உள்ளடக்கத்துக்குச் செல்

வழி (ஆங்கிலத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழி (The Way)
திரைப்பட விளம்பரம்
இயக்கம்எமீலியோ எஸ்தேவெஸ் (Emilio Estevez)
தயாரிப்புடேவிட் அலெக்சானியன் (David Alexanian)
எமீலியோ எஸ்தேவெஸ் (Emilio Estevez)
கதைஎமீலியோ எஸ்தேவெஸ் (Emilio Estevez)
இசைடைலர் பேட்ஸ் (Tyler Bates)
நடிப்புமார்ட்டின் ஷீன் (Martin Sheen)
தெபொரா காரா உங்கெர் (Deborah Kara Unger)
ஜேம்ஸ் நெஸ்பிட் (James Nesbitt)
யோரிக் ஃபான் வாகேனிங்கென் (Yorick van Wageningen)
எமீலியோ எஸ்தேவெஸ் (Emilio Estevez)
ஒளிப்பதிவுகுவான் மிகேல் அஸ்பீரோஸ் (Juan Miguel Azpiroz)
படத்தொகுப்புராவுல் டாவலோஸ் (Raúl Dávalos)
கலையகம்ஃபில்மாக்ஸ் (Filmax)
எலீக்சிர் ஃபில்ம்ஸ் (Elixir Films)
விநியோகம்ஐக்கான் என்டெர்டெயின்மென்ட் இன்டர்நேஷனல் (Icon Entertainment International)
ப்ரோட்யூசெர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் ஏஜென்சி (Producers Distribution Agency (US))
வெளியீடுசெப்டம்பர் 10, 2010 (2010-09-10)(TIFF)
நவம்பர் 19, 2010 (எசுப்பானியா)
அக்டோபர் 7, 2011 (ஐக்கிய அமெரிக்கா – limited)
அக்டோபர் 21, 2011 (ஐக்கிய அமெரிக்கா – wide)
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
எசுப்பானியா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$4,430,765

வழி (The Way) என்பது 2010இல் வெளியான ஓர் அமெரிக்க வாழ்க்கைப் பதிவு திரைப்படம் ஆகும். இப்படத்தைப் புகழ்பெற்ற நடிகர் மார்ட்டின் ஷீன் என்பவர் தம் மகன் எமீலியோ எஸ்தேவெஸ் என்பவரோடு இணைந்து உருவாக்கியுள்ளார்.

எசுப்பானியா நாட்டில் பிரபலமான "சந்தியாகோ திருப்பயணம்" (Camino de Santiago) என்பதை அனைவருக்கும் அறிமுகம் செய்வதற்காக இப்படத்தை உருவாக்கியதாக மார்ட்டின் ஷீன் கூறியுள்ளார். இப்படம் மக்களுக்காக, மனித வாழ்வைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, எதையும் எதிர்ப்பதற்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[1][2]

கதை விளக்கம்

[தொகு]

கி.பி. 11ஆம் நூற்றாண்டிலிருந்தே கிறித்தவர்கள் திருப்பயணமாகச் செல்கின்ற ஒரு "வழி" ஐரோப்பாவில் எசுப்பானிய நாட்டில் உள்ளது. அது "El Camino de Santiago" (Way of St. James) என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் திருப்பயணியர் எசுப்பானியாவின் வட மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள சந்தியாகோ நகர முதன்மைக் கோவிலுக்குத் திருப்பயணமாகச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள புனித யாக்கோபு (சந்தியாகு, சந்தியாகப்பர்) என்னும் இயேசுவின் திருத்தூதருக்கு வணக்கம் செலுத்துவது வழக்கம்.

திரைப்படத்தில், தாமசு ஏவ்ரி (Thomas Avery) என்னும் அமெரிக்க கண் மருத்துவர் பிரான்சு நாட்டுக்குச் செல்கின்றார். எசுப்பானியாவையும் பிரான்சையும் பிரிக்கின்ற இயற்கை எல்லையாகிய பிரன்னீய மலைப் பகுதியில் ஒரு புயலில் சிக்கி இறந்துபோன தம் மகன் டேனியலின் உடலை மீட்டுக் கொணர்வதே அவருடைய பயணத்தின் குறிக்கோள்.

