வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செப்துவசிந்தா (Septuaginta) என்பது கிறித்தவத் திருவிவிலியத்தின் முதற் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் தலைசிறந்த கிரேக்க மொழிபெயர்ப்பு ஆகும். இது அன்று வழக்கிலிருந்த கொய்னே (Koine) என்றழைக்கப்படும் நடைமுறை கிரேக்கத்தில் கி.மு. 3-2 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது

இலத்தீன் மொழியில் செப்துவசிந்தா என்பதன் பொருள் எழுபது என்றாகும். எழுபது (அல்லது எழுபத்திரண்டு) பேர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்வதில் ஈடுபட்டனர் என்னும் அடிப்படையில் இம்மொழிபெயர்ப்பு எழுபதின்மர் பெயர்ப்பு என்று பொருள்படும் செப்துவசிந்தா என்னும் பெயரால் அழைக்கப்படலாயிற்று.

இந்த கிரேக்க மொழிபெயர்ப்பின் முழு கிரேக்கப் பெயர் hē metáphrasis tōn hebdomēkonta (ἡ μετάφρασις τῶν ἑβδομήκοντα) என்பதாகும். அது தமிழில் "எழுபது உரையாளர்களின் மொழிபெயர்ப்பு" (translation of the seventy interpreters) என வரும். இலத்தீனில் Interpretatio septuaginta virorum என்று அழைக்கப்பட்டது. அதிலிருந்து சுருக்கமாக "செப்துவசிந்தா" (Septuaginta = எழுபது) என்னும் பெயர் பெறலாயிற்று; அப்பெயரும் நிலைத்துவிட்டது.