையாடுக 00:48, 8 ஏப்ரல் 2011 (UTC)

30,000 கட்டுரைகள்!![தொகு]

எமது விக்கியில் மூன்றே வாரத்துள் ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டு கட்டுரைகளின் எண்ணிக்கை 30,003 ஆக அதிகரித்துள்ளது. இந்த முக்கியமான மைல்கல்லைச் சாத்தியமாக்க உதவிய அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 08:32, 8 ஏப்ரல் 2011 (UTC)

அனைவருக்கும் வாழ்த்துகள் !! கட்டுரையாக்கங்களின் விரைவு கூடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதனில் பெரும்பங்கு கொண்ட பயனர்;புண்ணியாமீன் பாராட்டுக்குறியவர். அவரது உற்சாகம் ஓர் தொற்றாக மற்றவரிடமும் ஓர் உந்துதலைக் கொடுத்துள்ளது. பதிய பயனர்கள் பலர் வருகையும் நிகழ்ந்துள்ளது. அவர்களும் பல்வேறு துறைகளில் விரைவாக பங்கேற்றால் வாரம் ஓராயிரம் என்ற இலக்கை எட்டலாம். இருக்கின்ற கட்டுரைகளில் உள்ள சிவப்பு இணைப்புகளுக்கான கட்டுரை வடித்தல் முதலிடம் பெற்றால் நல்லது.--மணியன் 10:03, 8 ஏப்ரல் 2011 (UTC)
இந்த ஆயிரம் கட்டுரைகளில் புன்னியாமீன் மட்டும் கிட்டத்தட்ட 575 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். செங்கைப் பொதுவன் ஐயா 95 கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.--Kanags \உரையாடுக 10:19, 8 ஏப்ரல் 2011 (UTC)
அனைவருக்கும் வாழ்த்துக்கள். வேகத்தில் நல்ல முன்னேற்றனம். பொறுமையான வளர்ச்சி. --Natkeeran 13:16, 8 ஏப்ரல் 2011 (UTC)
575 கட்டுரைகள் எழுதப்படவில்லை. வார்ப்புருவை இட்டுவிட்டு நான்கு நான்கு வரியில் கட்டுரைகள் தொடங்கிமட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அவற்றை கட்டுரையாக கட்டுரைகளாக கொள்ள முடியாது. இதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணமாக எடுத்துக்கொள்ளவதும் சரியில்லை. இது இந்தியாவின் ஏனைய விக்கிபீடியாகளுடன் ஒப்பிட்டு வீண் பெருமை பட்டு கொள்ள மட்டுமே உதவும். ஒரு சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ள ஒரு கலைக்கழஞ்சியத்திற்கு இது ஒரு முற்போக்கான செயலல்ல. எண்ணிக்கையை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு கட்டுரைகள் அமைவது ஒரு போதும் வளர்முகமானது அல்ல. -மொஹமட்
மொஹமட், நான்கு நான்கு வரிகளில் கட்டுரைகள் இருப்பது பிரச்சினை அல்ல. இக்கட்டுரைகளைப் படிப்படியாக வளர்த்தெடுக்க முடியும். தமிழ் விக்கிப்பீடியாவில் இன்று இருக்கும் நீளமான கட்டுரைகள் பல ஒரே நாளில் எழுதப்பட்டவை அல்ல. பல வாரங்களாக மாதங்களாக வளர்த்து எடுக்கப்பட்டவை. விக்கிப்பீடியாவின் சிறப்பியல்புகளில் அதுவும் ஒன்று. கட்டுரைகளை பலர் கூடி ஒவ்வொரு வரியாக வளர்த்து எடுக்கலாம். நான்கு நான்கு வரிகளாக 500க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதுவது சுலபமான விடயம் அல்ல. சில தலைப்புக்களில் இப்போதைக்கு நான்கு ஐந்து வரிகளுக்குமேல் கட்டுரை எழுதமுடியாது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் கூட இவ்வாறான கட்டுரைகளைக் காண முடியும். எவ்வளவு சிறிய பங்களிப்பு என்றாலும் தமிழ் விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை பாராட்டப்பட வேண்டியதே. ஒருவரை ஒருவர் ஊக்குவித்துக்கொண்டு முன்னேறிச் செல்வதே விக்கிப்பீடியாவின் அடிப்படையான தர்மம். ஒவ்வொரு விடயத்தையும் வெவ்வேறு கோணங்களில் பார்த்து நல்லது அல்லது கூடாது என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம். நமது வளர்ச்சிக்கு எப்படிப் பார்த்தால் நல்லது என்று அறிய முயலுங்கள். நான்கு வரிகள் கட்டுரையே அல்ல என்கிறீர்கள். அது உங்கள் பார்வை. இன்னொருவர் அதை மேலும் வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பாகப் பார்க்கக்கூடும். அவர் அதற்கு இன்னும் நான்கு வரிகளைச் சேர்க்க முயல்வார். எதையுமே நல்லநோக்கோடு (positive) பார்ப்பது பார்ப்பவருக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது. "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்பது முது மொழி. சுற்றம் மட்டுமல்ல, "குற்றம் பார்க்கில் முன்னேற்றமும் இல்லை". --மயூரநாதன் 18:03, 8 ஏப்ரல் 2011 (UTC)
அனைத்து தமிழ் விக்கிச் சொந்தங்களுக்கும் எனது பாராட்டுக்கள்.--சி. செந்தி 09:08, 9 ஏப்ரல் 2011 (UTC)