அவருடைய மகன் டேனியல் ஒரு திருப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். எசுப்பானியாவின் வடமேற்குக் கடற்கரையில் புனித யாக்கோபுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலுக்கு கால்நடையாகச் சென்று ஓர் ஆன்மிக முயற்சி நிறைவேற்ற விரும்பிய அவர் பிரன்னீய மலைப் பகுதியில் வீசிய கொடும் புயலில் சிக்கி உயிர்துறந்தார். மகனை இழந்த துயரம் தாளாத தாமசு ஏவ்ரி வேதனையால் உள்ளம் உடைந்திருந்த போதிலும், தம் மகன் டேனியல் தொடங்கி நிறைவேற்ற முடியாத பயணத்தைத் தாமே தொடர்ந்து நிறைவேற்றி விடுவதாக உறுதி கொள்கின்றார். இறந்த தம் மகனுடைய சாம்பல் அடங்கிய பெட்டியையும் எடுத்துக்கொண்டு மகனின் கனவை நிறைவேற்றவும் தமது வாழ்வின் பொருளைக் கண்டுகொள்ளவும் நடந்து போகின்றார்.

திருப்பயண "வழி"யில் நடக்கத் தொடங்கிய தாமசு தனிப் பயணியாகச் செல்லவில்லை. வழியில் அவர் உலகெங்கிலுமிருந்து வந்த பல திருப்பயணிகளைச் சந்திக்கின்றார். அவர்கள் ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையின் பொருள் என்னவென்று கண்டுபிடிக்கும் வகையில் பயணத்தை மேற்கொண்டவர்கள் என்பதை அறிகின்றார் தாமசு.

குறிப்பாக மூன்று பயணிகள் தாமசோடு சேர்ந்துகொள்கிறார்கள். ஒருவர் பெயர் யோஸ்ட். ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து வந்த யோஸ்ட் மிகவும் கனமான மனிதர். அவர் நீண்டதொரு கால்நடைப் பயணத்தை மேற்கொண்டு தமது எடையைக் குறைக்க விரும்புகிறார். அவருடைய தம்பியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்குத் தமது எடையைக் குறைக்க விரும்புவதாகவும், அப்போது தமது மனைவியும் தம்மை அதிகமாக விரும்புவார் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக யோஸ்ட் கூறுகிறார். கலகலப்பான மனிதரான யோஸ்ட் தான் முதன்முதலாக தாமசோடு சேர்ந்து நடக்கத் தொடங்குகிறார்.

தாமசோடு சேர்ந்துகொள்கிற இரண்டாம் நபர் பெயர் சேரா (Sarah). கானடா நாட்டவரான சேரா புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர். அவருடைய கணவரின் கொடுமை தாளாமல், அவரும் சந்தியாகு நகருக்குக் கால்நடைப் பயணமாகச் சென்று தனது புகைபிடி பழக்கத்தைக் கைவிட விரும்புவதாகக் கூறுகிறார்.

திருப்பயணத்தின்போது தாமசை சந்திக்கின்ற மூன்றாவது ஆள் பெயர் ஜேக் (Jack). அவர் அயர்லாந்து நாட்டவர். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக வேண்டும் என்பது சிறுவயதிலிருந்தே ஜேக்கின் ஆசை. வில்லியம் பட்லர் யீஸ்ட் போன்றோ ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றோ தாமும் ஒரு தலைசிறந்த எழுத்தாளராக மாறவேண்டும் என்று கனவு கண்ட ஜேக் தமது கனவு புதினத்தை ஒருபோதுமே எழுதவில்லை. ஒரு படைப்பாளியாக எப்படி மாறுவது என்பது ஜேக்கின் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

தாமசு, யோஸ்ட், சேரா, ஜேக் ஆகிய நால்வரும் ஒரு சிறு குழுவாக, திருப்பயணத்தைத் தொடர்ந்து "வழி"நடக்கின்றனர். வழியில் அவர்கள் வேறு சில பயணிகளைச் சந்திக்கின்றனர். இருவர் பிரஞ்சு நாட்டவர்; ஒருவர் இத்தாலிய இளைஞர்; இன்னொருவர் வயதில் முதிர்ந்த கத்தோலிக்க குரு தந்தை பிராங்க். அவருடைய சொந்த இடம் நியூயார்க். நடந்து செல்லும் வேளையில் தாமசின் கண்முன் அவருடைய மகனின் உருவம் பயணியர் நடுவே தெரிவதுபோல் ஒரு பிரேமை.

