வாழும்போதே இறுதிச்சடங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாழும்போதே இறுதிச்சடங்கு (Living funeral) (தமிழ்நாட்டில் : பாடைக் காவடி) என்பது ஒருவர் உயிருடன் இருக்கும்போதே செய்யப்படும் இறுதிச்சடங்கு ஆகும். இவ்வாறான வாழும்போதே செய்யப்பட்ட ஒரு இறுதிச்சடங்கு ஒன்று மோரி ஸ்வார்ட்ஸ் என்பவருக்கு நிகழ்த்தப்பட்டு அது புத்தகமாகவும், திரைப்படமாகவும் டியூஸ்டே வித் மோரி என்ற பெயரில் இரண்டிலும் ஆவணப்படுத்தப்பட்டது. மற்றும் டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் என்பதிலும் இது இடம்பெற்றுள்ளது. இதில் விளையாட்டுச் செய்திக் கட்டுரையாளர் மிட்ச் ஆல்போம் மைய கதாபாத்திரங்களில் ஒருவராக வருகிறார். தொடர்புடைய நபரின் உளவியல் நிலையும் மற்றும் வாழும்போதே இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் குடும்பத்தினருக்கும் உளவியல் நிலையும் இதில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. சில சமயங்களில் இச்சடங்கானது ஒருவருடைய உயிலைப் படித்துக் காண்பிக்கவும்கூட மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அந்த உயிலில் வெளிப்படுத்தப்பட்டுள்ள முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை விளக்குவதற்கும் இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

நோக்கம்[தொகு]

இச்சடங்கானது வழக்கமாக ஒரு ஆணோ ஒரு பெண்ணோ இனி அதிக நாள் வாழமாட்டோம் என நினைக்கும்போது அவர்களால் நிகழ்த்தப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். அல்லது வயதானவராக இருக்கலாம். அல்லது மரணம் நெருங்கிவிட்டது என்று உணர்பவராக இருக்கும்போது நிறைவான நிகழ்வாக இதனை அமைத்துக்கொள்ளகின்றனர். மேலும் மகிழ்ச்சியான நேரங்களைக் கொண்டாடவும், உடலின் ஒத்துழையாமை நிலையில் இந்த முறையானது பயன்படுத்தப்படுகிறது,

செலவு[தொகு]

இவ்வாறான இறுதிச் சடங்குகளில் பணம் ஒரு பெரிய பங்கினை வகிக்கின்றது. மக்கள் அவற்றை வைத்திருக்க இது ஒரு காரணமாகும். பொதுவாக வழக்கமான இறுதிச் சடங்கானது மிகுதியான செலவினம் கொண்டதாக இருக்கும். ஆனால் இவ்வாறாக வாழும்போதே செய்யும் இறுதிச்சடங்கானது கொஞ்சம் பணம் மிச்சமாக வாய்ப்புண்டு. இவ்வாறான இறுதி சடங்கு மிகவும் அர்த்தமுள்ளது என்று சிலர் நினைக்கின்றனர். முடிவில், அதில் அடக்கம் செய்யப்படும் செலவினமும் சேருவதால் உண்மையான இறுதி சடங்கிற்கும் இவ்வாறான இறுதிச்சடங்கிற்கும் ஆகும் செலவினங்கள் ஒரே அளவாகக்கூட இருக்க வாய்ப்புள்ளது. .[1]

அம்சங்கள்[தொகு]