புன்னியாமீனின் மனந்திறந்த விளக்கம்[தொகு]

மொஹம்மட் தங்களின் மனம்திறந்த உளக் கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம், தமிழ் விக்கி தொடர்பாக சில விளக்கங்களையும் தர வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். குறிப்பாக நீங்கள் குறிப்பிட்ட கட்டுரைகள் என்னால் ஆரம்பிக்கப்பட்டவை என்றடிப்படையில் இது எனக்குக் கடமையாகின்றது.

அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப கர்த்தாவும், இதுவரை 3,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை ஆரம்பித்தவருமான மயூரநாதன் அவர்கள் விக்கியில் யாதோ ஒரு பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளின் எண்ணிக்கை 30,000 அடையுமிடத்து தமிழ்விக்கியின் வளர்ச்சிக்காக சில தன்னியக்க வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டதாக ஞாபகம். எனவே, தமிழ்விக்கியின் வளர்ச்சி எனும்போது எண்ணிக்கையையும் நாங்கள் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

தங்கள் கருத்தில் பின்வருமாறு ஒரு வாசகத்தை சேர்த்திருந்தீர்கள். “வார்ப்புருவை இட்டுவிட்டு நான்கு நான்கு வரியில் கட்டுரைகள் தொடங்கிமட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அவற்றை கட்டுரையாக கட்டுரைகளாக கொள்ள முடியாது. இதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.”

இது ஒரு ஆழமான கருத்து. விக்கி என்று கூறும்போது ஒரு கூட்டு முயற்சியால் கட்டியெழுப்பப்படும் கலைக்களஞ்சியம். விக்கியின் வளர்ச்சி கூட்டுப் பங்களிப்பிலே முழுமையாகத் தங்கியுள்ளது. இதனை ஆங்கில, டச்சு விக்கிகளிலும் பெரும்பாலான விக்கிகளிலும் நீங்கள் காணலாம். ஆனால், தமிழ்விக்கியில் கூட்டுப் பங்களிப்பு என்பது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. தமிழ்விக்கி ஆரம்பிக்கப்பட்டு, ஏழாண்டுகளாயினும் 30 ஆயிரம் என்ற இலக்கை தற்போது தான் அடைந்துள்ளோம். நீங்கள் குறிப்பிடுவதை பார்த்தால் இது போன்ற எண்ணிக்கையை அடைய நாங்கள் பல காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும், நீங்கள் குறிப்பிட்ட வார்ப்புரு விக்கிக்குரியது. அந்தக் கட்டுரையில் வார்ப்புருவைச் சேர்க்கும்போது குறிப்பிட்டவர் பற்றி பல தகவல்கள் வார்ப்புருவில் இடம்பெற்றுவிடுகின்றது. நான்கு வரியில் கட்டுரைகள் என்று குறிப்பிடும்போது வார்ப்புருவில் வெளியிடப்படும் கருத்தினையும் நீங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். மயூரநாதன் அவர்கள் குறிப்பிட்ட ஒரு விடயத்தை இவ்விடத்தில் கோடிட்டுக் காட்டுவது ஏற்புடையதாக இருக்கும். “நான்கு வரிகள் கட்டுரையே அல்ல என்கிறீர்கள். அது உங்கள் பார்வை. இன்னொருவர் அதை மேலும் வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பாகப் பார்க்கக்கூடும். அவர் அதற்கு இன்னும் நான்கு வரிகளைச் சேர்க்க முயல்வார். எதையுமே நல்லநோக்கோடு (positive) பார்ப்பது பார்ப்பவருக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது.”

