வாமன முனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாமன முனிவர் 14 ஆம் நூற்றாண்டில் காஞ்சிக்கு அருகிலுள்ள சமணக் காஞ்சி எனுஇம் திருப்பருத்திக்குன்றம் என்னும் ஊரில் வாழ்ந்த சைனப் புலவர். இங்குள்ள சினாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் [1] இவரைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றன.

இந்தச் சமணர் கோயில் மரத்தடியில் இருவரின் பாதங்கள் பெறிக்கப்பட்டுள்ளன. மல்லிசேன முனிவர் ஆசிரியர். இவரது மாணவர் புஷ்பசேன முனிவர். இவர்களது பாதங்கள் இவை என அவற்றின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மல்லிசேன முனிவரின் முழுப் பெயர் மல்லிசேனர் வாமன முனிவர். இவருக்கு வாமணாசாரியர் என்னும் பெயரும் உண்டு.[2]

இவர் மேருமந்திர புராணம் என்னும் நூலை இயற்றியுள்ளார். வடமொழியிலுள்ள சைன மதக் கிரந்தங்களான பஞ்சாதிகாயம், பிரவசன சாரம், சமயாசாரம், ஸ்யாத்வசன மஞ்சரி என்னும் நூல்களுக்கும் வடமொழியில் உரை எழுதியுள்ளார்.

தமிழில் உள்ள ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசித் திரட்டு (நீலகேசித் தெருட்டு) என்னும் நூலுக்கும் தமிழில் உரை எழுதியுள்ளார். இந்த உரைநூல் சமய திவாகர விருத்தி என்னும் பெயர் கொண்டது. இந்த நூலால் இவரைச் சமய திவாகர முனிவர் என்றும் குறிப்பிட்டனர்.

மற்றும் இவரது இருமொழி வல்லமையைப் போற்றி 'உபயபாஷா சக்கரவர்த்தி' எனப் பட்டம் சூட்டியும் இவரை வழங்கினர்.

இவர் மேருமந்திர புராண அடிகளை மேற்கோள் தந்து 'எம் ஓத்து' எனக் குறிப்பிடுகிறார்.[3] இவர் எம் ஓத்து என் குறிப்பிடும் சில பாடலடிகள் மேருமந்தர புராணத்தில் இல்லை. அவை இவர் எழுதிய சாந்தி புராணத்தில் இருக்ககூடும்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. காலம் 1382
  2. வந்தேகம் வாமனாசார்யம் மல்லிஷேண முநீச்வரம்
  3. மருவிய வினைகள் மாற்றா மாசினைக் கழுவி வீட்டைத்
    தருதலால் புனிதனாக்கும் தன்மையால் புண்ணியம் ஆமே
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாமன_முனிவர்&oldid=2718282" இருந்து மீள்விக்கப்பட்டது