வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாடு[தொகு]

இலக்கியவாதிகள் துணைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/வடிவமைப்பு.

இலக்கியவாதிகள்[தொகு]

1

சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.


2 அசலாம்பிகை என்பவர் பெண்களுக்கும் இளம் விதவைகளுக்கும் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் அதையெல்லாம் புறக்கணித்து, இளம் வயதில் கணவனை இழந்த நிலையிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று தமிழறிஞராக மாறியவர். இவர் சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார். திண்டிவனம் அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் 1875 ஆம் ஆண்டில் பிறந்த இவர் பத்தாவது வயதில் திருமணம் முடிந்து கணவனையும் இழந்தார். அன்றைய காலகட்டத்தில் கணவனை இழந்தவர்கள் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாத சமூகக் கட்டுப்பாடுகள் அதிகமிருந்த நிலையில் அவரது தந்தை பெருமாள் அய்யர் இவரைப் படிக்க வைக்க விரும்பினார். ஆசிரியரை வீட்டுக்கு வரவைத்து பாடங்கள் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக அந்த ஊரை விட்டு வெளியேறி திருப்பாதிரிப் புலியூரில் குடியேறினார். அசலாம்பிகை தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த புலமை பெற்றார்.


3

சி. கணேசையர்

சி. கணேசையர் (ஏப்ரல் 1, 1878 - நவம்பர் 8, 1958) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவசிரோன்மணி என்ற பட்டம் பெற்றவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். ஈழத்தில் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு) இவர் இமயம்போல் போற்றப்படுகிறார்.

யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே ஏறத்தாழ 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புன்னாலைக்கட்டுவன் என்னும் விவசாயக் கிராமத்தில் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய ஆதீன பரம்பரையில் வாழ்ந்துவந்த சைவ அந்தணர் குல சின்னையர் என்பவருக்கும் சின்னம்மாளுக்கும் ஐந்தாவது புதல்வராக 15-04-1878 இல் கணேசையர் பிறந்தார்.


4 நா. கதிரவேற்பிள்ளை (டிசம்பர் 3, 1860[1], - 1907), புலோலி, யாழ்ப்பாணம்) தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். யாழ்ப்பாணம் மேலைப் புலோலியில் வாழ்ந்த நாகப்ப பிள்ளை, சிவகாமி அம்மையாரின் இல்லறப் பயனாக, 1844 ஆம் ஆண்டு பிறந்த கதிரவேற்பிள்ளை, அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆறுமுக நாவலரின் மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்.


5

குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.


6

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு - 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார். பத்திரிகை ஆசிரியர், கவிஞர், இலக்கியவாதி என பன்முக முகங்களை கொண்டவர் மனுஷ்ய புத்திரன். இவர் 20 ஆண்டுகளாக இலக்கியப் பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழை நடத்தி வருகிறார்.

மனுஷ்ய புத்திரன் துவரங்குறிச்சி, திருச்சி மாவட்டத்தில் 15 மார்ச் 1968 அன்று நான்கு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தார்.


7

விபுலானந்தர்

சுவாமி விபுலானந்தர் அல்லது சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 - ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.

சுவாமி விபுலானந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம், 27 ஆம் தேதி சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார்.


8 கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் அப்துல் ரகுமான்,(பிறப்பு: நவம்பர் 2, 1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.


9

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்பதாகும். (ஆங்கிலம் - Constantine Joesph Beschi - கான்ஸ்டன்டைன் சோசப்பு பெச்கி). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிருத்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.


10

அமுதபாரதி

அமுதபாரதி என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் ஓவியர் அமுதோனின் இயற்பெயர் மாமண்டூர் குமாரசாமி தாயுமானவர் என்பது ஆகும். இவர் ஐக்கூ (Haiku) என்னும் சப்பானிய கவிதை வடிவத்தில் தமிழ்க் கவிதைகள் எழுதும் முன்னோடிகளில் ஒருவர். அந்தாதி வடிவில் ஐக்கூ எழுதி தமிழ், சப்பானிய கவிதை வடிவங்களை இணைத்தவர். இவர் அமுதோன் என்னும் பெயரில் புத்தகங்களுக்கு அட்டைப்படங்களை வடிவமைக்கிறார்; உள்ளடக்க ஓவியங்களை வரைகிறார். இவரது ஓவியக்கூடம் சென்னை தியாகராய நகரில் உள்ள சிவஞானம் தெருவில் அமைந்திருக்கிறது. பட்டினப்பாக்கத்தில் இல்லம் அமைந்து இருக்கிறது.