வழிநடக்கும் திருப்பயணியருக்குப் பல அனுபவங்கள் ஏற்படுகின்றன. ஒருமுறை தாமசு தமது முதுகுப் பையை இறக்கிவைத்துவிட்டு சற்றே அகன்றதுதான் சரி, புலம்பெயர் இனத்தைச் சார்ந்த ஓர் இளைஞன் அவருடைய பையைத் திருடிக்கொண்டு ஓடிவிடுகிறான். சிறிது நேரத்திற்குப் பின் அந்த இளைஞனின் தந்தை அவனைக் கைப்பிடியாக இழுத்துக்கொண்டு வந்து, தாமசிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவருடைய பையைத் திருப்பிக் கொடுக்கின்றார். மகனின் குற்றத்திற்குப் பரிகாரமாக அவர் தாமசின் குழுவோடு சேர்ந்து விருந்துண்ண ஒத்துக்கொள்கிறார்.

வாழ்க்கை என்பது வாழ்வு அனுபவங்களின் தொகுப்பு மட்டுமல்ல, வாழ்க்கையை எவ்விதத்தில் முன்கொண்டு செல்வது என்பதே திருப்பயணம் என்னும் "வழி" என்பதை இத்திரைப்படம் காட்டுகிறது.

நடிகர்களும் சித்திரப் படைப்புகளும்

[தொகு]
 • தாமசு ஏவ்ரி ("டாம்") வேடத்தில் மார்ட்டின் ஷீன் (Martin Sheen)
 • சேரா வேடத்தில் தெபொரா காரா உங்கெர் (Deborah Kara Unger)
 • ஜேக் வேடத்தில் ஜேம்ஸ் நெஸ்பிட் (James Nesbitt)
 • யோஸ்ட் வேடத்தில் யோரிக் ஃபான் வாகேனிங்கன் (Yorick van Wageningen)
 • டேனியல் ஏவ்ரி வேடத்தில் எமீலியோ எஸ்தேவெஸ் (Emilio Estevez)

திரைப்பட உருவாக்கம்

[தொகு]

இத்திரைப்படத்தின் பின்னணியாகச் சில உண்மை நிகழ்ச்சிகள் உள்ளன. எமீலியோ எஸ்தேவெசின் மகன் டைலர் சந்தியாகு நகருக்குத் திருப்பயணமாகச் சென்றிருந்தார்.[3] 2003இல் ஒரு திட்டமாகத் தொடங்கப்பட்ட வேளையில் டைலருக்கு வயது 19. கூடவே, டைலரின் பாட்டனாரான மார்ட்டின் ஷீன் அப்போது சந்தியாகு நகருக்குத் திருப்பயணமாகப் போனார். திரைப்படத்தின் துணை இயக்குநராகச் செயல்பட்ட டைலர் சந்தியாகு நகருக்குத் திருப்பயணமாகச் சென்றபோது அவருடைய பாட்டனாரான ஷீனோடு பயணப்பாதையின் முழு தூரத்தையும் வாகனப் பாதையில் கடந்தார். பயண வழியில் அவர் சந்தித்த ஒரு பெண்தான் பின்னர் அவருடைய மனைவி ஆனார். இவ்வாறு டைலருக்கு "வழி" என்னும் திரைப்படம் சொந்த வாழ்வோடு இணைந்த ஓர் அனுபவமாயிற்று.