உயிருடன் இருக்கும்போதே நடத்தப்படும் இறுதிச்சடங்குகளில், உண்மையான இறுதிச் சடங்கின் அம்சங்களைக் கொண்டு அமைந்துள்ளன. இந்த இறுதிச்சடங்கு பொதுவான சாதாரண இறப்புச் சடங்கைப் போலவே துவங்குகிறது. சோகமான இசை, ஒரு சிறிய கலசம், பைபிள் வாசிப்பு போன்ற சடங்குகள் அப்போது மேற்கொள்ளப்படும். அதற்குப் பின்னர்தான் சிறிது மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியான சூழ்நிலையுடன் வெவ்வேறு இசை இசைக்கப்படுகிறது. மகிழ்ச்சியாக இருந்து வாழ்க்கையைக் கொண்டாடுவது என்பதும், கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி செலுத்துவது என்பதும் இங்கு குறிக்கோள்களாக அமைகின்றன. உயிருடன் இருக்கும்போதே நிகழ்த்தப்படும் இவ்வாறான இறுதிச் சடங்கு நிகழ்த்தப்படும்போது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மரணத்தை நெருங்கும் நபரைப் பற்றிய கதைகளையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்வர். இந்த விழா பெரும்பாலும் விரைவில் நிறைவு பெறும். விரைவில் இறக்கவுள்ள நபர் எப்போதும் அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் அந்த வாழ்க்கையின்மீதான தாக்கங்களைப் பற்றியும் பேசுவார். இவ்வகையான வாழும்போதே இறுதி சடங்கின் மூலமாக பலர் தங்கள் பாராட்டுக்களை வெளிப்படுத்த விரும்புகிறார்கள். உண்மையான இறப்பு இறுதி சடங்கில் சொல்லவுள்ளதையே இந்த சடங்கில் அந்த நபரின் நண்பர்களும் குடும்பத்தினரும் கூறுவார்கள். இங்கே ஒரே வேறுபாடுதான் உள்ளது. அவர்கள் அனைவர் சொல்வதையும் கேட்க அவர் உயிரோடு இருக்கிறார் என்பதே அது. [2]

ஜப்பான்[தொகு]

ஜப்பானிய மொழியில் சீசென்ஸ் என்று அழைக்கப்படும் இவ்வாறான சடங்குகள் ஜப்பானில் 1990களில் செய்யத் துவங்கினர். ஜப்பானில் முதியோர் தம் முதிர்ந்த வயதின் காரணமாக தம் குழந்தைகளுக்கு சுமையாக இருப்பதைப் போல உணர ஆரம்பித்தனர். ஒத்துழைப்பு கொடுக்காமல் உடல் நிலை தளர்ந்துவருவதைப் பற்றி அவர்கள் வெட்கப்பட ஆரம்பித்தார்கள். இவ்வாறான, வாழும்போதே இறுதிச்சடங்கு என்ற நிகழ்வினை நடத்தி அவர்கள் தம் மன இறுக்கத்தைக் குறைத்துக்கொள்கின்றனர். இந்த நிகழ்விற்குப் பின் பெரும்பாலான ஜப்பானியர்கள், தம் இறப்பிற்குப் பின் தம் குடும்பத்தாரிடமிருந்து எதையுமே எதிர்பார்ப்பதில்லை, இறுதிச்சடங்கையும் சேர்த்துத்தான். [3]

தென் கொரியா[தொகு]

2012இல் தொடங்கியது முதல் தென் கொரியாவில் ஓர் அமைப்பானது 25,000 பேருக்கு இதுவரை போலி இறப்புச்சடங்கு என்ற ஒன்றினை நடத்தியுள்ளது. இவ்வாறான சடங்குகள் நடத்துவதன் மூலமாக தம் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகின்றார்கள். மரணத்தைப் பற்றிய உணர்வு வந்து அதனை அனுபவிக்கின்ற வேளையில் வாழ்க்கைக்கான ஒரு புதிய உத்தி கிடைக்கும் என்று இவ்வாறான நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் கூறினார். அதற்காக தனியாக சவப்பெட்டி செய்து அதில் அவர்கள் நலமாக மரணித்தல் என்ற நிலையில் கலந்துகொள்கின்றனர்.[4] வாழும்போதே இறுதிச்சடங்கு என்பது போலி இறப்புச்சடங்கு (Fake funeral) என்று அழைக்கப்படுகிறது.

சர்ச்சை[தொகு]

வாழும்போதே இறுதிச் சடங்குகள் தொடர்பாக பல சர்ச்சைகள் உள்ளன.

