வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/12

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் மலைசார் மழைக்காடுகள் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கடல் மட்டத்திலிருந்து 1000மீ உயரத்துக்கு மேலாக அமைந்துள்ள சூழலியற் பகுதி உள்ளடக்குகின்ற காடுகள் ஆகும். வளமான உயிர்ப்பல்வகைமையைக் கொண்டுள்ள இப்பகுதி உலக வாழ் உயிரினங்கள் பலவற்றிலும் தனிச் சிறப்பு மிக்க இனங்கள் ஏராளமாக வாழும் இடமாகும். இக்காடுகள் தாழ்நில மழைக்காடுகளிலும் பார்க்க மிக்க குளிர்ச்சியானவையாகும். இதன் காரணமாக, இக்காடுகளில் மேகக் காடுகள் உருவாவதற்குத் தேவையான சூழற் தகைமை காணப்படுகிறது. இலங்கைக்குத் தனிச் சிறப்பான பூக்குந் தாவரங்களில் அரைவாசிக்கும் கூடுதலானவையும் தனிச் சிறப்பான முள்ளந்தண்டுளிகள், இலங்கைக்குத் தனிச் சிறப்பான மரங்கள், புதர்கள், மூலிகைகள் என்பவற்றில் பெரும்பாலானவை இக்காடுகளிலேயே காணக் கிடைக்கின்றன. அவ்வாறே, ஏராளமான ஓர்க்கிட், பாசி, பன்னத் தாவரங்களும் இக்காடுகளில் தனிச் சிறப்பைக் காட்டுகின்றன. இக்காடுகளில் மரங்கள் 10-15மீ உயரம் வளர்கின்றன. இவை இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளில் காணப்படும் மரங்களைவிட உயரம் மிகக் குறைவானவையாகும். மேலும், இவ்வுயர் நிலக் காடுகள் இலங்கையின் முக்கிய ஆறுகள் பலவற்றிற்கும் நீர்தாங்கு பகுதிகளாகக் காணப்படுகின்றன.