வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/11

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. கணபதிப்பிள்ளை

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 23 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

பண்டிதமணி இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுவில் என்ற ஊரில் தருமர் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி மற்றும் தனங்களப்பு முருகர் மகள் வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். மூன்றாவது வயதிலேயே தாயாரை இழந்தவர், 13வது வயதில் தந்தையாருடன் தனங்களப்புக்கு இடம்பெயர்ந்தார். தமிழறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப் புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை ஆகியோரிடத்தில் தமிழ் கற்ற கணபதிப்பிள்ளை 1917 இல் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், வித்தகம் ச. கந்தையாபிள்ளை, வித்துவான் ச.சுப்பையாபிள்ளை, சுவாமி விபுலாநந்தர் போன்ற பேரறிஞர்களிடம் கல்வி கற்றார்.