மரணத்திற்குப் பிறகு மட்டுமே இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுன்றனர். இறந்தவர்களை உண்மையாக மதிக்க ஒரே வழி இதுதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.[5]

ஒருவரின் வாழ்க்கையில் சாதனைகளை பட்டியலிடுவது பெரும்பாலும் இந்த விழாவின் போது செய்யக்கூடிய ஒரு பிரபலமான விஷயமாக இருப்பதால், இறுதிச் சடங்குகள் செய்து கொள்பவர் தற்பெருமை கொள்வதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்தலாம் என்பதால், இந்த இறுதிச் சடங்குகளை தன்னலம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும் தொலைக்காட்சியில் உயிருடன் இருந்தபோதே இறுதி சடங்கை நடத்திய மிசுனோ தக்கிகோ என்பவர் இவ்வகையான வாழும்போதே இறுதிச் சடங்கின் நடத்துவதன் நோக்கம் தான் உயிருடன் இருக்கும்போதே தனக்கு மிகவும் பிடித்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதற்காகவே என்று கூறியிருந்தார். [6]

தமிழ்நாடு[தொகு]

தமிழ்நாட்டில் இவ்வாறான சடங்கு பாடைக் காவடி என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அது மேலே குறிப்பட்ட இறுதிச் சடங்குகளில் இருந்து வேறுபட்ட ஒரு நேர்த்திக்கடனாக செய்யப்படுகிறது. இந்தச் சடங்கானது தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் என்ற ஊரில் உள்ள சீதாளதேவி மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் பாடைத் திருவிழாவின்போது மேற்கொள்ளப்படுகிறது. உடல் நிலை சரியில்லாமல் போனவர்கள் தங்கள் உயிரைக் காக்கவேண்டி அம்மனை வேண்டி, பாடைக் காவடியில் வருவதாக வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவர்கள். இவ்வாறு பாடைக் காவடி செலுத்துகிறார்கள். இந்த பக்தர்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பார்கள். நேர்த்திக்கடன் நாளில் கோயிலின் அருகில் ஓடும் குடமுருட்டி ஆற்றில் பக்தர் நீராடுவார். பின்னர், அவர் ஒரு பாடையில் படுக்க வைக்கப்படுவார். ஒருவர் இறந்தால் எவ்வாறு அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறதோ அதே போலவே இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்படும். அவருக்கு நாடிக்கட்டு போடப்படும், இரண்டு கால் கட்டைவிரல்களும் கட்டப்படும். நெற்றியியல் காசு ஒட்டப்படும். இந்தப் பாடையை நான்குபேர் சுமந்த்துச் செல்வர். இந்த படையின் முன் பக்தரின் உறவினர் தீச்சட்டி ஏந்தி வருவார். இவருக்கு முன் தாரை தப்பட்டை அடித்துவருவர். இந்த பாடையைத் தூக்கிக்கொண்டு கோயிலைச் சுற்றி மூன்று முறை வலம் வருவர். கோயிலின் முன் மண்டபத்தில் பாடையைக் கொண்டுவந்து இறக்கியதும், கோயில் பூசாரி வந்து அன்னையை வேண்டிக்கொண்டு. அபிசேக நீரைப் பாடையில் இருப்பவரின் மீது தெளித்து திருநீறு பூசி எழச் செய்வார்.[7]

புனைவுகள்[தொகு]

 • எம்பயர் ரெக்கார்ட்ஸ்
 • ஃப்யூச்சரமா
 • விக்கல் (தொலைக்காட்சி தொடர்)
 • ப்ரேயரில் லிட்டில் ஹவுஸ்
 • தி லிவிங் வேக்
 • திருமதி பிரவுனின் பாய்ஸ்
 • சிவப்பு எதிராக நீலம்
 • வானிலை மனிதன்
 • எங்கள் நட்சத்திரங்களில் தவறு
 • பாஸ்டன் சட்ட (சீசன் 2, அத்தியாயம் 14)
 • டாம் சாயர்

அபுனைவு[தொகு]

 • மோரியுடன் செவ்வாய்

இந்நூலின் காரணமாகவே வாழும்போதே இறுதிச்சடங்குகள் மிகவும் பிரபலமடைந்தன. பாராட்டப்படுவதற்கு ஒருவர் இறக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்ற கேள்வியை அவர் அந்நூலில் எழுப்பியிருந்தார்.

வாழும்போதே இறுதிச் சடங்கு என்பது உயிருள்ளவர்களைப் போற்றுவதற்காகவும், பாராட்டுவதற்காகவும் மேற்கொள்ளப்படுவதாகும்.

குறிப்புகள்[தொகு]