இவ்விடத்தில் நான் அண்மையில் ஆரம்பித்துவரும் துடுப்பாட்ட வீரர்கள் பற்றிய கட்டுரைகளை மட்டும் வைத்து தீர்மானத்திற்கு வருவது தவறு. எனது கட்டுரைகள் பட்டிலை பார்வையிட்டு அதிலுள்ள கட்டுரைகளை திறந்து பாருங்கள். அப்போது தங்களுக்குப் புரியும். இதுவரை என்னால் ஆரம்பிக்கப்பட்ட பல கட்டுரைகள் முதற் பக்கத்தில் இடம்பெற்றதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என கருதுகின்றேன்.

அண்மைக் காலங்களாக துடுப்பாட்ட வீரர்கள் பற்றி அதிக கட்டுரைகள் நான் எழதுவதற்கான காரணத்தையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

  • பிரதான காரணம்

மயூரநாதன் உட்பட சிரேஸ்ட விக்கிப்பீடியர்கள் சிலர் தமிழ் விக்கிப்பீடியாவைக் கட்டியெழுப்ப தெரிவித்துள்ள கருத்துக்களை நோக்குமிடத்து தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை பல இடங்களில் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். உதாரணத்திற்காக வேண்டி ஓரிரு கருத்துக்களை இவ்விடத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

  • *தமிழ் விக்கியில் கட்டுரை எண்ணிக்கை 28,000 ஐ நெருங்கிவிட்டது. இன்று இந்த எண்ணிக்கையைத் தாண்டிவிடுவோம். இதே உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொண்டால் மிக விரைவிலேயே 30,000 ஐயும் தாண்டிவிடலாம். பயனர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மயூரநாதன் 04:42, 12 பெப்ரவரி 2011 (UTC)
    • நம் விக்கிப்பீடியாவை வளர்த்து முதலில் 50,000 கட்டுரைகளையும் அதன் பின் 100,000 கட்டுரைகளையும் என்று விடாது உயர்த்துவோம்.--செல்வா 15:53, 2 பெப்ரவரி 2011 (UTC)
    • தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் பல்வேறு அம்சங்களிலும் ஒரு சம நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலையைத் தக்க வைத்துக்கொண்டு மேலும் முன்னேற வேண்டும். பயனுள்ள தலைப்புக்களில் ஆழமான நல்ல கட்டுரைகளை உருவாக்க வேண்டியது அவசியம். கட்டுரைகளின் எண்ணிக்கையையும் கூட்டுவதற்கான நடவடிக்கைகள் தேவை. நீண்ட காலமாகக் கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா 67, 68 ஆம் இடங்களிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கட்டுரை எண்ணிக்கை ஒப்பீட்டளவில் வேகமாக அதிகரித்தது. இந்த ஆண்டிலும் இவ்வேகம் குறையாமல் பேணிக்கொள்ள வேண்டும். மயூரநாதன் 18:53, 2 பெப்ரவரி 2011 (UTC)


இந்த அடிப்படையில் இவர்களின் கருத்துக்களுக்கமைய கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் எடுத்தல் வேண்டும்.

