உள்ளடக்கத்துக்குச் செல்

வால்ட்டர் குரோப்பியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வால்ட்டர் அடொல்ஃப் ஜியோர்க் குரோப்பியசு (Walter Adolph Georg Gropius) ஒரு செருமன் கட்டிடக்கலைஞரும், "பௌகவுசு" சிந்தனைக் குழுவின் நிறுவனரும் ஆவார்.[1] லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, லெ கொபூசியே, பிராங் லாயிட் ரைட் ஆகியோருடன் இவரும் நவீனத்துவக் கட்டிடக்கலையின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.

குடும்பமும் இளமைக்காலமும்

[தொகு]

பேர்லினில் பிறந்த வால்ட்டர் குரோப்பியசு அடோல்ஃப் குரோப்பியசுக்கும், பிரசிய அரசியல்வாதியான ஜியோர்க் சாம்வெபரின் மகளான மனோன் அகசுத்தே போலின் சாம்வெபர் (1855–1933) என்பவருக்கும் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். வால்ட்டரின் தந்தையுடன் உடன்பிறந்தாரான மார்ட்டின் குரோப்பியசு (1824-1880) பேர்லினில் உள்ள அலங்காரக் கலை அருங்காட்சியகத்தை வடிவமைத்த கட்டிடக்கலைஞரும் "கார்ல் பிரீட்ரிச் சிங்கெல்"லைப் பின்பற்றியவரும் ஆவார். "ஃபீல்ட் மார்சல் கெப்பார்ட் லெபெரெக்ட் வொன் புளூச்செர்" என்பவரின் கீழ் வாட்டர் லூ சண்டையில் போரிட்ட, வால்ட்டரின் பாட்டனாருடன் திருமணத்துக்கு முன்னர் ஒரே அறையில் வாழ்ந்தவர் சிங்கெல்.[2]

1915 ஆம் ஆண்டில் குரோப்பியசு, குஸ்த்தாவ் மாலெர் என்பவரின் விதவையான அல்மா மாலெர் (1879–1964) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். வால்ட்டருக்கும் அல்மாவுக்கும் மகளான மனோன் 1916 இல் பிறந்தார். 1935 இல் இவர் தனது 18 ஆவது வயதில் போலியோ காரணமாக இறந்தபோது, இசையமைப்பாளர் அல்மான் பேர்க் அவரின் நினைவாகத் தனது வயலின் இசையாக்கம் ஒன்றை எழுதினார். குரோப்பியசும் அல்மாவும் 1920 இல் மணமுறிவு பெற்றனர். 1923 அக்டோபர் 16 ஆம் தேதி குரோப்பியசு இல்சே (பின்னர் "இசே" என மாற்றிக்கொண்டார்) பிராங்க் என்பவரை மணந்துகொண்டார். இவர்கள் இருவரும் 1969 இல் குரோப்பியசு இறக்கும்வரை ஒன்றாக வாழ்ந்தனர். இவர்கள் இருவரும் ஒரு பெண் பிள்ளையைத் தத்து எடுத்தனர். இப்பெண் "அதி: என அறிபப்பட்ட பீட்டி குரோப்ப்பியசு ஆவார்.[3] இசே குரோப்பியசு 1983 ஆம் ஆண்டு யூன் 9 ஆம் தேதி மசச்சூசெட்சின் லெக்சிங்டனில் காலமானார். வால்ட்டரின் ஒரே சகோதரியான மனோன் புச்சார்ட் என்பவரே செருமன் திரைப்பட, நாடக நடிகைகளான மேரி புச்சார்ட், பெட்டினா புச்சார்ட் ஆகியோரினதும்; அருங்காட்சியகக் காப்பாளரும், கலை வரலாற்றாளருமான வீல்ஃப் புச்சார்டினதும் பூட்டி ஆவார்.[4]

தொடக்க காலத் தொழில் வாழ்க்கை

[தொகு]

குரோப்பியசுக்கு வரையத் தெரியாது என்பதால் அவரது தொழில் வாழ்க்கை முழுவதும், இதற்காக அவர், அவரது பங்காளிகளிலோ, உதவியாளர்களிலோ தங்கியிருந்தார். படிக்கும்போது தனது வீட்டுப் பாடங்களைச் செய்வதற்கு ஒரு உதவியாளரை அமர்த்தியிருந்தார். 1908 இல் மியூனிச்சிலும், பேர்லினிலும் நான்கு பருவங்கள் கட்டிடக்கலை கற்ற பின்னர், பெயர்பெற்ற கட்டிடக்கலைஞரும், தொழிற்றுறை வடிவமைப்பாளருமான பீட்டர் பேரென்சின் நிறுவனத்தில் இணைந்தார்.அக்காலத்தில் இவரது உடன் பணியாளர்களாக லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, லெ கொபூசியே, டீட்ரிச் மார்க்சு ஆகியோர் இருந்தனர்.

1910 இல் பாரென்சின் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய வால்ட்டர், உடன் பணியாளராக இருந்த அடோல்ஃப் மெயர் என்பவருடன் சேர்ந்து பேர்லினில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். தொடக்க நவீனத்துவக் கட்டிடங்களுள் ஒன்றாகக் கருதப்படும், அல்பிரெட்-அன்-டெர்-லெயின் என்னும் இடத்தில் அமைந்த காலணித் தொழிற்சாலையான ஃபேகசுவர்க்கின் வடிவமைப்புக்கான பெருமையை இருவரும் ஒருங்கே பெற்றனர். வால்ட்டரும், மெயரும் கட்டிடத்தின் முகப்பை மட்டுமே வடிவமைத்தனர். எனினும், கட்டிட முகப்பின் கண்ணாடித் திரைச் சுவர்கள், "வடிவம் செயற்பாட்டை வெளிக்காட்டுகிறது" என்ற நவீனத்துவக் கொள்கையையும், உழைப்பாளர் வகுப்பினரின் உடல்நலம் குறித்த வால்ட்டரின் அக்கறையையும் விளக்குவதாக அமைந்துள்ளது. இக்கட்டிடம் தற்போது ஐரோப்பிய நவீனத்துவத்தின் தொடக்க நினைவுச் சின்னமாகக் கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bauhaus பரணிடப்பட்டது 2017-03-28 at the வந்தவழி இயந்திரம், The Tate Collection, retrieved 18 May 2008
  2. Wolf Burchard,‘“Onkel Walter”: Family Memories of Walter Gropius’, The Decorative Arts Society Newsletter 104 (Summer 2015): 5
  3. "Recollections by Ati Gropius Johansen, daughter of Walter and Ise Gropius" பரணிடப்பட்டது 2014-05-05 at the வந்தவழி இயந்திரம், ArchitectureBoston, Summer 2013 issue: American Gropius (Volume 16 n2)
  4. Deutsches Geschlechterbuch, volume 3, 1972
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்டர்_குரோப்பியசு&oldid=3400770" இலிருந்து மீள்விக்கப்பட்டது