வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புக் கட்டுரை



தெர்னாத்தே சுல்தானகம் என்பது இந்தோனேசியாவின் ஆகப் பழைய முஸ்லிம் அரசுகளில் ஒன்றாகும். இது பாப் மசூர் மலாமோ என்பவரால் 1257 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுல்தான் பாபுல்லாஹ் (1570–1583) என்பவரின் ஆட்சிக் காலமே இவ்வரசின் பொற்காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் தெர்னாத்தே சுல்தானகம் இந்தோனேசியத் தீவுகளின் கிழக்குப் பகுதியின் பெரும் பாகத்தையும் பிலிப்பீன்சின் தென்பகுதியையும் தன்னகத்தே கொண்டிருந்தது. தெர்னாத்தே சுல்தானகம் அக்காலத்தில் உலகிலேயே ஆகக் கூடியளவு கிராம்பு உற்பத்தி செய்யும் இடமாகத் திகழ்ந்ததுடன், 15 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் பிராந்திய வல்லரசாகவும் திகழ்ந்தது. தொடக்கத்தில் இவ்வரசின் பெயர் காப்பி இராச்சியம் என்றே இருந்தது. பின்னர் இதன் தலைநகரமான தெர்னாத்தே நகரின் பெயரால் பெயர் மாற்றம் பெற்றது. தெர்னாத்தே சுல்தானகமும் இதன் அண்டைய அரசாகிய திடோரே சுல்தானகமும் இணைந்த பகுதியே உலகின் மிக முக்கியமான கிராம்பு உற்பத்திப் பகுதிகளாக இருந்தன. அதன் காரணமாக, இவ்விரு அரசுகளின் ஆட்சியாளர்களே இந்தோனேசியத் தீவுகளிலேயே செல்வம் மிக்கோராயும் வல்லமை பொருந்தியோராயும் விளங்கினர். எனினும் இவ்விரு அரசுகளினதும் செல்வத்திற் பெரும் பகுதி ஒன்றுக்கொன்று போரிடுவதிலேயே வீணாகியது.