  • இரண்டாவது காரணம்

என் தனிப்பட்ட ஒரு விடயம். அதையும் இவ்விடத்தில் சற்று தெளிவுபடுத்துதல் அவசியமாகும். குறிப்பாக சுமார் 2 மாதங்களுக்கு முன்பு என் காலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சத்திரசிகிச்சை காரணமாக எழுந்து நடமாட முடியாத நிலையிலும், படுக்கை ஓய்வுபெற வேண்டிய நிலையிலும் இருந்தேன். இதனால் சிறப்புக் கட்டுரைகளை ஆரம்பித்து அவை பற்றி ஆய்வு செய்துகொள்ள என்னால் முடியாதிருந்தது. இந்நிலையிலும் யாதாவதொரு முறையில் விக்கியில் என் பங்களிப்பை தொடர வேண்டும் என கருதினேன். அச்சந்தர்ப்பத்தில் எனக்கு இலகுவாகக் காணப்பட்டது துடுப்பாட்ட வீரர்கள் பற்றிய தற்போது எழுதிவரும் இத்தொடரே. எனவே என் அலுவலகத்தில் பணிபுரியும் டைப்பிஸ்ட்கள் துணையுடன், என் வழிகாட்டல்களையுடன் இக்கட்டுரைகளை தயார் செய்து படுக்கையிலிருந்த படியே மடிக்கணினி மூலமாக விக்கிப்பீடியாவிற்கு தரவேற்றம் செய்தேன். நிச்சயமாக இத்தொடரை நான் ஆரம்பித்திராவிடின் என்னால் வேறு எந்தக் கட்டுரையையும் எழுதியிருக்க முடியாதிருந்திருக்கும். ஒரு முறைக்கு என் காலில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை காரணமாகத்தான் மேலே குறிப்பிட்ட 575 கட்டுரைகள் மட்டில் என்னால் பதிவேற்றம் செய்ய முடிந்தது. விக்கியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாவிடின் நிச்சயமாக இந்தக் கட்டுரைகள் விக்கியில் வந்திருக்க மாட்டாது.

ஆரம்பத்தில் இலங்கை வீரர்களை பின்பு பாக்கிஸ்தான் வீரர்களையும் தற்போது இந்திய வீரர்களையும் எழுதியுள்ளேன். இந்திய வீரர்களுடன் இதனை நிறுத்திக் கொள்ள நான் எண்ணியிருந்தாலும்கூட இனி தங்கள் கருத்தினைக் கருத்திற்கொண்ட பின் இதை நிறுத்த மாட்டேன். இன்சாஅல்லாஹ் தொடர்ந்து டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளிலுள்ள சகல துடுப்பாட்ட வீரர்களையும் நான் எழுதிமுடிப்பேன். அதேநேரம், விக்கிப்பீடியாவில் அதிகாரம்பெற்ற நிர்வாகிகள் அல்லது அதிகாரிகள் கேட்டுக்கொண்டால் மாத்திரம் அதனை உடன் நிறுத்திக் கொள்வேன்.

தமிழ் இஸ்லாமிய இதழ்கள் பற்றியும் ஒரு சிறு கருத்து

இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர் இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் பற்றி சுமார் ஏழாண்டுகளாக நான் ஆய்வு நடத்தி வருகின்றேன். இதுவரை 2000 க்கும் மேற்பட்ட ஆதாரபூர்வமான தகவல்களும், 800 க்கும் மேற்பட்ட முகப்பட்டை புகைப்படப் பிரதிகளும் 400 க்கும் மேற்பட்ட முழுமையான சஞ்சிகைகளும் உள்ளன. இது விடயமாக எதிர்வரும் மே மாதத்தில்கூட நான் மலேசியா செல்ல திட்டமிட்டுள்ளேன். இந்த ஆய்வு முழுமை நிலை அடையாததினால் இவற்றை நூலுருப்படுத்திக் கொள்ள முடியாமல் உள்ளேன். என்னால் திரட்டப்பட்ட சில தகவல்களை விக்கி 'வெளி'யில் விடும்போது அவற்றின் பதிப்புரிமை தன்மையை நான் இழந்துவிடுகின்றேன். இவை ஒரு விரிவான நூலாக வெளிவரும்போது அவற்றின் பெருமானம் குறைந்துவிடும். இதனைக் கருத்திற் கொண்டே தற்போது குறித்த இதழ் தொடர்பான அடிப்படை விடயங்களை சேர்த்துவருகின்றேன். என் புத்தகப் பணி முடிந்த பின்பு நிச்சயமாக மீளவும் இப்பக்கங்களில் கைவைத்து விரிவாக்கலையும், படிமங்களையும் நான் மேற்கொள்வேன். எனவே இங்கும் ஒரு விடயத்தைக் கருத்திற் கொள்ள வேண்டும். இதழ்கள் பற்றிய இக்கட்டுரைகளும் சிறிய கட்டுரைகளாகக் காணப்பட்ட போதிலும்கூட, விக்கியில் கூட்டுப் பொறுப்பு பேணப்படுமாயின் என்னால் அவை சீரமைக்கப்பட முன்பு விக்கிப் பயனர்கள் அவற்றை விரிவுபடுத்துவார்கள். கலிபோனியாவைச் சேர்ந்த பேராசிரியர் லிங்கன்காம் குறிப்பிட்டதொரு விடயம் என் ஞாபகத்திற்கு வருகின்றது. “ஒரு கட்டுரையை ஆரம்பிப்பது கடினம். ஆரம்பித்த பின் அதைப் பூரணப்படுத்துவது மிகவும் எளிது.” விக்கி கலைக்களஞ்சியத்திற்கும் இது பொருந்தும்.

