வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாடு[தொகு]

தமிழீழ நபர்கள் துனைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/வடிவமைப்பு.

சிறப்புப் படம்[தொகு]

வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/1

குமார் பொன்னம்பலம்

குமார் பொன்னம்பலம் ஒர் தமிழ் வக்கீலும் அரசியல்வாதியும் ஆவர். இவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். சந்திரிகா குமாரத்துங்கவிற்கு எதிரான தற்கொலைத்தாக்குதலை அடுத்து இவர் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மகன் இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்ற அரசியலில் இவருக்கு வெற்றிகள் கிட்டாவிட்டாலும், அதற்கு வெளியே இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். இதனால், இனவாதிகள் இவரை வெறுத்தனர். இதன் உச்சக் கட்டமாக அவர்களால் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் இறந்தபோது, விடுதலைப் புலிகள் இவருக்கு மாமனிதர் என்னும் விருது வழங்கிக் கௌரவித்தனர்.


வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/2

சௌமியமூர்த்தி தொண்டமான்

சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றில் அமைச்சராகப் பதவி வகித்தார். தொண்டமானின் தந்தையார் இந்தியாவின் புதுக்கோட்டை பகுதியில் இருந்த அரச பரம்பரை வழி வந்தவராவார். தீவிர காந்தியவாதியான இவர், இந்திய பாகிசுத்தானிய குடியேற்றவாதிகளின் வக்குரிமையை பறிக்கும் இலங்கை அரசின் சட்டத்தை அகிம்சை வழியில் எதித்தார்..


வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/3 பாலு மகேந்திரா தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர்,இலங்கையில், மட்டக்களப்பில் பிறந்தவர்; இயற்பெயர், பெஞ்சமின் மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலை கல்வி படிப்பினை முடித்தார். புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவினைப் பயின்றார். அங்கு தங்கப் பதக்கம் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டவர், பாலு. இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.

பல்வேறு கருப்பொருள் கொண்ட கதைகளை யதார்த்தமாக உலகத் தரத்திற்கு இணையாக இயக்கியுள்ளார். "மூன்றாம் பிறை", "அழியாத கோலங்கள்", "வீடு", "சந்தியா ராகம்", "மறுபடியும்", "மூடு பனி" முதலியன இவருடைய புகழ் பெற்ற படங்களில் சில.

பாலுவின் பட்டறையிலிருந்து வெளிவந்த பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக திகழ்கின்றனர். "சேது","நந்தா","பிதாமகன்" போன்ற தனித்துவமான படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.


வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/4

வேலுப்பிள்ளை பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். வல்வெட்டித்துறையில் அறியப்பட்ட நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி. பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

பல இலங்கைத் தமிழர்கள் இவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.


வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/5

லக்சுமன் கதிர்காமர்

லக்சுமன் கதிர்காமர் இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் வெளிநாட்டமைச்சருமாவார்.கதிர்காமர் மானிப்பாயை சொந்த இடமாகக் கொண்ட சாமுவேல் கதிர்காமருக்கும் பரிமளம் கதிர்காமருக்கும் ஆறாவதும் கடைசி பிள்ளையாக கண்டியில் 1932 ஏப்ரல் 12 ஆம் நாள் பிறந்தார். பள்ளிக் கல்வியை கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பயின்ற கதிகாமர் கல்லூரி துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் கல்லூரி ரக்பி அணியினதும் அங்கத்தராக இருந்தார் கல்லூரி தடகள விளையாட்டுக்களிலும் பங்குபற்றி வந்தார். 1950 ஆம் ஆண்டின் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான ரைட் தங்கப்பதக்கத்தை கதிர்காமர் வென்றார். சட்டக் கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இலங்கைப் பல்கலைகழகத்தின் துடுப்ப்பாட்ட அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார். பட்டப்படிப்பின் பின் இலங்கை நீதவானின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்ற கதிர்காமர் இன்னர் டெம்பள் (Inner Temple) வழையாக சட்டத்தரணியாக பதவியேற்றார் அதே வேலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியிலும் இணைந்துக் கொண்டார். இதன் போதும் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றிருந்த கதிர்காமர் ஆக்சுபோடு பல்கலையின் மாண்வர் ஒன்றிய தலைவரகத் தேர்வுச் செய்யப்பட்டார்.