திருப்பயணம் முடிந்த பின் ஷீன் தம் மகனோடு "வழி" என்னும் திரைப்படம் உருவாக்குவது பற்றி கலந்துரையாடினார்.[4][5]

குறைந்த செலவில் படத்தைத் தயாரிக்கவே ஷீன் எண்ணியிருந்தார். ஆனால் எஸ்தேவெஸ் அவ்வாறு நினைக்கவில்லை. "வழி" என்னும் திரைப்படம் பெரிய அளவில் உருவாகி, மக்களுக்கு ஆழ்ந்த அனுபவத்தை வழங்கவேண்டும் என்ற அவருடைய கருத்தின்படியே படப்பிடிப்பு தொடங்கியது.[5]

எஸ்தேவெசின் திராட்சைத் தோட்டமும் "வழி" திரைப்படத்திற்கு ஓர் தூண்டுதலாக இருந்தது. காசா டூமெட்ச் (Casa Dumetz) என்ற அத்தோட்டத்தில்தான் திரைப்படத்திற்கான உரையாடலை எஸ்தேவெஸ் எழுதினார். மனித வாழ்வில் நிகழும் இழப்பும், குழு உணர்வோடு எழுகின்ற நட்பும் அதனால் விளையும் ஆதரவும், ஒருவர் ஒருவர் மீது கொள்ளுகின்ற நம்பிக்கையும் வாழ்க்கையைத் தூக்கிப் பிடித்து, அதற்குப் பொருள் வழங்குகின்றன என்ற கருத்தை இத்திரைப்படம் வெளிக்கொணர்கிறது. இதில் "ஆஸ் நாட்டு மந்திரவாதி" (The Wizard of Oz) என்னும் கதையில் வரும் சிறுமி டாரதி மேற்கொண்ட பயணமும் அப்பயணத்தின்போது அவள் சந்திக்கும் ஆள்களும் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களும் எதிரொளிப்பதைக் காணலாம்.[5] திரைக்கதை வசனத்தின் முதல் வரைவு உருவாக ஆறு மாதங்கள் பிடித்தன.[1]

இத்திரைப்படத்திற்குத் தூண்டுதலாக இருந்த மற்றொரு படைப்பு ஜேக் ஹிட் என்பவர் எழுதிய "Off the Road: A Modern-Day Walk Down The Pilgrim's Route Into Spain" ஆகும்.

படப்பிடிப்பு

[தொகு]

படப்பிடிப்பு 2009, செப்டம்பர் 21இல் தொடங்கி 40 நாள்களில் நிறைவுற்றது. பட ஆக்குநர்களும் நடிகர்களும் "வழி" படப்பிடிப்பின்போது சந்தியாகு பயணப் பாதையில் சுமார் 350 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. எஸ்தேவெசோடு சென்ற படப்பிடிப்பாளர் மிகச் சிலரே ஆவர். மலை வழி ஆதலால் பகலில் சூரிய ஒளியும், இரவில் திரி எரித்து உருவான ஒளியும், தீ மூட்டி உருவான ஒளியுமே படப்பிடிப்புக்குக் கிடைத்தது. சந்தியாகு செல்லும் மலைப் பாதை அப்பகுதிவாழ் மக்களுக்குத் தனிப்பட்ட பொருளுடைத்தது ஆதலால் படக் காட்சிகளை இயல்பு வகையில் துல்லியமாகக் காட்டவேண்டிய தேவையும் இருந்தது.[1]

திரைப்படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று, திருப்பயணிகள் சந்தியாகு நகர கோவிலுக்குள் சென்று வழிபாட்டில் கலந்துகொள்வது ஆகும். ஆனால் படப்பிடிப்புக்காகக் கோவிலில் நுழைவதற்கு கோவில் அதிகாரிகளிடமிருந்து அனுமதி உடனே கிடைக்கவில்லை. எஸ்தேவஸ் கடவுள்மீது சுமையைப் போட்டுவிட்டு, மக்களிடம் இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவர் எதிர்பார்த்தபடியே படப்பிடிப்புக்கு ஏற்பாடான நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி கிடைத்தது. கோவிலுக்குள் படப்பிடிப்பும் நிகழ்ந்தது.[6]

நடிப்பு

[தொகு]

