வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாடு‎[தொகு]

வரலாறு சிறப்புப் படத்தின் துனைப் பக்க வடிவமைப்பு - வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/வடிவமைப்பு.

சிறப்புக் கட்டுரைகள் வரிசை[தொகு]

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/1
சிறப்புப் படம்





பெஞ்சமின் பிராங்கிளின் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர், எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னலில் மின்னாற்றல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து உலகிற்குச் சொன்னவர் இவர். ஸ்காட்லாந்து ஓவியர் டேவிட் மார்டின் வரைந்த ஓவியம் இதுவாகும். தற்போது இந்த ஓவியம் வெள்ளை மாளிகையில் இருக்கிறது.
படிம உதவி: ஓவியம்: டேவிட் மார்டின்

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/2
சிறப்புப் படம்





இந்த அசைவுப்படம் கனடாவின் மாகாணங்கள் ஒன்றிணைந்த வரலாறைக் காட்டுகின்றது. இது அன்றைய டொமினியனிலிருந்து (1867) இன்றைய கனடாவின் நிலை (2000) வரை அனைத்து எல்லைப் பிரிப்பு சேர்ப்புகளையும் காட்டுகிறது.
படிம உதவி: கோல்பெஸ்

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/3
சிறப்புப் படம்





த பீஸ்மேக்கர்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் மார்ச்சு 28, 1865 அன்று, திட்டமிடல் அமர்வில் வில்லியம் டெக்கும்ஷெ செர்மான், உலிசெஸ் எஸ். க்ராண்ட், ஆபிரகாம் லிங்கன், டேவிட் டிக்சன் போர்ட்டர் (இடமிருந்து வலமாக) ஆகியோர் கலந்தாலோசித்த வரலாற்று நிகழ்வைக்குறிக்கும் ஓவியம் ஆகும்.
படிம உதவி: ஓவியர்: ஜார்ஜ் பீட்டர் அலெக்சாண்டர் ஹீலி
புகைப்படம்: வெள்ளைமாளிகை வரலாற்றுக் கழகம்

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/4
சிறப்புப் படம்





பாரி பறம்பு மலையை ஆட்சி செய்த குறுநில மன்னர். கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர். படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலின் காரணமாக இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுகிறார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். பறம்பு மலையில் காணப்படும் பாரி முல்லைக்குத் தேரீயும் சிலை வடிவக் காட்சி இவ்வாரச் சிறப்புப் படமாக இடம்பெற்றுள்ளது.
படிம உதவி: அருணன்கபிலன்

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/5
சிறப்புப் படம்





மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூர் பேரரசை ஆண்ட இவர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியுடன் பல முறைப் போரிட்டவர். ஆர்த்தர் வெல்லஸ்லியின் தலைமையிலான ஆங்கிலப் படைகளுடன் நடைபெற்ற நான்காவது ஆங்கிலேய மைசூர்ப் போரில் திப்பு மரணமடைந்தார். படத்தில் காணப்படும் ஓவியம் 1800ம் ஆண்டு என்றி சிங்கில்டன் என்பவரால் வரையப்பட்டது. இதில் போரிட்டு மடியும் திப்புவின் இறுதி நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
படிம உதவி: ஓவியம்:சிங்கில்டன்

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/6
சிறப்புப் படம்





அங்கூர் வாட் என்பது கம்போடியாவிலுள்ள ஓர் இந்துக் கோவில் தொகுதியாகும். இது இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. கெமர் மொழியில் வாட் என்றால் கோவில் என்று பொருள்படும். ஓர் அகழியும் மூன்று மண்டபங்களும் நடுவிலுள்ள ஐந்து கோவில்களைச் சுற்றியுள்ளன. மதிய வேளையில் எடுக்கப்பட்ட கோவிலின் படம் காட்டப்பட்டுள்ளது.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/7
சிறப்புப் படம்



