உள்ளடக்கத்துக்குச் செல்

வாகை (ஊர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாகைப்பறந்தலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வாகை என்னும் ஊர் சங்ககால எயினன், நன்னன் ஆகியோர் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர். இவ்வூர் குடமலைப் பகுதியில் இருந்தது. பொன்னிற மலர்கள் பூக்கும் வாகை மரங்கள் இவ்வூரில் மிகுதியாக இருந்தன. வாகைப்பெருந்துறை என்று கூறப்படுவதால் இது ஓர் ஆற்றங்கரையில் இருந்த ஊர் எனத் தெரியவருகிறது. வாகைப்பறந்தலை என்று கூறப்படுவதால் இவ்வூர் போர்களமாக மாறியது எனத் தெரியவருகிறது. இது ஊர், சூடும் வாகைப்பூ அன்று என்பதை விளக்கும் தொடராக இதனைச் சூடாவாகை என்றனர்.

இதன் அரசன் எயினன். இவனை ஆய் எயினன் எனக் கொள்வது வரலாற்று நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமாக அமைகிறது. இவன் சிறந்த வள்ளல். இவனது ஆட்சியில் இவ்வூர் பொலிவுடன் திகழ்ந்தது. பெண் ஒருத்தியின் நல்லழகு இந்த ஊர் போல் இருந்தது என ஊரார் பேசிக்கொள்வதாகப் புலவர் ஒருவர் பாடுகிறார். [1]

மூவேந்தரும் அவ்வப்போது இதனைத் தாக்கியிருக்கின்றனர்.

பாண்டியன் தாக்கியது
இந்த ஊரைப் பசும்பூண் பாண்டியன் ஏவலால் அவனது படைத்தலைவன் அதிகன் தாக்கினான். போரில் அதிகன் கொல்லப்பட்டான். அவனது யானையும் கொல்லப்பட்டது. அதிகன் கொல்லப்பட்டதைக் கொங்கர் கொண்டாடி மகிழ்ந்தனர். [2]
சோழன் தாக்கியது
கரிகாலன் குதிரைப் படையுடன் சென்று இந்த ஊரைத் தாக்கியிருக்கிறான். அப்போது ஒன்பது மன்னர்கள் யானைமீதேறி வெண்கொற்றக் குடையுடன் வந்து கரிகாலனை எதிர்கொண்டனர். ஆனால் அவர்களால் கரிகாலனை எதிர்த்து நிற்க முடியவில்லை. தம் கொற்றக் குடைகளைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். [3]
சேரன் தாக்கியது
வாகை சேரர் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததை நன்னன் கைப்பற்றிக்கொண்டான். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். (பதிற்றுப்பத்து நாலாம்பத்துத் தலைவன்) இவ்வூரைத் தாக்கினான். அப்போது அதனை ஆண்டுகொண்டிருந்த அரசன் நன்னனைக் கொன்றான். வாகை நகரை மீட்டுத் தனதாக்கிக்கொண்டான். [4]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. வண்கை எயினன் வாகை அன்ன இவள் நலம் - படைமங்க மன்னியார் பாடல் புறநானூறு 351
  2. கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன் களிரொடு பட்ட ஞான்றை ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பு - பரணர் பாடல் குறுந்தொகை 393
  3. பரியுடை நன்மான் வெருவரு தானையொடு வேற்றுப்புலத்து இறுத்த வெருவளக் கரிகால் முன்னிலை செல்லார் சூடா வாகைப் பறந்தலை ஆடு பெற ஒன்பது குடையும் நண்பகல் ஒழித்த பீடு இல் மன்னர் போல ஓடுவை மன்னால் வாடை - பரணர் பாடல் அகநானூறு 125
  4. குடாஅது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இழந்த நாடு தந்து அன்ன - கல்லாடனார் பாடல் அகநானூறு 199

கருவிநூல்

[தொகு]
  1. அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
  2. INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகை_(ஊர்)&oldid=2565338" இலிருந்து மீள்விக்கப்பட்டது