வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/16

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஔவை துரைசாமி

ஔவை துரைசாமி (செப்டம்பர் 5, 1902 - ஏப்ரல் 3, 1981) தமிழறிஞர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில், சுந்தரம் பிள்ளை - சந்திரமதி தம்பதிக்கு மகனாக 1902 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் திண்டிவனத்திலிருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில், பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று சிறப்பாகத் தேறினார். பின்பு, வேலூர் ஊரீசு கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் குடும்ப வறுமையினால் கல்வியைத் தொடர வாய்ப்பில்லாமல் போயிற்று. குடும்பத்திற்கு உதவ "உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்" பணியில் சேர்ந்தார். அப்பணியில் தொடர மனம் இல்லாமல் ஆறே மாதத்தில் அப்பணியிலிருந்து விலகினார்.