வாலைக்கும்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாலைக்கும்மி [1] என்னும் நூல் கொங்கணர் என்னும் சித்தரால் செய்யப்பட்டது. நூல் தோன்றிய காலம் 16 ஆம் நூற்றாண்டு. இவர் இச் சித்தரால் செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட நூல்களில் இது பெரிதும் போற்றப்படுகிறது. இந்த நூலில் கும்மி மெட்டில் அமைந்த 110 கண்ணிகள் உள்ளன. 'வாலைப் பெண்ணே' என விளித்துச் சில பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அஞ்செழுத்து மந்திரம், ஔவையாரின் நீதிகள், யோக மார்க்கம் முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன. [2]

பாடல்கள் எடுத்துக்காட்டு [3][தொகு]

உடல் ஊத்தைப் பாண்டம் அன்று
ஊத்தைச் சடலமென் றெண்ணாதே - இது
உப்பிட்ட பண்டமென் றெண்ணாதே
பார்த்த பேருக்கு ஊத்தையில்லை - இதைப்
பார்த்துக்கோ உன்றன் உடம்பினுள்ளே [4]
ஔவை வாக்கு
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாது என்று
கண்டுகொண்டு முன் ஔவை சொன்னாள் அது
உண்டோ இல்லையோ வாலைப் பெண்ணே
வாலை என்னும் தெய்வம் [5]
வாலைக்கு மேலான தெய்வம் இல்லை - மானம்
காப்பது சேலைக்கு மேலும் இல்லை
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை - வாலைக்
கும்மிக்கு மேலான பாடல் இல்லை.
நீதி
பஞ்சைப் பனாதியை அடிக்காதே - அந்தப்
பாவத் தொகையை முடிக்காதே
தஞ்சம் என்றோரைக் கெடுக்காதே - யார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே
நீதி
சிவனடியாரை வேதியரைச் - சில
புலவர் ஞானப் பெரியோரை
மவுனமாகவும் வையாதே - அவர்
மனது நோகவும் செய்யாதே
ஆடுங்கள்
ஆடுங்கள் பெண்டுகள் எல்லாரும் - அந்த
அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் - வாலைப்
பாதத்தைப் போற்றிக்கொண்டு ஆடுங்கடி

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 207. 
  2. இவர் குறிப்பிடும் யோகக் குழூஉக்குறிகள் விளங்கவில்லை
  3. பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  4. இது கும்மி மெட்டு ஓசையில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏனையவை பொருள் நோக்குப் பிரிப்பு
  5. 'பரை' என்னும் குமரித்தெய்வம். வாலை = வாலிபம், பருவ வலிமை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலைக்கும்மி&oldid=1489306" இருந்து மீள்விக்கப்பட்டது