வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் என்னும் திருக்குறள் ஆய்வு நூலை சாமி சிதம்பரனார் என்னும் தமிழறிஞர் ஆக்கியுள்ளார். 33 சிறு கட்டுரைகளாக அமைந்த இந்த நூலை 2001ஆம் ஆண்டில் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது.[1]

வள்ளுவர் பற்றி நூலாசிரியர் கருத்து[தொகு]

சாமி சிதம்பரனார் கருத்துப்படி, வள்ளுவர் மொழி வெறுப்புள்ளவரோ, இன வெறுப்புள்ளவரோ, நாகரிக வெறுப்புள்ளவரோ அல்ல. எனவே, "வள்ளுவர் குறளைக் கொண்டு நாகரிக வேற்றுமை - பண்பாடு வேற்றுமை கற்பிக்க இடம் இல்லை." மேலும்,

வள்ளுவர் கருத்துக்கும் வடநூல்களின் கருத்துகளுக்கும் வேற்றுமையில்லை. வள்ளுவர் கருத்தை வடமொழிப் புலவர்களும் போற்றுகின்றனர். அவருடைய கருத்துக்கள் வடநூல்களிலும் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆதலால் வள்ளுவரைக் கருவியாகக் கொன்டு வடமொழியுடன் போர் தொடுக்க முடியாது. வேறு இனத்தாருடன் சண்டை போட முடியாது. மொழி வெறுப்பாளர் பக்கத்தில் வள்ளுவர் நிற்கமாட்டார். இன வெறுப்பாளர் பக்கத்திலும் வள்ளுவர் நிற்கமாட்டார்.

இன்று வள்ளுவரைப் பற்றிப் பேசுகின்றவர்களிலே சிலர் அவர் சொல்லாதவைகளையெல்லாம் சொல்லியிருப்பதாகக் கூறுகின்றனர். இதற்குக் காரணம் வடமொழியின் மீதும் ஆரியர்கள் என்று உண்மைக்கு மாறாக நினைத்துக்கொண்டிருக்கின்ற ஒருசிலர் மீதும் கொண்ட வெறுப்பேதான்...
திருக்குறளைப் பற்றி ஒரு சிலர், இன்று தமிழ் நாட்டிலே பரப்பி வரும் தப்பும் தவறுமான கருத்துக்களைத் திருத்துவதற்கு இந்நூல் பயன்படும்... (பக்கங்கள்: 8-11).

வள்ளுவர் கொணர்ந்த சீர்திருத்தம் பற்றிய கருத்து[தொகு]

வள்ளுவர் சமுதாயத்தின் தவறுகளைக் கண்டிப்பதோடு நிற்கவில்லை, மாறாக சமூக சீர்திருத்தத்துக்கான ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் அளிக்கிறார். நற்பண்புகளைக் கொண்ட ஒரு சமுதாயம் எவ்வாறு மனித வளர்ச்சியை மேம்படுத்தும் என்பதை அவர் விளக்கிச் செல்கின்றார். நூலாசிரியர் கருத்துப்படி,

வள்ளுவர் ஊழைப் பற்றி உரைத்திருக்கும் குறள் பத்து. ஆனால் அதற்கு எதிராகக் கூறியிருக்கும் செய்யுட்கள் நாற்பது. ஊழ்வினை என்ற அதிகாரத்திலே பத்துப் பாடல்களிலே ஊழின் வலிமையைப் பற்றி உரைக்கின்றார்; ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை என்ற நான்கு அதிகாரங்களிலே நாற்பது செய்யுட்களால் ஊழ்வினைக்கு அஞ்ச வேண்டாம் என்று வலியுறுத்துகின்றார். திருவள்ளுவர் ஊழ்வினையை மறுக்கவில்லை. ஆனால் அதை எதிர்க்க வழிகாட்டுகிறார்.

சீர்திருத்தத்திற்கு வள்ளுவர் காட்டியிருக்கும் வழி சிறந்ததாகும். அறிஞர்கள் பின்பற்றத் தக்கதுமாகும். இக்காலத்து சீர்திருத்தவாதிகளிலே பலர், சீர்திருத்தக் கொள்கைகளை மக்கள் மனங் கொள்ளும்படி வலியுறுத்துவதில்லை. சீர்திருத்துவதற்கு முட்டுக்கட்டைகளாக நிற்கும் மூடநம்பிக்கைகளைக் கண்டிப்பதில் மட்டும் கவலை காட்டுகின்றனர். மூடநம்பிக்கையுள்ளவர்களின் உள்ளத்திலே ஆத்திரம் உண்டாகும்படி அவ்வளவு கடுமையாகத் தாக்குகின்றனர்; அவர்களையும் அறிவற்றவர்கள் என்று வசைபாடுகின்றனர். இவ்வாறு மூடநம்பிக்கைகளையும் அந்நம்பிக்கையுள்ளவர்களையும் தாக்குவதுதான் சீர்திருத்தத்திற்குக் காட்டும் வழியென்று நம்புகின்றனர்.
வள்ளுவர் கருத்தை ஆராய்ந்தால், அவர் ஒரு சீர்திருத்தவாதி என்பது விளங்கும். ஆனால் அவருக்கும் இன்றைய சீர்திருத்தவாதிகளுக்கும் ஒரு வேற்றுமையுண்டு. "நீங்கள் செய்ய வேண்டியவை இவை; நீங்கள் முன்னேறுவதற்கான வழிகள் இவை" என்று மக்களிடம் நயமாக எடுத்துரைக்கின்றார். இதுவே வள்ளுவர் முறை. "உங்கள் நம்பிக்கை மூடத்தனமானது; அதை விட்டொழியுங்கள்; விட அஞ்சுவீர்களானால் நீங்கள் கோழைகள்; மூடர்கள்," என்று திட்டுவதோடு இன்றைய சீர்திருத்தவாதிகளிலே பலர் நின்று விடுகின்றனர். இதுதான் வள்ளுவர்க்கும் இன்றைய சீர்திருத்தவாதிகளுக்கும் உள்ள வேற்றுமை. வள்ளுவர் காட்டும் சீர்திருத்த வழியே சிறந்ததாகும். அவ்வழியைப் பின்பற்றினால்தான் சீர்திருத்தத் துறையிலே வெற்றி கிடைக்கும். (பக்கங்கள்: 59-60)

குறிப்பு[தொகு]

  1. சாமி சிதம்பரனார், வள்ளுவர் வாழ்ந்த தமிழகம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2001, பக்கங்கள்: 208.