வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் செரெங்கெட்டிப் பகுதியில் உள்ள பெரிய தேசியப் பூங்கா ஆகும். இது இங்கு ஆண்டுதோறும் நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு தொடர்பில் புகழ் பெற்றது. இந் நிகழ்வின் போது ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும் (wildebeest), 200,000 வரிக்குதிரைகளும் இடம் பெயர்கின்றன.செரெங்கெட்டி தான்சானியாவின் மிகப் பழைய தேசியப் பூங்காவாகும். இன்றும் இது நாட்டின் சுற்றுலாத்துறையின் முக்கிய அம்சமாக உள்ளது.இப்பூங்கா 14,763 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இதற்குள் புல்வெளிகள், ஐதான மரங்களைக் கொண்ட புற்றரைகள், ஆறுசார்ந்த காடுகள் என்பன அடங்கியுள்ளன. இப்பூங்கா நாட்டின் வட பகுதியில் தான்சானிய - கெனிய எல்லையில் அமைந்துள்ளது. இப் பகுதியில் இது மசாய் மாரா தேசிய ஒதுக்ககத்துடன் தொடர்ச்சியாக உள்ளது. இதன் தென்கிழக்குப் பகுதியில் இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதியும், தென்மேற்கில் மாசுவா வேட்டைவிலங்கு ஒதுக்ககமும், மேற்கு எல்லையில் இக்கோரோங்கோ மற்றும் குருமெட்டி வேட்டைவிலங்கு ஒதுக்ககமும் உள்ளன. வடகிழக்கில் லொலியோண்டோ வேட்டைவிலங்குக் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ளது.