2005 13 ஆகஸ்ட் ஆம் நாள் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையை விடுதலைப் புலிகள் அமைபினர் செய்ததாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டியது.


வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/6

ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.


வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/7 காசி ஆனந்தன் (இயற்பெயர்: சிவானந்தன்) ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர். மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். வாகன இலக்கத்தகடுகளிலேயே சிங்கள எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்று அவற்றை அகற்றும் போராட்டத்திலும் பாடசாலை பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழி இருக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்து காவலர்களால் கைதாகி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர். பின்னர் தமிழ் நாடு சென்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் உயர் கல்வி கற்கும் வேளையில் அங்கு பெரியார் ஈ. வெ. ராமசாமியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் 1963இல் இலங்கை திரும்பி இலங்கை அரச மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். 1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது அதன் தமிழ் எதிர்ப்புக் கொள்கையோடு ஒத்து வராததால் அரசுப் பணியிலிருந்து விலகி ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணை நின்றார். இவர் சிறீலங்காவிலுள்ள ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார். ஈழப்போராட்ட காலத்தின் இக்கட்டான காலப்பகுதிகளில் தோளோடு தோள் நின்ற இவருக்கு தமிழீழத்தின் அதிஉயர் விருதான மாமனிதர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.


வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/8

சுவாமி விபுலாநந்தரின் உருவப்படம். ஓவியர் ஞானம் வரைந்தது 2006

சுவாமி விபுலாநந்தர் கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர். சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மையார் தம்பதிகளுக்கு பிறந்தார். சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் நாளும் செந்தமிழ் இசைபரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க, கற்றோரும், மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.

யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல், சுவாமி அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.


வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/9

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன் பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். 22 சூலை 2010 அன்று தேர்வுக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார். இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.

2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்.


வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/10

சங்கிலியனின் சிலை. யாழ்ப்பானம், இலங்கை

சங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன் என்பதால் சங்கிலியனைப் பற்றி அவர்கள் நல்ல கருத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்ப்பதற்கு இல்லை. இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.


வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/11 வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/11


[[வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/12] துரைராஜா

பேராசிரியர் துரைராஜா[தொகு]

“இங்கு அஞ்சலி உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.”

வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும்.

பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து அன்புகாட்டிய முறைமைக்கு இந்த முதியவரின் வார்த்தைகள் நல்ல உதாரணம். இது தனியொருவரின் கருத்தல்ல; தமிழினத்தின் ஒட்டுமொத்தக் குரலும் – உணர்வும் இதுதான். இந்த உணர்வை பேராசிரியரின் பிரிவுபசார நிகழ்ச்சிகளின்போதும், பின்னர் அவரது மரணச்சடங்குகளின் போது மொதுமக்களும், மாணவர்களும், சக கல்விமான்களும் அவருக்குச் செலுத்திய இறுதி மரியாதையிலும் கண்டுகொள்ள முடியும். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் சூடுவதுபோல, தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டையும் கெளரவ விருதையும் பேராசிரியர் பெற்றுக்கொண்டார். பிரிவுபசாரத்தின்போது பேராசிரியரின் பணியைப் பாராட்டி ஒரு செய்தியையும், பேராசிரியர் மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செய்த ஒரு இரங்கல் செய்தியையும் வெளியிட்டு, பேராசிரியருக்கு ஒரு அதி உச்சக் கௌரவத்தைத் தலைவர் கொடுத்திருந்தார்.

