வழு (இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். வழு என்பது பிழையான அல்லது குற்றமுடைய பேச்சும் எழுத்தும் வழு எனப்படும். இலக்கண முறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். வழுவாக இருப்பினும் இலக்கணமுடையதைப் போல ஏற்றுக்கொள்ளும் இடம் வழுவமைதி எனப்படும்

வழுவகைகள்[தொகு]

வழு ஏழு வகைப்படும். அவை திணைவழு, பால்வழு, இடவழு, காலவழு, வினாவழு. விடைவழு, மரபுவழு என்பனவாம். பின்வரும் நன்னூற் சூத்திரம் அதனை விளக்குகிறது.

திணையே பால் இடம் பொழுது வினா இறை மரபாம் ஏழும் மயங்கினாம் வழுவே - [1]

1. திணைவழு[தொகு]

உயர்திணை, அஃறிணை என்னும் இருவகைத் திணைகளும் ஒன்றோடொன்று மயங்கி(மாறி) வருவது திணைவழுவாகும்.

எடுத்துக்காட்டு[தொகு]

1. பூங்கோதை வந்தது (உயர்திணை எழுவாய் அஃறிணைப் பயனிலையைக் கொண்டு முடிந்தது) 2. பசு வந்தாள் (அஃறிணை எழுவாய் உயர்திணைப் பயனிலையைக் கொண்டு முடிந்தது) எனவே இவ்விரு தொடர்களும் திணைவழுவாயிற்று.

2. பால்வழு[தொகு]

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐவகைப்பாலும் ஒன்றோடொன்று மயங்கி வருவது பால்வழுவாகும்.

எடுத்துக்காட்டு[தொகு]

1. மாறன் வந்தாள் (ஆண்பால் எழுவாய் பெண்பால் பயனிலை கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

2. தேன்மொழி வந்தான். (பெண்பால் எழுவாய் ஆண்பால் பயனிலை கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

3. மாணவன் தந்தார். (ஆண்பால் எழுவாய் பலர்பால் பயனிலை கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

4. மாடுகள் மேய்ந்தது. (பலவின் பால் எழுவாய் ஒன்றன் பால் பயனிலை கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

5. ஆடு மேய்ந்தன. (ஒன்றன் பால் எழுவாய் பலவின் பால் பயனிலை கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

3. இடவழு[தொகு]

தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகை இடமும் ஒன்றோடொன்று மயங்கி வருவது இடவழுவாகும்.

எடுத்துக்காட்டு[தொகு]

1. நான் உண்டாய். (தன்மை ஒருமைப்பெயர் முன்னிலைப் பயனிலையைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று) 2. நீங்கள் உண்டோம். (முன்னிலை பன்மைப்பெயர் தன்மைப் பயனிலையைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று) 3.உண்டீர்கள்.(படர்க்கை பன்மைப்பெயர் முன்னிலைப் பயனிலையைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

4. காலவழு[தொகு]

இறந்தகாலம் , நிகழ்காலம், எதிர்காலம் என மூவகைக் காலமும் ஒன்றோடொன்று மயங்கி வருவது கால வழுவாகும்.

எடுத்துக்காட்டு[தொகு]

1. நான் நேற்று வருவேன். (நேற்று என்னும் இறந்தகாலப் பெயர் வருவேன் என்னும் எதிர்கால வினைமுற்றைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

2. இன்று வருவேன். (இன்று என்னும் நிகழ்காலப் பெயர் வருவேன் என்னும் எதிர்கால வினைமுற்றைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

3. நாளை வந்தேன்.('நாளை என்னும் எதிர்காலப் பெயர் வந்தேன் என்னும் எதிர்கால வினைமுற்றைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)

5. வினாவழு[தொகு]

அறுவகை வினாக்கள் மயங்கி வருவது வினாவழுவாகும்.

எடுத்துக்காட்டு[தொகு]

1. கறக்கின்ற மாடு பசுவோ எருதோ?. (கறக்கின்ற என்னும் குறிப்புச்சொல்லால் கறக்கின்ற மாடு பசு என்பது உறுதியாகிய பின்னும் பசுவோ எருதோ? என ஐயம் கொண்டு வினவுவது வழுவாகும். மேலும் எருது கறப்பதில்லை எனவே ஐயவினா வினவியது வழுவாகும் )

6. விடைவழு[தொகு]

வினாவிற்குப் பொருந்தா விடை பகர்தல் விடைவழுவாகும். இதனைச் செப்புவழு என்றும் கூறுவர்.

எடுத்துக்காட்டு[தொகு]

1. பருப்பு வாங்கி வருவாயா?. என்னும் வினாவிற்குச் செருப்பு விலை அதிகம் என்று விடை பகர்தல் விடைவழுவாகும்.

7. மரபுவழு[தொகு]

மரபுத்தொடர்கள் மயங்கி வருவது மரபு வழுவாகும்.

எடுத்துக்காட்டு[தொகு]

1. குயில் குளறும். (குயில் கூவும் என்பதே சரியான ஒலிமரபுத்தொடராகும். குளறும் என்று வந்ததால் வழுவாயிற்று) 2. தென்னை இலை. (தென்னை ஓலை என்பதே சரியான சினைமரபுத் தொடராகும். இலை என்று வந்ததால் மரபு வழுவாயிற்று.)

மேற்கோள்கள்[தொகு]

  1. நன்னூல் -சூத்திரம் 375

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழு_(இலக்கணம்)&oldid=3797750" இலிருந்து மீள்விக்கப்பட்டது