வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/23

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்ப இராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.

கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.