வலைவாசல்:விவிலியம்/சிறப்புக் கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாடு‎[தொகு]

விவிலியம் சிறப்புக் கட்டுரை துணைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/வடிவமைப்பு.

Selected articles list[தொகு]

வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/1

திருவிவிலியம் தமிழில் பெயர்க்கப்பட்ட வரலாறு பல கட்டங்களை உள்ளடக்கியது. கிறித்தவ சமயத்தின் தொடக்க காலத்திலிருந்தே தமிழகத்திற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருந்துவந்தன. கிறித்தவ சமயம் தென்னிந்திய மேற்குக் கடற்கரைப் பகுதியில் கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்தே பரவியிருந்தது என்பதற்கு உறுதியான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ஆனால், தமிழ்க் கிறித்தவ இலக்கியம் உருவான சான்றுகள் கி.பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்துதான் கிடைக்கின்றன.

இயேசு சபையைச் சார்ந்த மறைபரப்பாளர்கள் முதலில் தமிழகம் வந்தபோது தமிழ்மொழியின் துணையின்றி மக்களோடு உரையாடல் இயலாது என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டார்கள். எனவே திருவிவிலியத்தில் அடங்கியுள்ள உண்மைகளை அவர்கள் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமைப்படுத்தி, மறைக்கல்விக் கையேடுகளையும் விளக்க நூல்களையும் (catechism) எழுதலாயினர். அவற்றில் விவிலியப் பகுதிகள் பல உள்ளன. மேலும், அவர்கள் விவிலியத்தின் முதன்மைப் பகுதியாகிய நற்செய்தி நூல்களைத் தமிழில் பெயர்த்து வழிபாட்டில் பயன்படுத்தினர்.

விவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் பெயர்த்து அச்சேற்றியவர் பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் ஆவார். செருமனியில் 1683இல் பிறந்த சீகன்பால்க் கிறித்தவ மதத்தைப் பரப்ப ஹைன்றிக் புளூட்ஷோ (Heinrich Pluetschau) என்பவரோடு இந்தியா வந்தார். சீர்திருத்த சபையில் லூத்தரன் அமைப்போடு இணைந்த பக்தி இயக்கம் (Pietism) என்னும் பிரிவைச் சார்ந்த சீகன்பால்க் மக்களிடையே கிறித்தவ உணர்வையும் பக்தியையும் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் விவிலியத்தைத் தமிழில் பெயர்த்து, அச்சிட்டு மக்களுக்கு வழங்கவேண்டும் என்று முடிவுசெய்தார்.


வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/2

செப்துவசிந்தா (Septuaginta) என்பது கிறித்தவத் திருவிவிலியத்தின் முதற் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் தலைசிறந்த கிரேக்க மொழிபெயர்ப்பு ஆகும். இது அன்று வழக்கிலிருந்த கொய்னே (Koine) என்றழைக்கப்படும் நடைமுறை கிரேக்கத்தில் கி.மு. 3-2 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது

இலத்தீன் மொழியில் செப்துவசிந்தா என்பதன் பொருள் எழுபது என்றாகும். எழுபது (அல்லது எழுபத்திரண்டு) பேர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்வதில் ஈடுபட்டனர் என்னும் அடிப்படையில் இம்மொழிபெயர்ப்பு எழுபதின்மர் பெயர்ப்பு என்று பொருள்படும் செப்துவசிந்தா என்னும் பெயரால் அழைக்கப்படலாயிற்று.

இந்த கிரேக்க மொழிபெயர்ப்பின் முழு கிரேக்கப் பெயர் hē metáphrasis tōn hebdomēkonta (ἡ μετάφρασις τῶν ἑβδομήκοντα) என்பதாகும். அது தமிழில் "எழுபது உரையாளர்களின் மொழிபெயர்ப்பு" (translation of the seventy interpreters) என வரும். இலத்தீனில் Interpretatio septuaginta virorum என்று அழைக்கப்பட்டது. அதிலிருந்து சுருக்கமாக "செப்துவசிந்தா" (Septuaginta = எழுபது) என்னும் பெயர் பெறலாயிற்று; அப்பெயரும் நிலைத்துவிட்டது.


வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/3

விவிலிய சிலுவைப் பாதை

விவிலிய சிலுவைப் பாதை (Scriptural Way of the Cross) என்பது இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வை, முற்றிலுமாக விவிலியத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தியானித்து இறைவேண்டல் செய்யும் கிறித்தவ பக்தி முயற்சி ஆகும். இது மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையிலிருந்து சற்றே மாறுபட்டதாகும்.