எசுப்பானியப் பெரும் கடற்படையெடுப்பு
எசுப்பானியப் பெரும் கடற்படையெடுப்பு



கிபி 1588ஆம் ஆண்டு எசுப்பானியப் பேரரசு இங்கிலாந்தின் மீது கடல் வழியாகப் படையெடுத்தது. எசுப்பானிய அரசர் இரண்டாம் ஃபிலிப்பு, இங்கிலாந்தைக் கைப்பற்றி, அதன் அரசி முதலாம் எலிசபெத்தை அரசணையிலிருந்து இறக்க இந்த படையெடுப்பை மேற்கொண்டார். இங்கிலாந்து கடற்படையை ஆங்கிலக் கால்வாயில் முறியடித்து, பின்னர் தரைப்படைகளை இங்கிலாந்து மண்ணில் தரையிறக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் எஃபிங்காம் பிரபு மற்றும் சர் ஃபிரான்சிஸ் ட்ரேக் தலைமையிலான இங்கிலாந்து கடற்படை எசுப்பானியக் கடற்படையைத் தோற்கடித்து விரட்டியதால், ஃபிலிப்பின் திட்டம் தகர்க்கப்பட்டது. படத்திலுள்ள ஓவியம் பிலிப்-ஜாக் டி லூதர்பர்க் எனும் ஓவியரால் தீட்டப்பட்டது. எசுப்பானியக் கடற்படையின் தோல்வியினைக் காட்டுகிறது.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/8
சிறப்புப் படம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் ஓவியம். கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நிறங்கள் தாவரங்களில் இருந்து பெற்றவை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் ஓவியம். கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நிறங்கள் தாவரங்களில் இருந்து பெற்றவை



உலகளாவிய அளவிலே தலைசிறந்த ஓவியச்சிறப்பு கொண்டதாகக் கருதத்தக்க சமணர் குகை ஓவியம் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் என்னும் மலைக்குன்றுப் பகுதியில் உள்ளது. மிகவும் அழியும் தறுவாயில் இருக்கும் பேரழகான ஓவியம் மகாராட்டிராவில் உள்ள உலகப்புகழ் பெற்ற அசந்தா குகை ஓவியங்களுக்கு ஈடாகக் கருதப்படுகின்றன. கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நிறங்கள் தாவரங்களில் இருந்து பெற்றவை.
படிம உதவி: செ. இரா. செல்வக்குமார்

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/9
சிறப்புப் படம்



நீந்தும் கலைமான்
நீந்தும் கலைமான்



நீந்தும் கலைமான் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள, 13,000 ஆண்டுகள் பழமையான ஒரு சிற்பம் ஆகும். மாமூத் தந்தத்தின் நுனிப் பகுதியில், இரண்டு கலைமான்கள் நீந்துவது போல் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பிரான்சில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிற்பத்தை 1866 ஆம் ஆண்டில் இரண்டு துண்டுகளாகக் கண்டுபிடித்தனர். ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே என்றி பிரேயில் என்பவர் இவ்விரு துண்டுகளும் பொருந்தக்கூடியன என்றும் அவை, இரண்டு கலைமான்கள் ஒன்றின் பின்னால் இன்னொன்று நீந்துவதுபோல் அமைந்த ஒரே சிற்பத்தின் பகுதிகள் என்றும் உணர்ந்தார்.
படிம உதவி: படம்: பிளிக்கர்

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/10
சிறப்புப் படம்





சாமுராய் வர்க்கத்தினர் தொழில்மயமாக்கத்திற்கு முற்பட்ட ஜப்பானிய படைத்துறையில் இடம்பெற்ற ஒரு குழுவினர். கி.பி. 7ம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை ஜப்பானிய படைத்துறையின் முதுகெலும்பாய் இருந்தவர்கள். ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, தன்கட்டுப்பாடு, போரில் தோல்வி ஏற்பட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் கையால் மாய்த்துக் கொள்வது போன்ற கட்டுக்கோப்பான சட்ட திட்டங்களுக்காகவும் போர்த் திறனுக்காகவும் இவர்கள் பரவலாக அறியப்பட்டனர். ஜப்பானின் அரசியலில் பல நூற்றாண்டுகளுக்கு சாமுராய் குழுக்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. படத்தில் ஒரு கவசமணிந்த சாமுராய் தன் நீண்ட வாளை உருவிய வண்ணம் நிற்கிறார்.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/11
சிறப்புப் படம்





யால்ட்டா மாநாடு‎ இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளான ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையே பெப்ரவரி 4, 1945 முதல் பெப்ரவரி 11, 1945 வரையில் இடம்பெற்ற உச்சி மாநாடு ஆகும். இதில் போர் முடிந்த பின்னால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல முக்கிய உடன்படிக்கைகள் ஏற்பட்டன. படத்தில் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட் மற்றும் ஜோசப் ஸ்டாலின் அமர்ந்திருக்கின்றனர்.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/12
சிறப்புப் படம்





