வலைவாசல்:மெய்யியல்/தேர்ந்தெடுத்த கட்டுரை/7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழி மெய்யியல் என்பது மொழியின் இயல்பு, மூலம் மற்றும் பயன்பாடு குறித்த அறிவுசார் ஆராய்ச்சியாகும். பகுப்பாய்வு மெய்யியலாளர்கள், ஒரு தலைப்பாக மொழியின் மெய்யியலைக் கருதுகையில் அதன் நான்கு முக்கிய கேள்விகளாக - பொருள் இயல்பு, மொழிப் பயன்பாடு, மொழி அறிதிறன், மற்றும் மொழிக்கும் மெய்ந்நிலைக்குமான தொடர்பு ஆகியவற்றைக் கருதுவர். எனினும் பெருநிலப்பகுதி மெய்யியலாளர்களைப் பொருத்தமட்டில் மொழி மெய்யியல் தனித் தலைப்புப் பொருளாகக் கருதத்தகாததாகும். அதனை ஏரணம், வரலாறு அல்லது அரசியல் முதலிய மெய்யியலின் ஒரு பகுதியாகக் கருதினர்.

முதலாக, பொருளின் இயல்பு மற்றும் "பொருள்படுவது" என்பதன் பொருள் ஆகியவைக் குறித்தே மொழி மெய்யியலாளர்கள் ஆய்வு செய்வர். ஒத்தச்சொல்லின் இயல்பு, பொருளின் மூலங்கள், மற்றும் அறியக்கூடிய அதிகபட்ச பொருள் எண்ணிக்கை போன்ற தலைப்புகள் இவ்வாய்வினுள் அடக்கம். சொற்றொடர்கள் எவ்வாறு ஒரு முழுமையான பொருள் படுமாறு அதன் பகுதிகள் கொண்டு கோர்க்கப்படுகிறது என்பதைப் புலனாயும் செயல்கூறுகளும், பகுப்பாய்வு மொழி மெய்யியலாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும் இத்தலைப்பின் கீழ் அமையப்பெறும்.

அவர்கள், இரண்டாவதாக, பேசுவோரும் கேட்போரும் கருத்துப் பரிமாற்றத்ல் மொழியை எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதையும் சமூகத்தில் மொழி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முனைவர். மொழி கற்றல், மொழியாக்கம் மற்றும் பேச்சுச் செயல்கள் முதலிய தலைப்புகள் தனிச்சிறப்பான ஈடுபாடுகளுள் அடங்கும்.

மூன்றாவதாக, அவர்கள், பேச்சாளர் மற்றும் விளக்குவோர் ஆகியோரது அறிபுலனில் மொழி எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதையும் அறிய முனைவர். சொற்களை மற்ற சொற்களாக வளமாக மொழிபெயர்க்கத் தேவையான அடிப்படைகள் இவர்களின் ஆய்வுள் அடக்கம்.

இறுதியாக, அவர்கள், மொழி உண்மையோடும் சான்றோடும் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதையும் புலனாய்வர். மெய்யியலாளர்கள் எவ்வெத் தொடர்கள் உண்மையானவை என்று கருதுவதை விடுத்து எவ்வகையான பொருள்கள் உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கக்கூடும் என்பதையே கருதுவர். ஓர் உண்மை-சார் மொழி மெய்யியலாளர், பொருளற்ற தொடர் ஒன்று உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கக் கூடுமோ என்றோ அல்லது இல்லாத ஒன்றைப் பற்றிய கருத்தை ஒரு தொடரால் வெளிப்படுத்த இயலுமோ என்றோ சிந்திப்பாரே ஒழிய, தொடர்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி சிந்திக்க மாட்டார்.