ஈழத்தமிழினம் கல்விப் பாரம்பரியம் மிக்க ஒரு மக்கள் இனம் என்பதைப் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்வர். உலகம் போற்றும் கல்விமான்கள் பலரை தமிழீழ அன்னை பெற்றேடுத்துள்ளாள் என்பதும் மறுக்கப்படமுடியாத உண்மை. ஆனால் இவர்களுள் எத்தனைபேர் பிறந்த மண்ணுக்குச் சேவை செய்தார்கள்? எத்தனைபேர் தனது இனத்தின் ஒட்டுமொத்த வாழ்வை உயர்த்திவிட தன்னலம் பாராது பாடுபட்டார்கள்? அறிவின் உச்சத்தில் பணிவைக் கடைப்பிடித்து மக்கள் சேவகனாக, மக்களில் ஒருவனாக வாழ்ந்த மண்பற்றுள்ள பேராசான்கள் எத்தனைபேர்?

இந்த வினாக்களுக்கு விடையாக “பேராசியர் துரைராசா!” என்று எல்லோரும் ஒருமித்துக் கூறுவார். அந்தளவுக்கு பேராசிரியரின் அறிவும், பண்பும், பணிவும், தனிப்பட்ட வாழ்வும், மேன்மையுடையதாக அமைந்திருந்தன.

தமிழ் மக்களின் சொத்துக்களின் ஒன்றாகிய கல்விக்குப் பேராபத்து நேர்ந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ஏற்றுக்கொண்ட அவர், தமிழரின் உயர் கல்விக்கு புத்துயிர் ஊட்டி, புது இரத்தம் பாய்ச்சியிருந்தார் என்பது வரலாற்று உண்மை.

அவர் வகித்த பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியங்களும் சிங்கள அரசின் கைகளில் இருந்தபோதும், தமிழீழ தேசத்திற்கு, தமிழ் மக்களுக்கு சேவை புரிவதற்கு அவற்றை ஒரு தடையாகச் சொல்லி இவர் தப்பிக்க முயன்றதில்லை. அவர் கலந்துகொண்ட எல்லாக் கூட்டங்களிலும், எல்லாக் கலந்துரையாடல்களிலும், எல்லா நிகழ்வுகளிலும், தமிழினத்துக்கு எதிரான ஒடுக்குமுறைபற்றியும் தமிழீழ தேசியம் பலம்பெறவேண்டிய அவசியம் பற்றியும், தெளிவாகவும் வெளிப்படையாகவும் தனது கருத்தை எடுத்துக்கூறுவார்.

நூல் வெளியீட்டு விழாவிலும் தமிழீழ தேசியம்பற்றிப் பேசுவார்.

கல்வி மற்றும் அபிவிருத்தி சம்மந்தப்பட்ட கூட்டங்களிலும் தமிழீழ தேசியம்பற்றிப் பேசுவார்.

பேராசானுக்கு விருது சூட்டி மகிழும் பெருந்தலைவன் “தேசப்பற்றோடும், மக்கள் நேயத்தோடும் மண்ணுக்கு அவர் மகத்தான சேவை ஆற்றினார்.”

சக கல்விமான்கள் மற்றும் வேற்று இன நண்பர்களுடன் கலந்துரையாடும்போதும் தமிழீழ தேசியத்தை வலியுறுத்திப் பேசுவார்.

ஏன்! அவருக்கு நடந்த பிரிவுபசாரக் கூட்டத்திலும் அதையேதான் பேசினார்.

தமிழீழத்தில் நடந்த கூட்டங்களில் மட்டுமல்ல, சிங்கள தேசத்தில், கல்விமான்கள் மத்தியில் நடைபெற்ற கலந்துரையாடல்களிலும் அதையேதான் பேசினார்; வெளிநாடுகளில் நடந்த சந்திப்புக்களிலும் அதையேதான் வற்புறுத்தினார்.