இறுதியாக ஒரு வார்த்தை. ஒரு புதிய பயனர் என்றடிப்படையில் நீங்கள் விமர்சனங்களுடன் மாத்திரம் தங்களை மட்டுப்படுத்திக் கொள்கின்றீர்கள். எழுத்திலும் உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உங்கள் விமர்சனங்களுக்கும் ஒரு வலிமை இருக்கும்.

அன்புடன்--P.M.Puniyameen 06:33, 9 ஏப்ரல் 2011 (UTC)

மிகச் சிறந்த பதில். உங்கள் பணி தொடரட்டும்.--Kanags \உரையாடுக 07:13, 9 ஏப்ரல் 2011 (UTC)
30000 இத்திலிருந்து 50000 ஐ நோக்கிய பயணத்தில் சளைக்காமல் முன்னேற வேண்டும். ஒருவரின் பங்களிப்பில் வரும் ஆக்கத்தை விட பலர் பங்களித்து ஆக்கம் வருவது; வளப்பட்டு முழுமை பெறுவதே ஒரு திறந்த வள கலைக்கழஞ்சியத்துக்குச் சிறப்பு. வெற்று விமர்சனங்கள் பயன்தராது. மற்றைய மொழிகளோடு ஒப்பிட்டு பெருமை கொள்வதை விட விக்கி ஆர்வலர்கள் நம் எதிர்காலச் சந்ததிக்கான ஒரு பெறுமதிமிக்க தேட்டமாகவே த.வி ஐப் பார்க்கிறோம். இதை மொகமட் கருத்தில் கொள்ள வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 10:14, 9 ஏப்ரல் 2011 (UTC)

புன்னியாமீன் நானா, நான் உங்கள குறையா சொல்லல்ல. நீங்கள் ஆயிரமர் பதக்கம் வாங்கினதுக்கு நானும் பாராட்டியிறிக்கன். ஹதீஸில் சொல்லி இருக்குது எவர் அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்படிகிறாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்தவர் ஆவார். (4:30) நான் அல்லாஹ்வுக்கு கீழ்படிந்த மனிசன். நான் உங்கள குறை சொன்னதா நீங்க நினைக்க வாணாம். ஆனால் நான்கு வரி கட்டுரை எழுதியதத்தான் சுட்டிகாட்டி இருக்கிறேன். விக்கிபீடியா ஒரு கூட்டு முயற்சி என்று சொன்னாலும் நீங்கள் உங்கட கட்டுரைகள் இல்லாமல் மேம்படுத்திய கட்டுரைகள் ஒன்றையும் நான் காங்கயில்ல. எல்லாரும் இப்படியே செய்ய ஆரம்பித்தால் பிறகு யார் மேம்படுத்துவது? புதுசா வார ஆக்கள் தான் மேம்படுத்தவோணுமா? - மொஹம்ட்

த.வி. யில் கட்டுரை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பது எனது பேரவா. நானும் சில கட்டுரைகளை ஆரம்பித்து விட்டு குறுங்கட்டுரை அல்லது வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று போட்டுவிட்டு இன்னமும் மேம்படுத்தாமலே இருக்கின்றேன். புன்னியாமீன் போன்றே துடுப்பாட்ட வீரர்களின் கட்டுரைகளை சில வரிகளுடன் ஆரம்பித்தேன். அந்தத் துறையில் அவர் வேகமாக எழுதுவதைப் பார்த்த பின்னர் நான் வேறு வேலைகளைச் செய்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறேன். கட்டுரைகளை செம்மைப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுகிறேன். மொஹம்மட் அவர்கள் பதக்கங்கள் குறித்து கூறியிருந்தீர்கள். சோடாபாட்டிலின் ஒரு பதக்கம் சீர்திருத்த வேலைகளில் என்னை மேலும் ஈடுபட உற்சாகமூட்டியது. அனைவரும் கூறுவது போல் எதிர்மறையான கருத்துக்களை விடுத்து, த.வி.யை வளர்க்க இணையுங்கள். --சிவகோசரன் 13:58, 9 ஏப்ரல் 2011 (UTC)

