வள்ளுவர் உள்ளமும் வாழ்க்கைத் தத்துவங்களும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வள்ளுவர் உள்ளமும் வாழ்க்கைத் தத்துவங்களும் என்னும் ஆய்வு நூலை முனைவர் மு. சதாசிவம் எழுதியுள்ளார். அந்நூல் 2004இல் மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[1]

நூலின் நோக்கம்[தொகு]

முன்னுரையில் ஆசிரியர் தாம் இந்த நூலை எழுதி வெளியிட்டதன் நோக்கத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார்:

வள்ளுவரின் உள்ளத்தை முழுவதும் உணர்ந்துவிட்டதாக இங்கே கூற யான் முன்வரவில்லை; கூறவும் முடியாது. வள்ளுவரின் உள்ளத்தை முற்றிலும் உணரமுடியும் என்று சொல்வது ஒரு பூனை பாற்கடலை முழுவதும் குடித்துவிடும் என்பதுபோலாம் என்றே எண்ணுகிறேன். வள்ளுவர் உள்ளத்தின் பெருந்தகைமை, கடனறை காட்சி நிலை, மருள்தீர்ந்த மாசறுகாட்சிநிலை முதலியவற்றினின்றும் தோன்றிய அருங்கருத்துகளிற் சிலவே ஆராயப்பட்டிருக்கின்றன. வாழ்க்கைத் தத்துவங்கள் என்ற பகுதி வள்ளுவரின் சமுதாயக்கலையைப் பற்றிய சுருங்கிய கருத்துக்களாம். இவ்விரு தலைப்புகளும் மிகப்பெரியவை; மிக விரிவான ஆராய்ச்சிகளுக்கு இடமளிப்பவை... பின்வரும் கட்டுரைகள் வள்ளுவரின் உளவியல் நூற்புலமையையும் தத்துவநூற்புலமையையும் விரிவாக ஆராயவில்லை. ஆனால் அவற்றினின்றும் முகிழ்த்த ஒருசில கருத்துக்களையே எடுத்தோதுகின்றன. வாழ்க்கைத் தத்துவம் என்ற தொடர் வாழ்க்கையுண்மை அல்லது வாழ்க்கை நெறியை உணர்த்துமேயல்லாது தத்துவநூலுக்கும் வாழ்க்கைக்குமுள்ள தொடர்பை உணர்த்தாது. வாழ்க்கை என்பது மனிதவாழ்க்கையைத்தான் குறிக்கும்; மற்ற உயிரினங்களின் வாழ்க்கையைக் குறிக்காது (பக்கங்கள்: 7-8).

நூலின் உள்ளடக்கம்[தொகு]

இந்த நூலில் முன்னுரை தவிர வேறு ஒன்பது அதிகாரங்கள் உள்ளன. அவை கீழ்வருவன:

1. முன்னுரை
2. வள்ளுவர் உலகம்
3. உள்ளமும் வாழ்க்கையும்
4. வள்ளுவர் உள்ளம்
5. வள்ளுவர் வழங்கும் உருவகக் காட்சிகள்
6. காமத்துப் பாலும் உருவகக் காட்சிகளும்
7. சமுதாய வாழ்வு
8. வள்ளுவரின் சமுதாய அமைப்பு
9. வள்ளுவரின் வாழ்க்கைத் தத்துவங்கள்
10. வள்ளுவரின் உருவகக் காட்சிகள்: பிற்சேர்க்கை.

உருவகக்காட்சி என்றால் என்ன?[தொகு]

வள்ளுவர் வழங்கும் உருவகக்காட்சிகள் என்னும் அதிகாரத்தில் நூலாசிரியர் உருவகக்காட்சியைத் திருவள்ளுவர் பயன்படுத்தும் முறையைக் கீழ்வருமாறு விரித்துரைக்கின்றார்:

உருவகக்காட்சியுள் உவமை, உருவகம் முதலியன அடங்கும். கடலன்ன காமம் (1137), வெள்ளத்தனைய இடும்பை (622), அழல் போலும் மாலை (1228), கண்ணன்ன கேளிர் (1267) முதலிய உவமைகளும்; குன்றன்னார், வில்லேருழவர், சொல்லேருழவர், அறவாழி அந்தணன் முதலிய உருவகங்களும் (metaphors); இன்மை என ஒரு பாவி (1042), நல்குரவு என்னும் இடும்பை (1045), அழுக்காறென ஒரு பாவி (168) முதலிய உருவகங்களும் உருவகக் காட்சிகளேயாம்.

