வான் அசிசா வான் இஸ்மாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டத்தோ ஸ்ரீ டாக்டர்

வான் அசிசா வான் இஸ்மாயில்
Wan Azizah 2.jpg
தலைவர், மக்கள் நீதிக் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1999
தனிநபர் தகவல்
பிறப்பு 3 டிசம்பர் 1952
சிங்கப்பூர்
அரசியல் கட்சி Parti Keadilan Rakyat.png மக்கள் நீதிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
பிள்ளைகள் 6
மகள்: நூருல் இசா அன்வார்
இருப்பிடம் கோலாலம்பூர்
பணி மருத்துவர், அரசியல்வாதி
சமயம் இஸ்லாம்
இணையம் வான் அசிசா இணையத்தளம்

டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் (பிறப்பு: 1952) என்பவர் மலேசிய அரசியல்வாதி. மலேசியாவில் மக்கள் நீதிக் கட்சியை உருவாக்கி அதன் தலைவராக பதவி வகித்தவர். 1990களில் மலேசியாவின் துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் துணைவியார்.

மலேசிய நாடாளுமன்ற மக்களவையில், மார்ச் 2008 லிருந்து 31 ஜூலை 2008 வரை, எதிர்க்கட்சிகளின் தலைவராகச் சேவையாற்றியவர். தன்னுடைய கணவருக்கு வழிவிடுவதற்காக தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். 26 ஆகஸ்ட் 2008இல் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றி பெற்றார்.[1]

வான் அசிசா வான் இஸ்மாயில் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில், கண் மருத்துவத்தில் நிபுணராகப் பணியாற்றியவர். இவர் அயர்லாந்து அரச மருத்துவக் கல்லூரியின் மகப்பேறியல், பெண்யோயியல் துறையில் தங்கப்பதக்கம் பெற்றவர்.

வரலாறு[தொகு]

வான் அசிசா வான் இஸ்மாயில், சிங்கப்பூர் கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையில், 3 டிசம்பர் 1952இல் பிறந்தார். அப்போது மலேசியாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இருந்தது. தந்தையாரின் பெயர் வான் இஸ்மாயில் வான் மொகமட். தாயாரின் பெயர் மரியா காமிஸ்.

வான் அசிசா வான் இஸ்மாயில், கெடா, அலோர் ஸ்டார் நகரில் இருக்கும் செயிண்ட் நிக்கலஸ் கான்வெண்ட் பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர், நெகிரி செம்பிலான், சிரம்பான் நகரில் இருக்கும் துங்கு குருசியா கல்லூரியில் மேல்படிப்பைத் தொடர்ந்தார்.[2]

அயர்லாந்தில் மருத்துவப் படிப்பு[தொகு]

அதன் பின்னர் 1973ஆம் ஆண்டு அயர்லாந்து, டப்ளின் நகரில் இருக்கும் அரச அறுவை மருத்துவக் கல்லூரியில் (Royal College of Surgeons) மருத்துவப் படிப்பை மேற்கொண்டு மகப்பேறியல், பெண்யோயியல் துறைகளில் கல்வியைத் தொடர்ந்தார்.

அதே துறைகளில் சிறப்புத் தேர்வு பெற்றதால், கல்லூரியின் மெக்நாத்தன் ஜான்ஸ் (MacNoughton-Jones) தங்கப் பதக்கத்தையும் வென்றார்.[3] இருப்பினும் இவர் கண் மருத்துவத் துறையில்தான் நிபுணத்துவப் பட்டத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய வான் அசிசா வான் இஸ்மாயில் கோலாலம்பூர் பொது மருத்துவமனை, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைகளில் 14 ஆண்டுகள் மருத்துவராகச் சேவைகள் செய்தார். 1993இல் இவருடைய கணவர் மலேசியாவின் துணைப் பிரதமர் ஆனதும், வான் அசிசா வான் இஸ்மாயில் தன் மருத்துவத் தொழிலை ராஜிநாமா செய்தார்.

கோலாலம்பூர் பொது மருத்துவமனை[தொகு]

கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் பணி புரியும் போது அன்வார் இப்ராஹிமின் நட்பு கிடைத்தது. 1979ஆம் ஆண்டு முதன்முறையாக கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையில் சந்தித்துக் கொண்டனர். அதுவே அவர்களைக் குடும்ப வாழ்க்கையிலும் இணைத்தது. 28 பிப்ரவரி 1980இல் அவர்களுடைய திருமணம் நடந்தது.