தமிழரின் சுயநிர்ணய உரிமைபற்றியும், தமிழீழ தேசியத்தைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் பேசுவதற்கு ஒர்போழுதும் அவர் அஞ்சியதுமில்லை; பின் வாங்கியதுமில்லை.

அதேவேளை. உலகளாவியரீதியில் தத்தமது வாழ்க்கைச் சக்கரங்களைச் சுழற்றுவதற்குத் திண்டாடும் ஏழை மக்களையும் அவர் அடிக்கடி நினைவூட்டிப் பேசி, அந்த மக்களின்பால் தான் வைத்திருக்கும் கரிசனையையும் எடுத்துரைப்பார். 500 கோடி உலக சனத்தொகையில் 1/5 பகுதியினர் பட்டினிக்கு முகங்கொடுத்து வாழப்போராடுகின்றனர் என்று எடுத்துக்கூறி, அந்தத் துர்ப்பாக்கியநிலை எமது மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அறிவுரை கூறுவார்.

“அரசு திட்டமிட்டு தமிழரின் கல்வியை அழிக்க முநிகின்றது. ஆனால் தமிழினத்தின் கல்வியை அழியவிடாது பாதுகாப்பது எங்களின் கடமை” என்று, வதிரியில் நடந்த பிரிவுபசார விழாவில் பேசிய பேராசிரியர் அவர்கள்…………….

“எமது இயற்கை வளத்தையும் கல்வியால் பெறப்படும் மூளைவளத்தையும் கொண்டு எமது மனத வளத்தையும் சரியாக வளர்த்தெடுத்து, பயன்படுத்தி, எமது தேசத்தின் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்” என்று தேசியப் பிரக்ஞையுடன் பேசினார். அத்துடன் நின்று விட்டாரா…………..? இல்லை.

“கிராமங்கள் வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் வளரும்” என்றார்.

“ஏழை எளிய மக்களின் வாழ்வு உயர்ந்தால்தான் கிராமம் வளரும்” என்றார்.

“இந்த ஏழை எளிய மக்களின் வாழ்வை வளப்படுத்த சனசமூக நிலையங்கள் பாடுபடவேண்டும்” என்றும் அறிவுரை கூறினார்.

தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் நியாயம்பற்றி சிங்கள தேசத்தில், சிங்களப் புத்திஜீவிகள் மத்தியில் விவாதிக்கும்போது, எதிராளிகளின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டோ அல்லது தன்னலத்தை அடிப்படையாகக்கொண்ட காரணங்களுக்காகவோ விட்டுக் கொடுத்தோ அல்லது ‘சளாப்பிக்’ கதைத்தோ இல்லை. இந்த நேர்மையை தெளிவான அவரது அரசியல் நிலைப்பாட்டை, பேரினவாத உணர்வுடன் உள்ள சிங்கள இனத்தின் புத்திஜீவிகள் கூட மதித்தனர்.

பிரிவுபசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது பேராசிரியர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

ஒருநாள் கத்தோலிக்கச் சிங்களவரான ஒரு கல்விமான் பேராசிரியரிடம் சொன்னாராம்.

“சிங்களவர் மத்தியில் கத்தோலிக்கரான நாங்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கின்றோம். அதனால் பௌத்த சிங்களவர்களுக்கு விட்டுக்கொடுத்து, சகிப்புத் ஹன்மையுடன் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக, அமைதியாக வாழக் கற்றுக்கொண்டுள்ளோம். அதுபோல நீங்களும் (தமிழினம்) விட்டுக்கொடுத்து அமைதியாக வாழலாம்தானே” என்று.

இதற்குப் பதில்கூரும்போது, சிங்களப் பேரினவாத அரசுகளின் தமிழின விரோத நடவடிக்கைகளை பேராசிரியர் விளக்கிவிட்டு,

“…………தமிழர் ஒரு தேசிய இனம் (Nation); அவர்களுக்கு என்றொரு தனித்துவமான நிலமுண்டு, அதேபோல மொழி உண்டு, பண்பாடுண்டு, பொருளாதார வாழ்வுண்டு, ஆகவே அவர்கள் தம்மைத் தாமே ஆட்சிசெய்யக்கூடிய சுயநிர்ணய உரிமையையும் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் தம்மைத்தாமே ஆட்சிசெய்ய விரும்புகின்றார்கள்” என்று பதிலளித்தாராம்.