கவிஞர் ஒரு பொருளை விளக்குவதற்காகப் பல முறைகளைக் கையாளுகின்றார். ஒரு பொருளினை வேறொருரு பொருளின் தன்மையுடன் ஒப்பிட்டுக் கூறுவது அல்லது உவமித்துக் கூறுவது ஒருவகை. ஒருபொருளை வேறொன்றாக உருவகித்துக் கூறுவது இன்னொரு வகை. ஒரு பொருள் முழுவதையும் குறிக்கும் படி அப்பொருளின் ஒரு பாகத்தை மட்டும் கூறுவதுண்டு. அல்லது அதனுடன் தொடர்புள்ள பொருளைக் கூறுவதுண்டு. ஒரோவழி சொல்லும் முறையே பொருளை விளக்கிவிடுவதும் உண்டு (sound echoing the sense). இன்னும் கவிஞர் கையாளும் முறைகளையெல்லாம் பொதுவாக உருவகக்காட்சி என்ற சொல்லில் அடக்கிவிடலாம்...

உருவகக்காட்சி நீதியுண்மைகளை உணர்த்துவதற்கும் காதலுணர்வுகளை உணர்த்துவதற்கும் மிக இன்றியமையாது வேண்டப்படும். நீதிநூலுக்கும் சமயநூலுக்கும் இயற்கையான மொழி உருவகக்காட்சி மொழியே. புத்தேள் உலகம் (213), அளறு (255) போன்றவற்றை உருவகக்காட்சி மூலமே உணர்த்தமுடியும். பார்க்க முடியாத பொருள்களையும், அனுபவிக்க முடியாத செய்திகளையும், சிறந்த உண்மைகளையும் இதன்மூலமே கூறுதல் ஒல்லும். கிறித்துவரின் வேதநூலில் (The Bible) இத்தகைய உருவகக்காட்சிகள் உண்டு. கிறித்துவர்க்குப் புகழ்தரும் விவிலியம் போல் உலக சமயத்தினர் யாவருக்கும் புகழ்தரும் திருக்குறளில் ஐந்நூறுக்கு மேற்பட்ட உருவகக்காட்சிகள் காணப்படுகின்றன. இவற்றின் விகிதத்தை நோக்கும்போது அறத்துப்பாலுக்கே மிகுதியான உருவகக்காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்தபடியாகக் காமத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அறத்துப்பாலில் காணப்படும் விகிதத்தில் பாதிதான் பொருட்பாலில் உள்ளன. பொருட்பாலில் மிகுதியான உருவகக்காட்சிகள் இல்லாததன் காரணம் அது மக்கள் யாவருக்கும் தெரிந்த வாழ்க்கைக் கூறுகளை எடுத்தோதுவதுதான். அறமும் காமமும் முழுவதும் வாழ்க்கைநெறிகளாகும். பொருட்பாலில் அரசரின் வாழ்க்கை, அமைச்சரின் வாழ்க்கை, படை, தூது, ஒற்று முதலியோரின் வாழ்க்கை, குடிமகனின் வாழ்க்கை முதலியவை கூறப்படுகின்றன (பக்கங்கள்: 37-38).

மேற்கோள்கள்[தொகு]

  1. முனைவர் மு. சதாசிவம், வள்ளுவர் உள்ளமும் வாழ்க்கைத் தத்துவங்களும் (The Mind and Social Philosophy of St. Thiruvalluvar), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, பக்கங்கள்: 104.