ஆம்ஸ்டர்டாம் நகரில் 1869ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக வரைபடம். ஜெரார்டு வான் சாகன் எனும் நிலப் பட வரைவியலாளரால் வரையப்பட்ட இந்த வரைபடம் தாமிரத்தைச் செதுக்கி உருவாக்கப்பட்டது. இவ்வரைபடத்தில் ஆசிய ஆப்பிரிக்கக் கண்டங்கள் தனி வட்டப் பகுதியிலும் வட தென் அமெரிக்கக் கண்டங்கள் தனி வட்டப் பகுதியிலும் புவியின் இரு துருவங்களும் இரு தனி வட்டப் பகுதிகளிலும் காட்டப்பட்டுள்ளன.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/13
சிறப்புப் படம்





சாளுவன்குப்பம் புலிக்குடைவரை எனும் குடைவரை தமிழ் நாட்டிலுள்ள மாமல்லபுரத்துக்கு வடக்கே சென்னை நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகே சாளுவன்குப்பம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில் காணப்படும் ஏனைய குடைவரைகளினின்றும் வேறுபாடான அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் நோக்கம் குறித்துப் பல கருத்துக்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு கோவில் என்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடை என்றும் முன்னேயுள்ள வெளியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மன்னன் இருந்து பார்ப்பதற்கான மேடை என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/14
சிறப்புப் படம்





தஞ்சைப் பெருவுடையார் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 வது ஆண்டோடு வயது நிறைவடைந்தது. இக்கோவில் முழுமையாகத் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது என்றும் படையெடுப்புகளால் காலப்போக்கில் அது அழிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்திய அரசு இக்கோவிலை ரூ 1000 தாளில் வெளியிட்டும் அஞ்சல் தலையில் வெளியிட்டும் பெருமைப்படுத்தியுள்ளது.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/15
சிறப்புப் படம்





அல்கம்பிரா என்பது தெற்கு எசுப்பானியாவில் உள்ள கிரெனடாவின் இசுலாமிய ஆட்சியாளர்களால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாளிகை, கோட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுதி. ஒரு காலத்தில் கிரெனடாவின் முசுலிம் ஆட்சியாளர்களின் இருப்பிடம் ஆக இருந்த இவ்விடம் இன்று எசுப்பானியாவின் புகழ் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. அல்கம்பிரா யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/16
சிறப்புப் படம்





சிகிரியா இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஃபிராஸ்கோ முறையில் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்றும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றன. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் பாதுகாக்கப்படவேண்டிய உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் உள்ளது சிகிரியாக் குன்றின் வாயிலில் செதுக்கப்பட்டுள்ள சிங்கம் ஒன்றின் பாதம்.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/17
சிறப்புப் படம்





இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (1715–1777) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள குளச்சலில் நிறுவுவதற்காக அக்கம்பனியின் கடற்படைத் தளபதியாக அனுப்பப்பட்ட போது 1741 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர்ப் படைகளுடன் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து போர்க் கைதி ஆனார். ஆயினும், பின்னர் இவர் திருவிதாங்கூர்ப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். மன்னன் மார்த்தாண்ட வர்மரின் கீழிருந்த அந்நாட்டின் பிற்காலப் போர் வெற்றிகளுக்கு இவர் பெரிதும் துணை புரிந்ததாகக் கருதப்படுகிறது. குளச்சல் போரின்பின் டி லனோய் சரணடைவதைப் படம் காட்டுகிறது.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/18
சிறப்புப் படம்





இரண்டாம் நிக்கலாசு (1868 - 1918) இரசியப் பேரரசின் கடைசி மன்னன். இவன் 1894 முதல் 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் இரசியாவின் மன்னனாக இருந்தான். முதலாம் உலகப் போரில் இரசிய இராணுவத்தைக் கொண்டு நடத்தியவன். ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களால் அவனுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இவனது ஆட்சி இரசியப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது. இவனும் இவனது குடும்பமும் கைது செய்யப்பட்டனர். 1918 சூலை 16-17களில் நிக்கலாசு, மனைவி, மற்றும் ஐந்து பிள்ளைகள், ஒல்கா (பி. 1895), தத்தியானா (பி. 1897), மரீயா (பி. 1899), அனஸ்தாசியா (பி. 1901), அலெக்சி (பி. 1904) உட்பட முழுக் குடும்பமும் போல்செவிக்குகளால் கொல்லப்பட்டனர். இரண்டாம் நிக்கலாசின் எச்சங்கள் 1991 இல் கண்டுபிடிக்கப்பட்டு, அரச மரியாதைகளுடன் 1998 இல் சென் பீட்டர்சுபேர்க்கில் அடக்கம் செய்யப்பட்டது.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/19
சிறப்புப் படம்