இந்த விடயங்களை ஒரு கூட்டத்தில் வைத்து பேராசிரியர் அவர்களே தெரிவித்தார்.

தமிழீழத் தேசிய உணர்வுடன் பேசியது மட்டும்தானா பேராசிரியர் செய்த பணி? இல்லை; பேசியபடி வாழ்ந்தும் காட்டியதுதான் அந்தப் பேராசானின் பெருமைக்குக் காரணம்!

“சலுகை ஏறக்கூடிய உரிமை இருந்தும் ஏன் நீங்கள் கப்பல் பயணத்தைத் தவிர்த்து, கொலைக்கடலான கிளாலியூடாக கொழும்புக்குப் பயணம் செய்கிண்றீர்கள்?” என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கேட்டபோது, அந்தப் பெருமகன் பெருமைபொங்கக் கூறிய பதில், தமிழீழப் போராற்ற வரலாற்றில் பொறிக்கப்பட்டுவிட்டது.

“எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன், கிளாலி ஊடாக பயணம் செய்யக்கூடாது என அரசு சட்டம் போட்டது. ஆனால் மக்கள் அதை மீறிப் பயணம்போய் அரசின் சட்டத்தை உடைத்தனர். இதுவும் அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம் ஆகும். நானும் மக்களுடன் சேர்ந்து எனது பங்களிப்பையும் செய்கின்றேன். இதன்மூலம் மக்கள்படும் வேதனையில் நானும் பங்குகொண்டு மனநினைவடைகின்றேன்” என்று மனமகிழ்ச்சியுடன் பேராசிரியர் கூறியிருந்தார்.

இன்னுமொரு தடவை, கொழும்பிலிருந்து கப்பல்மூலம் தீவகத்தை அடைந்த பேராசிரியர், ஒருநாள் இரவை அகதிமுகாமில் எமது மக்களுடன் கழித்தார். அவருக்குத் தனி வசதி செய்துகொடுக்க அங்கிருந்த சிலர் முயன்றபோதும் மறுத்துவிட்டார். துன்பபட்ட தனது தேசத்தின் குடிமக்களுடன் சேர்ந்து வாழ்வைப் பகிர்ந்துகொள்வதில் அவர் இன்பமடைந்திருந்தார்.

பல்கலைக்கழகத்திலிருந்து தனது கிராமமான வதிரிக்குச் செல்லும் வேளையில், வல்வை வெளியில் இரத்தப் புற்றுநோய் தாக்கிய அந்த உடம்பை வைத்து அந்த பேராசான் மிதிவண்டியுடன் போராடும்போது, வாகனத்தில் அவரை முந்திச் செல்ல முனையும் போராளிகள், கண்ணிவெடி வயலில் கடப்பதுபோல நெளிந்து மனங்குமைந்தபடி கடப்பர். மனம் வராது கீழிறங்குபவர்களைப் பார்த்து வெள்ளை மனதுடன் விடிகொடுக்கும் அந்தப் பண்பு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும்.

யாழ்.பல்கலைக்கழக கட்டடமொன்றில், ‘துணைவேந்தர்’ என்ற பெயர்பலகையுடன் அதியுயர் அதிகாரத்தையும் கொண்ட அந்த அறையினுள் பேராசிரியர் இருக்கும்போது, பாலர் வகுப்பறை போன்றே அது தென்படும். பல்கலைக்கழக மாணவர்கள் சிற்றூழியர்கள் சகஜமாக உள்ளே போவதும், சந்தோசமாக உரையாடுவதும், சிரித்த முகத்துடன் வெளியே வருவதும் வழமையான காட்சிகள்.