விக்கிபீடியா குறித்து ஒரு கேள்வி எழுப்பினால், அதை நேர்மையான முறையில் அனுகாமல், ஆளாளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இது தான் ஒரு புது பயனர் கேள்வி கேட்டால் விக்கிபீடியாவில் பதிலளிக்கு ஒழுங்கா? ஒட்டுமொத்ததில் விக்கிபீடியாவில் உள்ளவர்கள் எதிர்விமர்சனங்களை உள்வாங்கிகொள்ள விரும்புவதில்லை என்பதை காட்டுகிறது. தமிழ்விக்கியில் கூட்டுப் பங்களிப்பு என்பது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்று புன்னியாமீன் நானாவே சொல்கிறார். ஆனால் அவர் அவருடைய கட்டுரைகளைத் தவிர வேறு ஏதாவது ஒரு கட்டுரையை மேம்படுத்தியுள்ளாரா என முதலில் அறிந்துகொள்ள விருப்பம்.

எதையுமே நல்லநோக்கோடு (positive) பார்ப்பது பார்ப்பவருக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது. "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று நண்பர் மயூரநாதன் சொல்றார். அவர் நான் என்ன சொல்கிறேன் என்பதை நல்லநோக்கோடு (positive) வாக பார்க்க தவறிவிட்டார். நான் எண்ணிக்கையை மட்டுமே நோக்காக கொண்டு உருவாக்கப்படும் கட்டுரை என்று சொன்னதே. " கட்டுரை எண்ணிக்கையை உயர்த்துவதை மட்டுமே தெளிவான நோக்கமாக கொண்டு மளமளவென்று உருவாக்கப்படும் பயனற்ற ஒரே மாதிரியான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள். "துரித நீக்கல் தகுதிகள்" என குறித்து வைத்திருப்பதை பார்த்துதான்.

இங்கு உள்ள எல்லா நண்பர்களிடமும் இருந்தும் ஒரு விஷயம் தெளிவா தெரியுது. அது விக்கிபீடியாவின் எண்ணிக்கையை எப்படியாவது அதிகரிக்க வேண்டும். இதற்கு என்ன விஷேசக் காரணம் இருக்கிறதா? --மொஹமட் 14:28, 9 ஏப்ரல் 2011 (UTC)

  • தமிழ் விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகள் அதிக அளவில் இருப்பது உண்மைதான். இந்தக் குறுங்கட்டுரைகளில் ஒன்று, அதற்கான தகவல்கள் கிடைக்காமல் தொடர்ந்து குறுங்கட்டுரைகளாக இருப்பது. மற்றொன்று, முதலில் குறுங்கட்டுரையாகச் செய்து விட்டு பின்னர் அதை விரிவுபடுத்தலாம் என்று விட்டுவிடுவது. இன்னொன்று இந்தக் கட்டுரையைத் தொடங்கி விடுவோம், வேறு யாராவது இதை விரிவுபடுத்தட்டும் என்று அப்படியே விட்டுவிடுவது. இதில் முதல் வகை ஏற்புக்குரியது. இரண்டாவது வகை, அந்தக் கட்டுரையை விரிவுபடுத்தும் ஆர்வமின்றி இருத்தல், இதில் கட்டுரையை உருவாக்கியவர்கள் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மூன்றாவது வகை, ஏற்புடையது அல்ல. (நான் தொடங்கிய சில கட்டுரைகளில் சில எனக்கே ஏற்புடையதாக இல்லை) மூன்றாவது வகைக் குறுங்கட்டுரைகளில் பல ஓரிரு வரிச் செய்திகளாக அமைக்கப்படுகிறது. இவற்றிற்கு குறிப்பிட்ட காலக்கெடு கொடுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடு முடிவில் அந்தக் கட்டுரையை உருவாக்கியவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு அதை நீக்கி விடலாம். தமிழ் விக்கிப்பீடியாவிலிருக்கும் கட்டுரைகள் தர வரிசையில் முன்னிலையில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். குறுங்கட்டுரைகளில் கூட அந்தத் தலைப்பிலான ஏதாவது தகவல் இருக்க வேண்டும். எண்ணிக்கை அதிகரிக்க விக்கிப்பீடியா பயிலரங்கு போல், வேறு ஏதாவது மாற்று முயற்சிகளையும் ஊக்குவிக்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:21, 9 ஏப்ரல் 2011 (UTC)