வா வாத்தியார்
| வா வாத்தியார் | |
|---|---|
திரைப்படப் பதாகை | |
| இயக்கம் | நலன் குமரசாமி |
| தயாரிப்பு | கே. இ. ஞானவேல் ராஜா |
| கதை | நலன் குமரசாமி |
| இசை | சந்தோஷ் நாராயணன் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | வில்லியம்ஸ் |
| படத்தொகுப்பு | வெற்றி கிருஷ்ணன் |
| கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
| வெளியீடு | 14 சனவரி 2026 |
| ஓட்டம் | 127 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வா வாத்தியார் [a] என்பது 2026-இல் வெளிவந்த தமிழ் மொழி அதிரடி நகைச்சுவைச் திரைப்படமாகும். படத்தை நலன் குமரசாமி இயக்கினார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் கே. இ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்தில் கார்த்திக் சிவகுமார், ஷெட்டி முன்னணிக் கதாபாத்திரங்களிலும் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ், சில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக், நிவாஸ் ஆதித்தன், பி. எல். தேனப்பன் ஆகியோரும் நடித்தனர்.
பல்வேறு நிதிச் சிக்கல்களைத் தாண்டி சனவரி 14, 2026 இல் வெளிவந்தது.
கதைச் சுருக்கம்
[தொகு]கதை 1987-ம் ஆண்டில் 'மாசிலா' என்ற கற்பனை நகரத்தில் நடக்கிறது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருக்கும் தாத்தா (ராஜ் கிரண்), எம்.ஜி.ஆர் மறைந்த அதே நாளில், அதே நேரத்தில் தனக்கு பேரன் பிறப்பதை அறிகிறார். இந்த பேரன்தான் எம்.ஜி.ஆரின் அடுத்த அவதாரம் என்று நம்பும் அவர், குழந்தைக்கு இராமேஸ்வரன் என்று பெயரிட்டு, எம்.ஜி.ஆரின் குணநலன்களுடன், நேர்மையான காவல் அதிகாரியாக வளர்க்க முயற்சிக்கிறார்.
ஆனால் தாத்தாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக, வளர்ந்த இராமேஸ்வரன் (கார்த்தி) நம்பியாரை முன்மாதிரியாக கொண்டு, லஞ்சம் வாங்கும் நேர்மையற்ற காவல் ஆய்வாலராக மாறியிருக்கிறார். அதிகார துஷ்பிரயோகம், இலஞ்சம் என கெட்ட காவலாளராக 'நம்பியார்' பாங்கில் செயல்படுகிறார்.
இந்நிலையில், 'மஞ்சள் முகம்' என்ற பெயரில் இயங்கும் இணைய மர்ம கும்பல், அரசின் ஊழல்களையும் அநீதிகளையும் அம்பலப்படுத்தும் காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறது. இந்த கும்பலை போலி மோதலில் கொலை செய்யும் பணியில் இராமேஸ்வரன் களமிறங்குகிறார்.
மறுபுறம், இராமேஸ்வரனின் உண்மை முகம் தாத்தா ராஜ் கிரணுக்கு தெரிய வருகிறது. இதனால் ஏற்படும் வேதனையில் தாத்தா இறந்துபோக, அதன்பின் யாரும் எதிர்பாராத திருப்பங்களும் ஆச்சரியங்களும் நிகழ்கின்றன.
இராமேஸ்வரனின் உள்ளே எம்.ஜி.ஆரின் குணநலன்களும், வெளியே நம்பியார் குணமும் மோதிக்கொள்ள, ஒரே உடலுக்குள் நடக்கும் இந்த யுத்தத்தில் என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.
நடிகர்கள்
[தொகு]- கார்த்திக் சிவகுமார் - காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் இராமேசுவரன், "இராமு"
- கீர்த்தி ஷெட்டி - வூ
- சத்யராஜ் - பெரியசாமி
- ராஜ்கிரண் - இராமுவின் தாத்தா
- நிழல்கள் ரவி - தமிழ்நாட்டு முதலமைச்சர்
- ஆனந்த் ராஜ்
- சில்பா மஞ்சுநாத்
- கருணாகரன்
- ஜி. எம். சுந்தர்
- ரமேஷ் திலக்
- பி. எல். தேனப்பன்
- வடிவுக்கரசி - இராமுவின் பாட்டி
- பாபி சிம்ஹா - பர்மா (சிறப்புத் தோற்றம்)
விமர்சனங்கள்
[தொகு]இந்தியன் எக்சுபிரசு நாளிதழிலில் நாகலட்சுமி எழுதிய விமர்சனத்தில், "படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தி(ன்) திரைக்கதையை ரசிக்கும் படியாக அமைத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்" என்று எழுதியிருந்தார்.[2] தினமணி நாளிதழிலில் சிவசங்கர் எழுதிய விமர்சனத்தில், "எம்ஜிஆர் பேசிய அட்டகாசமான வசனங்களின் ஒன்று, கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான். தவறுமானால் குறி வைக்க மாட்டான். வா வாத்தியார் படக்குழு குறியே வைக்காமல் எல்லா திசைகளிலும் கத்தியை வீசியிருக்கிறார்கள். அதுவும், பிளாஸ்டிக் கத்தி!" என்று எழுதி ![]()
![]()
![]()
![]()
மதிப்பீடுகளை வழங்கினர்.[3] ஆனந்த விகடன் நாளிதழில் வந்த விமர்சனத்தில், "கதையின் ஐடியாவும், கார்த்தியின் நடிப்பும் சுவாரஸ்ய சாட்டையைச் சுழற்றினாலும், திரைக்கதையில் இன்னும் கச்சிதத்தையும் புதுமையையும் சேர்த்திருந்தால், ரத்தத்தின் ரத்தமாக இன்னும் உற்சாகத்தோடு 'வா வாத்தியாரை' வரவேற்றிருக்கலாம்" என்று எழுதியிருந்தனர்.[4] தினமலர் நாளிதழில் வந்த விமர்சனத்தில், "வா வாத்தியார் - இல்லை போ வாத்தியார்" என்று எழுதி ![]()
![]()
![]()
![]()
மதிப்பீடுகளை வழங்கினர்.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ வாத்தியார் என்னும் வார்த்தை ம. கோ. இராமச்சந்திரன் அவர்களைக் குறிக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vaa Vaathiyaar". British Board of Film Classification (in ஆங்கிலம்). Archived from the original on 10 டிசம்பர் 2025. Retrieved 10 December 2025.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Rajasekar, Nagalekshmi. "எம்.ஜி.ஆர் - நம்பியார் டுவல் ஷேட், வாத்தியார் கார்த்தியை காப்பாற்றினாரா? இல்லையா? 'வா வாத்தியார்' விமர்சனம்". tamil.indianexpress.com. Retrieved 2026-01-14.
- ↑ சிவசங்கர் (2026-01-14). "எம்ஜிஆரா? நம்பியாரா? கார்த்தியின் வா வாத்தியார் - திரை விமர்சனம்!". Dinamani. Retrieved 2026-01-14.
- ↑ டீம், விகடன் (2026-01-14). "வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி!". vikatan.com. Retrieved 2026-01-14.
- ↑ "வா வாத்தியார் - விமர்சனம் {2.5/5} : வா வாத்தியார் - இல்லை போ வாத்தியார் - Vaa Vaathiyaar". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2026-01-14.