சாதாரணமாக இத்தகைய உயர் பதவியில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கவே சிரபப்படும் நிலையில், அன்றாடம் இவரை எல்லோரும் சிரமமின்றிப் பார்த்தனர்; அவருடன் பேசினார்.

அவரது சொந்தக் கிராமத்திலும் உயர எழுப்பிய மதில்சுவருக்குள் சிறையிலிருந்து, மக்களிடமிருந்து அன்னியப்பட்டு அவர் வாழவில்லை.

சனசமூக நிலையம் சென்று பத்திரிக்கை வாசித்தார்; குடும்பத்தாருடன் சேர்ந்து தோட்டம் செய்தார்; கிராமத்து வீதிகளில் நின்றபடி மக்களுடன் அன்றையப் புதினங்களைப்பற்றிக் கதைத்தார்; மக்களுடன் மக்களாகவே வாழ்ந்தார்.

யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு கொழும்பு திரும்ப ஒரு சில நாட்கள் முன்னர் பேராசிரியரை அழைத்த புலிகளின் அரசியல் துறையினர், அவரது சேவையைப் பாராட்டும் முகமாக ஒரு விருந்துபசாரம் நடாத்தி அவரைக் கௌரவித்தனர். தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்குகொண்ட அந்த நிகழ்வில் பேராசிரியர் துறைராசாவும் உரையாற்றினார்.

வழமைபோலவே போராட்டத்தின் தேவை பற்றியும், சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை பற்றியும், தன்னிறைவான பொருளாதாரத்தின் அவசியம்பற்றியும் பேசினார். அப்பேச்சின் ஒரு கட்டத்தில்…..,

“……..எமது இனத்தின் விடுதலைக்காக தங்களது உயிரைத் தியாகம்செய்ய ஆயத்தமாக இருக்கும் புலிகளுக்கு, நான் தலை சாய்த்து வணக்கம் செலுத்த விடும்புகின்றேன்” என்று, தனது தூய நாவால் போராளிகளை மதித்து உரையாற்றிய அந்தப் பெருந்தகை, எம்மைவிட்டு நிரந்தரமாகவே பிரிந்துவிட்டார்.

பேராசிரியர் துரைராசா அவர்கள், புலமையும் பரந்த பார்வையும் கொண்ட பேராசான் மட்டுமல்ல….,

தமிழ் மக்களின் இதயங்களைக் கவர்ந்தெடுத்த ஒரு மக்கள் சேவகன் மட்டுமல்ல……,

தமிழீழ அன்னைக்குத் தொண்டு செய்த அதன் தவப்புதல்வன்.

தமிழீழ அன்னைக்கு வலுச்சேர்க்கப் பாடுபட்ட ஒரு தேசப்பற்றாளன்.

ஒரு உண்மை மனிதன்.

தமிழினத்தின் கல்வியில் அவரது சேவை ஒரு கலங்கரை விளக்கு.

உலகக் கல்விமான்கள் மத்தியில் அவர் ஒரு அறிவுப் பழம்.

எமது மக்களின் உரிமைகள் பற்றிப் பேசும்போது அவர் ஒரு போராளி.

அவரது கிராமத்திலோ வேட்டி கட்டிய ஒரு விவசாயி.

இவ்விதம் மக்களின் அனைத்து மட்டங்களிலும் தனது பண்பான, நேர்மையான, பணிவான, சேவையால் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட பேராசிரியரின் திடீர் மறைவு, தமது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்துவிட்ட தவிப்பைத்தான் மக்கள் ஒவ்வொருவரிலும் ஏற்படுத்தியுள்ளது.

தனது உணர்வை வெளிப்படுத்த வதிரிக் கிராமத்தின் அந்த முதியவர் பயன்படுத்திய வார்த்தைகளில்தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது!

“பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும்!”


முன்மொழிதல்[தொகு]

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபர்கள் பற்றிய கட்டுரைத் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.