வாகைக்குளம் பறவைகள் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாகைக்குளம் பறவைகள் காப்பகம் என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், வீராசமுத்திரம் ஊராட்சியில் அமைந்துள்ள வாகைக்குளம் நீர்நிலையில் அமைந்துள்ளது. இந்த நீர்நிலைக்கு ராம நதி அணையிலிருந்து நீர் வருகிறது. இக்குளத்தில் இருந்து 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.[1] இந்த குளத்தி ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன.[2]

வரலாறு[தொகு]

வாகைக்குளம் நீர்நிலைப் பகுதியில் 1996 ஆம் ஆண்டு 12.6 எட்டேர் பரப்பளவில் சமூகக் காடுகளாக கருவேல மரங்கள் தமிழ்நாடு வனத்துறையால் நட்டு வளர்க்கப்பட்டன. 2007 ஆம் ஆண்டு மரங்களை வெட்ட வனத்துறை ஏலம் விட்டது. அதன் பிறகு குளத்தில் இருந்த 80 % மரங்கள் வெட்டப்பட்டன. குளத்தில் மழை நீர் பெருகியதால் மீதமுள்ள மரங்களை வெட்ட இயலவில்லை. அச்சமயத்தில் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவளக் காப்ப மையத்தின் ஆய்வாளர்கள் இந்தக் குளப்பகுதிக்கு ஆய்வுக்காக வந்தனர். அவர்களின் ஆய்வில் இந்த வாகைக்குளத்தில் வெள்ளை அரிவாள் மூக்கன், நீர்க்காகம், பாம்புத் தாரா, கூழைக்கடா, சாம்பல் நாரை, நத்தைக் குத்தி நாரை என 20 சிற்றினங்களைச் சார்ந்த சுமார் பத்தாயிரம் பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டது.

இதன் பிறகு கிராம மக்களுக்கு பறவை பாதுகாப்பு குறித்த விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கு பறவை நோக்கல் பயிற்சி வழங்கப்பட்டது. மக்களும், ஆய்வாளர்களும் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு எஞ்சிய மரங்களை வெட்டாமல் பறவைகளைப் பாதுகாக்க திருநெல்வேலி மண்டல வனப்பாதுகாவலர்களுக்கு மனு வழங்கப்பட்டது. இதனால் மரங்களை வெட்ட அப்போதைய வனப்பாதுகாவலர் அனுமதி மறுத்தார். வாகைக்களுத்தை பறவைகள் காப்பிடமாக அறிவிக்ககுகோரி ஆய்வாளர்கள் 2010 சூன் மாதம் வரைவு அறிக்கையை அரசுக்கு அளித்தனர். இதற்கிடையில் மரங்களை வெட்ட ஏலம் எடுத்தவர்கள் மரங்களை வெட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடினர். 2010இல் இந்த வழக்கு தள்ளுபடியானது. ஆனாலும் வனத்துறையிடம் இருந்து மரங்களை வெட்ட குத்தகைதாரர்கள் அனுமதி பெற்றனர். மரங்களை வெட்டத் தொடங்கியபோது மக்கள் மறியலில் ஈடுபட்டு மரங்களை வெட்டுவதை தற்காலிகமாக தடுத்தனர். பின்னர் மரங்களை வெட்டக்கூடாதென்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டு நிரந்தர தடையான பெறப்பட்டது.

வாகைக்குளத்தில் 120 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 20 சிற்றினங்கள் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. ஏறக்குறைய 15,000 உள்ளூர், வலசை பறவைகள் இக்குளத்திற்கு ஆண்டுதோறும் வருகின்றன.

பல்லுயிர் பரவல் சட்டம் 2020இன்படி வாகைக்குளம் பல்லுயிர் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட தேர்வாகியுள்ளதாகத் தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரியம் 2020 அக்டோபர் மாதம் செய்திக் குறிப்பு வெளியிட்டது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "வாகைக்குளத்தை பலுயிர் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிக்கை அக்டோபர்". தினமணி. 2021-10-07. 2021-10-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தென்மாவட்ட நீர்நிலைகளுக்கு அதிகளவில் வெளிநாட்டு பறவைகள் வருகை: ஐரோப்பிய, மங்கோலிய நாடுகளில் இருந்து வந்துள்ளன". Hindu Tamil Thisai. 2021-11-08 அன்று பார்க்கப்பட்டது.
  3. "பல்லுயிர் சின்னமாக அங்கீகரிக்கப்படுமா வாகைக்குளம்?". Hindu Tamil Thisai. 2021-11-08 அன்று பார்க்கப்பட்டது.