வாள் மங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாள்மங்கலம் (வாண்மங்கலம்) [1] என்னும் துறையைச் சேர்ந்த பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. புறநானூறு 96 இந்தத் துறை புறநானூற்றில் பாடாண் திணையில் வருகிறது.

இலக்கணம்[தொகு]

போருக்கு எழும் அரசனின் வாளை வாழ்த்துவது வாள் மங்கலம் என்று தொல்காப்பியமும்,[2] புறப்பொருள் வெண்பாமாலையும் [3] குறிப்பிடுகின்றன.

இலக்கியம்[தொகு]

ஔவையார், தொண்டைமானிடம் அதியமானுக்காகத் தூது சென்றார். அச்சூழலில் அவருக்குத் தொண்டைமான், நெய் பூசிப் பளபளவென அடுக்கப்பட்டிருந்த தன் படைக்கொட்டிலைக் காட்டினான். அதியமானின் படைக்கலன்கள் ‘போரிட்டுப் போரிட்டு கொல்லன் உலையில் கூர் வடிக்கப்பட்டு வருகின்றன’ என்று அதியமானின் போர்த்திறத்தை ஔவையார் எடுத்துரைத்தார்.[4] இது வாள் மங்கலம் என்னும் துறை.

அடிக்குறிப்பு[தொகு]

  1. வாள் மங்கலம் என்னும் சொற்கள் புணரும்போது வாண்மங்கலம் எனப் புணரும்.
  2. மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும் (தொல்காப்பியம், புறத்திணையியல், 30, பாடாண் திணை)
  3. கயக்கு அருங்கடல் தானை
    வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 223. பாடாண் படலம்)
  4. இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
    கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
    கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
    பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
    கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
    உண் டாயின் பதம் கொடுத்து,
    இல் லாயின் உடன் உண்ணும்,
    இல்லோர் ஒக்கல் தலைவன்,
    அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே. (புறநானூறு 96)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாள்_மங்கலம்&oldid=3212223" இலிருந்து மீள்விக்கப்பட்டது