சிலுவையைச் சுமந்துசென்ற இயேசுவின் அடியொற்றி நடந்துசென்று, அவருடைய துன்பங்களில் பங்கேற்று, தியானிப்பதைப் பதினான்கு நிலைகளில் செய்வது மரபு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட காட்சியை உருவகப்படுத்தும். அக்காட்சியில் வருகின்ற ஆள்கள் இடங்கள் நிகழ்வுகள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு, உணர்வில் ஏற்று, இயேசுவோடு மக்கள் தம்மை ஒன்றுபடுத்துவர்.

ஆயினும் மரபுப்படி தரப்பட்ட 14 நிலைகளுள் எட்டு நிலைகளுக்கு மட்டுமே உறுதியான விவிலிய அடிப்படை உள்ளது. இதனால், மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையில் கற்பனை நிகழ்வுகள் புகுத்தப்பட்டன எனப் பொருளாகாது என்றும், பொதுமக்களின் பக்தி முயற்சியாக வளர்ந்த சிலுவைப் பாதையில், இயேசு சிலுவை சுமந்து சென்றபோது என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணி உள்ளத்தில் சிந்தித்து இறைவேண்டல் செய்திட வெவ்வேறு நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டன என்றும் அறிஞர் கூறுகின்றனர்.

இயேசு துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் இறந்த நிகழ்வோடு தொடர்புடைய தகவல்கள் வெளிப்படையாக நற்செய்தி நூல்களில் உள்ளனவா என்று ஆய்ந்து அவற்றை மட்டுமே சிலுவைப் பாதையின் நிலைகளாகக் கருதுவது நல்லது என்னும் எண்ணத்தில் பலர் "விவிலிய சிலுவைப் பாதை" உருவாக்கலாயினர். இத்தகைய விவிலிய சிலுவைப் பாதை ஒன்றினைக் காலஞ்சென்ற திருத்தந்தை முத். இரண்டாம் யோவான் பவுல் உருவாக்கினார். அதை 1991ஆம் ஆண்டு பெரிய வெள்ளியன்று அவரே முன்னின்று உரோமை கொலொசேயத்தில் பயன்படுத்தி வழிபாடு நடத்தினார். அந்த விவிலிய சிலுவைப் பாதையை எல்லாக் கிறித்தவ மக்களும் பொது வழிபாட்டின்போது பயன்படுத்துவது நலம் என்று கூறி, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இசைவு வழங்கினார்.


வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/4

பெத்தானியா

பெத்தானியா என்பது புதிய ஏற்பாட்டில் மரியா, மார்த்தா, இலாசர் ஆகியோரின் வீடும், "தொழுநோயாளர் சீமோன்" என்பவரின் வீடும் இருந்த நகரமாகக் குறிப்பிடப்படும் இடம் ஆகும். இயேசு எருசலேம் நகருக்குள் அரசர் போல நுழைந்த பிறகு இந்த ஊரில் தங்கியிருந்தார் என்றும், தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இவ்வூரிலிருந்து விண்ணகம் சென்றார் என்றும் புதிய ஏற்பாட்டுக் குறிப்புகள் உள்ளன.

பாலஸ்தீன நாட்டில், மேற்குக் கரை என்னும் பகுதியில் உள்ள "அல்-எய்சரியா" என்னும் இன்றைய ஊரே முற்காலத்தில் பெத்தானியா என்று அழைக்கப்பட்ட இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. "அல்-எய்சரியா" என்பதற்கு "இலாசரின் இடம்" என்பது பொருள். இந்த இடத்தில் இலாசரின் கல்லறை உள்ளதாக நம்பப்படுகிறது. பெத்தானியா எருசலேமிலிருந்து கிழக்காக ஒன்றரை மைல் (2 கி.மீ) தொலையில், ஒலிவ மலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. அங்கு அடையாளம் காட்டப்படுகின்ற மிகப் பழைய வீடு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது. அதுவே விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் வருகின்ற மரியா, மார்த்தா, இலாசர் என்போரின் வீடு என்று கூறப்படுகிறது. இங்கே பெருந்திரளான மக்கள் திருப்பயணிகளாகச் செல்கின்றனர்.

இயேசுவின் காலத்தில் பேச்சு மொழியாக வழங்கிய அரமேய மொழியில் இது בית עניא, (Beth anya = பெத் ஆனியா) என்று வரும். இதற்கு "துன்பத்தின் வீடு" என்பது பொருள். கி.பி. நான்காம் நூற்றாண்டில் புனித ஜெரோம் என்பவர் இந்த விளக்கம் தந்தார். இதை "ஏழையர் வீடு" அல்லது "ஏழைகளுக்கு உதவும் வீடு" எனவும் பொருள்படுவதாகக் கருதலாம். இந்த விளக்கத்தின்படி, பெத்தானியாவில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஓர் இல்லம் இருந்திருக்கலாம். "ஏழை" என்னும் சொல் வறியவர்களை மட்டுமன்றி, நோயுற்றோர், எருசலேமுக்கு வந்த திருப்பயணிகள் போன்றோரையும் குறித்திருக்கலாம்.


வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/5

கொல்கொதா

கொல்கொதா (Golgotha) என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது கல்வாரி (Calvary) அல்லது கபாலஸ்தலம் என்றும் புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுகிறது. கொல்கொதா என்பது "குல்கல்தா" (Gûlgaltâ) என்னும் எபிரேயச் சொல்லின் ஒலியாக்கம் ஆகும். இச்சொல்லின் விளக்கமாக புதிய ஏற்பாட்டில் மண்டை ஓட்டு இடம் என்னும் தொடர் தரப்படுகிறது. இதே பொருள் தரும் கிரேக்கத் தொடர் Kraniou Topos (Κρανίου Τόπος) என்றும் இலத்தீன் தொடர் Calvariae Locus என்றும் அமையும். இலத்தீன் தொடரிலிருந்து Calvary என்னும் ஆங்கிலச் சொல்லும், கல்வாரி என்னும் தமிழ் ஒலிபெயர்ப்பும் பெறப்பட்டன.

புதிய ஏற்பாடு கொல்கொதா (கல்வாரி = மண்டை ஓட்டு இடம்) என்பதை ஒரு மலை என்றோ, குன்று என்றோ குறிப்பிடவில்லை. மாறாக இடம் என்று பொதுவாகவே குறிப்பிடுகிறது. ஆயினும் கி.மு. 333இலிருந்து அவ்விடம் ஒரு குன்று என்றும், கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு மலை என்றும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. இலத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து கல்வாரி என்னும் பெயர் தோன்றியது. பல விவிலிய மொழிபெயர்ப்புகளில் அப்பெயரும் ஏற்கப்பட்டது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு கொல்கொதாவில் சிலுவையில் அறையுண்டு இறந்த தகவலைத் தருகின்றனர்.

கொல்கொதா எங்கே உள்ளது என்பது பற்றியும் பல கருத்துகள் உண்டு. மிகப் பாரம்பரியக் கருத்து கி.பி. 325ஆம் ஆண்டில் எழுந்தது. அந்த ஆண்டில் புனித ஹெலேனா என்பவர் இயேசு சிலுவையில் இறந்த இடத்தை அடையாளம் கண்டார். ஹெலேனா உரோமைப் பேரரசன் முதலாம் காண்ஸ்டண்டைன் என்பவரின் தாய் ஆவார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்திலிருந்து சில மீட்டர் தொலையில் இயேசுவின் கல்லறையையும் ஹெலேனா அடையாளம் கண்டார். அதோடு இயேசு அறையுண்டு இறந்த சிலுவையும் கண்டெடுக்கப்பட்டது. ஹெலெனாவின் மகன் மன்னர் முதலாம் காண்ஸ்டண்டைன் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் அழகிய கோவிலைக் கட்டியெழுப்பினார். அது திருக்கல்லறைக் கோவில் (Church of the Holy Sepulchre) என்று அழைக்கப்படுகிறது


வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/6

எம்மாவு

எம்மாவு (Emmaus) என்பது புதிய ஏற்பாட்டில் இயேசு கிறித்துவின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு பழங்கால நகரம் ஆகும். இது எருசலேம் நகரிலிருந்து ஏறத்தாழ 7 மைல் (11 கிலோ மீட்டர்)தொலையில் உள்ளது. இந்நகரம் கிரேக்க மொழியில் Ἐμμαούς என்றும், இலத்தீனில் Emmaus என்றும், எபிரேயத்தில் חמת‎ (Hammat) என்றும், அரபியில் عِمواس‎ (Imwas) என்றும் அறியப்படுகிறது. இதன் பொருள் மித வெப்ப நீரூற்று என்பதாகும்.

லூக்கா நற்செய்தி 24:13-35 என்னும் பகுதியில் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பின்பு, எருசலேமிலிருந்து எம்மாவுக்குச் சென்றுகொண்டிருந்த இரு சீடர்களுக்குத் தோன்றிய செய்தி விவரிக்கப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் வருகின்ற எம்மாவு என்னும் நகரம் பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பாக, 1 மக்கபேயர் 3:55-4:22 என்னும் பாடத்தைக் காட்டலாம். கி.மு. 166ஆம் ஆண்டளவில் யூத மக்கள் கிரேக்க ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். அப்போது யூதா மக்கபேயு என்பவரின் தலைமையில் அவர்கள் செலூக்கிய கொடுங்கோலாட்சியை எம்மாவு நகரில் நிகழ்ந்த சண்டையில் முறியடித்தனர்.