படத்தின் மைய நடிகராக மைக்கிள் டக்ளஸ் அல்லது மெல் கிப்சன் என்பவரை அமர்த்தலாம் என்றுதான் மார்ட்டின் ஷீன் முதலில் ஆலோசனை வழங்கினார். ஆனால் தன் தந்தையாகிய மார்ட்டின் ஷீனுக்கு என்றே தாம் கதைவசனத்தை எழுதியதாக எஸ்தேவெஸ் கூறிவிட்டார்.[5][7]

முக்கிய நடிகர்களைத் தவிர, படத்தில் வருகின்ற திருப்பயணிகர் எல்லாருமே உண்மையிலேயே சந்தியாகு நகர் நோக்கித் திருப்பயணம் சென்றுகொண்டிருந்தவர்கள்தாம். ஒரு காட்சியில் புலம் பெயர் மக்கள் தோன்றுவதும் உண்மையாகவே நிகழ்ந்ததே. அம்மக்கள் எசுப்பானியாவின் பூர்கோசு நகரைச் சார்ந்தவர்கள்.[1]

படம் பற்றிய சில குறிப்புகள்

[தொகு]

"வழி" என்னும் திரைப்படத்தை உருவாக்க அதிக நிதி தேவைப்பட்டது.[8] முதன்முறையாக 2010 செப்டம்பர் மாதம் டொரோன்டோ நகர் பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[9] ஷீனும் எஸ்தேவெசும் பேருந்துப் பயணம் மேற்கொண்டு தம் திரைப்படத்திற்கு அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் விளம்பரம் செய்தார்கள்.[2]

வரவு

[தொகு]

அமெரிக்காவில் திரையிடப்பட்ட முதல் நாள்களில் $110,418 பிரிந்தது. 2012 பெப்ருவரி அளவில் $4,416,962 மொத்தமாகப் பிரிந்தது.[10]

வரவேற்பு

[தொகு]

"வழி" திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. "இப்படம் கொஞ்சம் மெதுவாகச் செல்வதாகத் தோன்றலாம். ஆனால் உள்ளத்து உணர்வை நன்முறையில் வெளிக்கொணர்ந்து, விறுவிறுப்பான வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு இணைத்துச் செல்வதில் வெற்றிகண்டுள்ளது."[11]

குறிப்புகள்

[தொகு]
 1. 1.0 1.1 1.2 1.3 Siedlecka, Jo (24 February 2011). "A father and son project: Martin Sheen, Emilio Estevez discuss The Way". Independent Catholic News. பார்க்கப்பட்ட நாள் 17 March 2011.
 2. 2.0 2.1 Marilyn Beck and Stacy Jenel Smith (7 March 2011). "Charlie Has Goddesses, But Emilio and Martin Have Angels". gouverneurtimes. Dallas-Fort Worth Tribune. பார்க்கப்பட்ட நாள் 17 March 2011.
 3. Kennedy, Dana (1 March 2011). "Martin Sheen in Malta 'Taking a Break From Everything'". AOL News News. பார்க்கப்பட்ட நாள் 5 March 2011.
 4. Dwyer, Fr Dave (7 April 2010). "Emilio Estevez and The Way". Busted Halo. பார்க்கப்பட்ட நாள் 19 March 2011.
 5. 5.0 5.1 5.2 5.3 McLean, Craig (21 March 2011). "The Way: interview with Martin Sheen and Emilio Estevez". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 22 March 2011.
 6. Emilio Estevez and Martin Sheen on Faith and Filming "The Way", CBN.com.
 7. fbavinton (1 March 2011). "The Way: Interview with Martin Sheen & Emilio Estevez". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் 5 March 2011.
 8. Wallace, Amy (22 January 2011). "Growing Grapes as Part of a Real-Life Script". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 28 February 2011.
 9. "The Way பரணிடப்பட்டது 2010-08-15 at the வந்தவழி இயந்திரம்". tiff. Retrieved on August 29, 2010.
 10. Box Office Mojo stats
 11. http://www.rottentomatoes.com/m/the_way_2011/

வெளி இணைப்புகள்

[தொகு]