அருச்சுனன் தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. முப்பது மீட்டர் வரை உயரம் கொண்ட இப் பாறை இயற்கையிலேயே நடுவில் பிளவு பட்டிருப்பது போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. இதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ளாது, இப்பிளவையும் சிற்பத் தொகுதியின் கருத்துருவுக்கு அமையத் திறமையாகச் சிற்பி பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/20
சிறப்புப் படம்





சங்கிலித்தோப்பு இலங்கையின் வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம். யாழ்ப்பாண நகரில் இருந்து இரண்டு மைல் தொலைவில் நல்லூரில் அமைந்துள்ளது. தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட இந் நிலப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்துக்கான குறியீடுகளாக இருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக் குறிப்பிடப்படுகின்ற கட்டிடமொன்றின் வாயில் வளைவும், யமுனா ஏரி எனப்படும் பகர வடிவக் கேணியொன்றும் ஆகும்.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/21
சிறப்புப் படம்





கிசாவின் பெரிய பிரமிட், ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகும். இதுவே உலகின் மிகப் பிரபலமான பிரமிட்டுமாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கட்டிமுடிக்கப்பட்டது, கிமு 2570 என்று கணக்கிடப்பட்டுள்ளது. நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கிசா நெக்ரோபோலிசில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/22
சிறப்புப் படம்





செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் எஞ்சியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ரோய்" என்றனர்.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/23
சிறப்புப் படம்





சாந்தோம் பசிலிகா இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறு பசிலிகா வகையைச்சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய பயணிகளால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியரால் கதீட்ரல் வகைக்கேற்ப மீளவும் கட்டப்பட்டது. கோதிக் கட்டிட வடிவமைப்பில் கட்டப்பட்ட அந்தக் கட்டிடமே தற்போது உள்ளது. இதனை 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டிட பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோதிக் வகையாக பகுக்கப்பட்டுள்ளது.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/24
சிறப்புப் படம்





யெர்றோனோமோ (Chiricahua: Goyaałé, "one who yawns" சூன் 16, 1829 – பெப்ரவரி 17, 1909) முக்கியமான முதற்குடி அமெரிக்க தலைவர்களில் ஒருவர். இவர் அப்பாச்சி குடியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், இவரது இடங்கள் மீது ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து சில பத்தாண்டுகள் போரிட்டார். இவரும், இவரது சிறு படையும் கடைசி சுதந்திர முதற்குடி மக்களாக வாழ்ந்தனர். அமெரிக்க அரசு இவரை 1886 இல் பிடித்தது.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/25
சிறப்புப் படம்





மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களின் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் அரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/26
சிறப்புப் படம்





இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நான்காம் ஈழப்போரில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தங்களிடம் பிடிபட்ட மற்றும் சரணடைந்த ஈழத்தமிழர்கள் சுமார் 2,50,000 மேற்பட்டோரை முல்வேலி முகாம்களில் சிறைவைத்தது. படத்தில் சிறை வைக்கப்பட்ட ஈழத்தமிழ் பொது மக்களில் ஒரு சிறு பகுதி.
படிம உதவி:

வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/27
சிறப்புப் படம்



சிங்கள ஓளிப்பட வல்லுனர் சந்திரகுப்த அமரசிங்க அவர்கள் இந்த தமிழ் இளைஞன் கொல்லப்பட சற்றுமுன்னர் எடுத்த ஒளிப்படம்
சிங்கள ஓளிப்பட வல்லுனர் சந்திரகுப்த அமரசிங்க அவர்கள் இந்த தமிழ் இளைஞன் கொல்லப்பட சற்றுமுன்னர் எடுத்த ஒளிப்படம்



கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்ட ஒரு துன்பவியல் நிகழ்வாகும். இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை இராணுவத்தினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.
படிம உதவி:

முன்மொழிதல்[தொகு]

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் சிறப்புப் படிமங்களின் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.