வலைவாசல்:விவிலியம்/சிறப்புக்கட்டுரை/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவிவிலியம் தமிழில் பெயர்க்கப்பட்ட வரலாறு பல கட்டங்களை உள்ளடக்கியது. கிறித்தவ சமயத்தின் தொடக்க காலத்திலிருந்தே தமிழகத்திற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருந்துவந்தன. கிறித்தவ சமயம் தென்னிந்திய மேற்குக் கடற்கரைப் பகுதியில் கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்தே பரவியிருந்தது என்பதற்கு உறுதியான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ஆனால், தமிழ்க் கிறித்தவ இலக்கியம் உருவான சான்றுகள் கி.பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்துதான் கிடைக்கின்றன.

இயேசு சபையைச் சார்ந்த மறைபரப்பாளர்கள் முதலில் தமிழகம் வந்தபோது தமிழ்மொழியின் துணையின்றி மக்களோடு உரையாடல் இயலாது என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டார்கள். எனவே திருவிவிலியத்தில் அடங்கியுள்ள உண்மைகளை அவர்கள் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமைப்படுத்தி, மறைக்கல்விக் கையேடுகளையும் விளக்க நூல்களையும் (catechism) எழுதலாயினர். அவற்றில் விவிலியப் பகுதிகள் பல உள்ளன. மேலும், அவர்கள் விவிலியத்தின் முதன்மைப் பகுதியாகிய நற்செய்தி நூல்களைத் தமிழில் பெயர்த்து வழிபாட்டில் பயன்படுத்தினர்.

விவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் பெயர்த்து அச்சேற்றியவர் பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் ஆவார். செருமனியில் 1683இல் பிறந்த சீகன்பால்க் கிறித்தவ மதத்தைப் பரப்ப ஹைன்றிக் புளூட்ஷோ (Heinrich Pluetschau) என்பவரோடு இந்தியா வந்தார். சீர்திருத்த சபையில் லூத்தரன் அமைப்போடு இணைந்த பக்தி இயக்கம் (Pietism) என்னும் பிரிவைச் சார்ந்த சீகன்பால்க் மக்களிடையே கிறித்தவ உணர்வையும் பக்தியையும் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் விவிலியத்தைத் தமிழில் பெயர்த்து, அச்சிட்டு மக்களுக்கு வழங்கவேண்டும் என்று முடிவுசெய்தார்.