பின்னர், செலூக்கிய தளபதி பாக்கிது என்பவர் எம்மாவு நகருக்குக் காப்புச் சுவர்கள் கட்டினார் (காண்க: 1 மக்கபேயர் 9:50). உரோமையரின் ஆட்சியின் கீழ் எம்மாவுக்குச் சிறிதளவு தன்னாட்சி இருந்தது. ஆனால் ஏரோது மன்னன் கி.மு. 4இல் இறந்ததைத் தொடர்ந்து எம்மாவு தீக்கிரையாக்கப்பட்டது. முதல் யூத கிளர்ச்சியின்போது (கி.பி. 660-70), எருசலேம் நகரை முற்றுகையிட்டு அழிப்பதற்கு முன் உரோமைப் படைகள் எம்மாவு நகரில் பாசறை அமைத்தன. கி.பி. 221இல் எலகாபலுஸ் மன்னன் காலத்தில் எம்மாவு நகரின் பெயர் "நிக்கோபொலிஸ்" என்று மாற்றப்பட்டது. "பெருநகர்" நிலைக்கு உயர்த்தப்பட்டது. கி.பி. 639இல் ஏற்பட்ட கொள்ளைநோயின்போது எம்மாவு நகரில் சுமார் 25,000 மக்கள் இறந்தார்களாம்.


வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/7

கலிலேயக் கடல்

கலிலேயக் கடல் (Sea of Galilee) என்றும் கெனசரேத்து ஏரி (Lake of Gennesaret) என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் நீர்த்தேக்கம் இசுரயேல் நாட்டில் உள்ளது. மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. விவிலிய வரலாற்றில் இந்த ஏரி சிறப்பான பங்கு வகிக்கிறது.

கெனசரேத்து ஏரி இசுரயேல் நாட்டில் நல்ல தண்ணீர் கொண்ட ஏரிகளுள் மிகப் பெரியதாகும். இதன் சுற்றளவு 53 கிலோமீட்டர் (33 மைல்); நீளம் சுமார் 21 கிமீ (13 மைல்); இதன் பரப்பளவு 166 சதுர கிமீ (64 சதுர மைல்). ஏரியின் மிக அதிக ஆழம் 43 மீ (141 அடி). கடல்மட்டத்திலிருந்து 214 மீட்டர் (702 அடி) தாழ்ந்துள்ள இந்த ஏரி உலகிலேயே நல்ல தண்ணீர் நீர்த்தேக்கங்களுள் மிகவும் தாழ்ந்த மட்டத்திலும், உப்புநீர் கொண்ட சாக்கடலுக்கு அடுத்தபடியாக உலக ஏரிகளுள் தாழ்ந்த மட்டத்திலுள்ள ஏரிகளுள் இரண்டாவதாகவும் உள்ளது. நீரடி ஊற்றுகளிலிருந்தும் யோர்தான் ஆற்றிலிருந்தும் இந்த ஏரிக்குத் தண்ணீர் கிடைக்கிறது.

புதிய ஏற்பாட்டு நூல்களில் இந்த ஏரி ”கலிலேயக் கடல்” என்றும் ”திபேரியக் கடல்” என்றும் அழைக்கப்படுகிறது (காண்க: கலிலேயக் கடல்: மத்தேயு 4:18, மாற்கு 1:16, யோவான் 6:1; திபேரியக் கடல்: யோவான் 6:1; 21:1). கெனசரேத்து ஏரி என்னும் பெயர் லூக்கா 5:1இல் வருகிறது. மேலும், பழைய ஏற்பாட்டின் பல பகுதிகளிலும் இப்பெயர் கினரேத்துக் கடல் (Kinnereth/Chinnereth) என்றுள்ளது (காண்க: எண்ணிக்கை 34:11, யோசுவா 13:27). கின்னர் என்னும் எபிரேயச் சொல்லுக்கு யாழ் என்று பொருள். இந்த ஏரி யாழ் வடிவில் உள்ளதால் அப்பெயர் பெற்றிருக்கலாம்.


வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/8

எருசலேம்

எருசலேம் (Jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது.

கிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும். இந்நகரில் 801,000 மக்கள் வாழ்கின்றார்கள். இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது.

எருசலேமின் நீண்டகால வரலாற்றின்போது அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை கைப்பற்றப்பட்டது. நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது. இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்து (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.


முன்மொழிதல்[தொகு]

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் சிறப்புக் கட்டுரைகளின் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.
[[Image:{{{image}}}|100px|{{{caption}}}]]

{{{text}}}

[[{{{link}}}|மேலும்...]]