அப்போது அன்வார் இப்ராஹிம், அபிம் என்று அழைக்கப்படும் மலேசிய இஸ்லாமிய இளைஞர் அணியின் தலைவராக இருந்தார். வான் அசிசா வான் இஸ்மாயிலின் பெற்றோர்கள் இவர்களின் திருமணத்தை ஏற்கவில்லை. இருப்பினும் முதல் குழந்தை பிறந்த பின்னர், பெற்றோர்களின் குடும்ப உறவுகள் சுமுக நிலைக்குத் திரும்பியது.

வான் அசிசாவின் குடும்பம்[தொகு]

வான் அசிசா வான் இஸ்மாயிலின் மூதாதையர்கள் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதை வான் அசிசா வான் இஸ்மாயிலும் மறுக்கவில்லை.[4] இவருடைய தந்தையார் டத்தோ வான் இஸ்மாயில் வான் மொகமட், சீன வம்சாவளியைச் சேர்ந்த டத்தின் மரியா காமிஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

வான் இஸ்மாயில் வான் மொகமட் தேசிய பாதுகாப்பு மன்றத்தில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இவர் பினாங்கு, செபராங் பிறை, சுங்கை பாக்காப் பகுதியைச் சேர்ந்தவர். இருந்தாலும் இவருடைய பூர்வீகம் கிளாந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸ் பகுதியைச் சார்ந்ததாகும்.

ஆறு பேர் கொண்ட குடும்பத்தில், வான் அசிசா வான் இஸ்மாயில் இரண்டாவது பிள்ளை. இவருடைய தம்பி பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார். தங்கை பெர்னாமா என்று அழைக்கப்படும் மலேசிய செய்தி நிறுவனத்தில் புகைப்படச் செய்தியாளராகப் பணிபுரிகின்றார். இன்னொரு தங்கை வழக்குரைஞராகப் பணியாற்றுகின்றார்.

அரசியல்[தொகு]

அன்வார் இப்ராஹிம் 20 செப்டம்பர் 1998இல் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டதும், வான் அசிசா அரசியல் களத்தில் இறங்கினார். அதுவரை அவர் ஒரு குடும்பப் பெண்ணாக, ஒரு மருத்துவராகவே வாழ்ந்து வந்தார். பொதுவாகவே, அவர் எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொண்டவர். பெரும் புள்ளியின் துணைவியார் என்று அடையாளம் காட்டியது இல்லை.[5]

கணவர் கைது செய்யப்பட்டதும் (Reformasi movement) எனும் சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவித்தார். பெரும்பாலான மலேசியர்கள் அவருக்கு ஆதரவு அளித்ததற்கு அவருடைய எளிமைத்தனமும் ஒரு காரணமாக இருந்தது. மாற்றுவோம் மாற்றிக் காட்டுவோம் என்பதே அந்த இயக்கத்தின் தாரக மந்திரமாகவும் இருந்தது.

பின்னர், 4 ஏப்ரல் 1999இல் மக்கள் நீதிக் கட்சியைத் தோற்றுவித்தார். அந்தக் கட்சிக்குத் தலைவரும் ஆனார். 3 ஆகஸ்ட் 2003இல், மலேசியாவின் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றான மலேசிய மக்கள் கட்சியை, தன் மக்கள் நீதிக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். இந்தக் காலக்கட்டத்தில் அவருடைய கணவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

பொதுத் தேர்தல் 1999[தொகு]

1999 மலேசியப் பொதுத் தேர்தலில் வான் அசிசா, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 9077 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அத்தொகுதியில் வான் அசிசாவை எதிர்த்து, பாரிசான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ இப்ராஹிம் சாட் என்பவர் போட்டியிட்டார். 2004 பொதுத் தேர்தலிலும் அத்தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். மூன்றாவது முறையாக 2008 பொதுத் தேர்தலிலும், அதே தொகுதியில் வெற்றி வாகை சூடினார்.[6]

31 ஜூலை 2008இல் தன் நாடாளுமன்றப் பதவியை ராஜிநாமா செய்து, தன் கணவருக்கு வழிவிட்டார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்தார். பின்னர் அந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அன்வார் இப்ராஹிம் கெஅடிலான் கூட்டணியின் சார்பில் நின்று வெற்றி அடைந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

எதிர்க்கட்சித் தலைவர்கள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
லிம் கிட் சியாங்
எதிர்க்கட்சித் தலைவர் பின்னர்
அன்வார் இப்ராஹிம்
Assembly seats
முன்னர்
அன்வார் இப்ராஹிம்
நாடாளுமன்ற உறுப்பினர் பெர்மாத்தாங் பாவ்
1999–2008
பின்னர்
அன்வார் இப்ராஹிம்
Party political offices
முன்னர்
பதவி உருவாக்கம்
தலைவர் கெஅடிலான் மக்கள் நீதிக் கட்சி பதவியில் உள்ளார்
தலைவர் மக்கள் கூட்டணி (மலேசியா) பின்னர்
அன்வார் இப்ராஹிம்