உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:துடுப்பாட்டம்/முகவுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்து வீச்சாளர் மட்டையாளருக்கு பந்து வீசும் காட்சி

துடுப்பாட்டம் (ஆங்கிலம்: Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய மூன்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துடுப்பாட்ட வகைகள் ஆகும்.

துடுப்பாட்டத்தின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே துடுப்பாட்டத்தின் முதல் வரலாற்றுச் சான்றாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் விரிவாக்கம் மூலம் துடுப்பாட்ட விளையாட்டு உலகளவில் பரவியது. இதனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துடுப்பாட்டம் பன்னாட்டு ரீதியாக விளையாடப்படத் தொடங்கியது. தற்போது துடுப்பாட்டத்தின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 100க்கும் மேற்பட்ட நாட்டு அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதிபெற்றுள்ளன.