அமுதபாரதி 31 ஆகத்து 1939 ஆம் நாளில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் வாழ்ந்த மா. குமாரசாமி – வள்ளியம்மாள் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.


11

சி. கணபதிப்பிள்ளை

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 23 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

பண்டிதமணி இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுவில் என்ற ஊரில் தருமர் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி மற்றும் தனங்களப்பு முருகர் மகள் வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். மூன்றாவது வயதிலேயே தாயாரை இழந்தவர், 13வது வயதில் தந்தையாருடன் தனங்களப்புக்கு இடம்பெயர்ந்தார். தமிழறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப் புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை ஆகியோரிடத்தில் தமிழ் கற்ற கணபதிப்பிள்ளை 1917 இல் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், வித்தகம் ச. கந்தையாபிள்ளை, வித்துவான் ச.சுப்பையாபிள்ளை, சுவாமி விபுலாநந்தர் போன்ற பேரறிஞர்களிடம் கல்வி கற்றார்.


12 புலியூர்க் கேசிகன் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆவியியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்னும் பன்முகம் கொண்டவர். நெல்லை மாவட்டத்தில் உள்ள புலியூர்க் குறிச்சி என்னும் சிற்றூரில் கந்தசாமி பிள்ளை, மகாலட்சுமி அம்மையார் ஆகியோருக்கு அக்டோபர் 16, 1923 ஆம் நாள் புலியூர்க் கேசிகன் பிறந்தார். இவருக்கு சொக்கலிங்கம் எனப் பெற்றோர் பெயரிட்டனர். அவர் தந்தைக்கு வேளாண்மை முதன்மைத் தொழில்; மளிகைக்கடை வணிகம் துணைத்தொழில்.


13

பெருஞ்சித்திரனார் (20 ம் நூற்றாண்டு அறிஞர்)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 - சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் அழைக்கப்பெற்றவர்.


14

இரா. மீனாட்சி

கவிஞர் இரா. மீனாட்சி ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் ஆய்வாளர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், புதுக்கவிதைப் படைப்பில் குறிப்பிடத்தக்கவர். சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ காலத்தில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர். தற்போது ஆரோவில் சர்வதேச நகரத்தில் தொண்டாற்றி வருகிறார். இவர் எழுதிய “உதய நகரிலிருந்து” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.


15 கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 - மார்ச் 21, 2008) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். சச்சிதானந்த என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார். யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் பிறந்தவர் சச்சிதானந்தன். மகாவித்வான் நவநீதகிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரி (1938-1940) ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். தந்தையாரிடம் வானியலும் சோதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குரக்களிடமும் சமக்கிருதக்கல்வியும் பயின்றார். மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பட்டமும் பெற்றார். 1971 ஆம் ஆண்டில் லண்டனில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர்.


16

ஔவை துரைசாமி

ஔவை துரைசாமி (செப்டம்பர் 5, 1902 - ஏப்ரல் 3, 1981) தமிழறிஞர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில், சுந்தரம் பிள்ளை - சந்திரமதி தம்பதிக்கு மகனாக 1902 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் திண்டிவனத்திலிருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில், பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று சிறப்பாகத் தேறினார். பின்பு, வேலூர் ஊரீசு கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் குடும்ப வறுமையினால் கல்வியைத் தொடர வாய்ப்பில்லாமல் போயிற்று. குடும்பத்திற்கு உதவ "உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்" பணியில் சேர்ந்தார். அப்பணியில் தொடர மனம் இல்லாமல் ஆறே மாதத்தில் அப்பணியிலிருந்து விலகினார்.


17

தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென உலகிற்குப் பறைசாற்றியவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று வாதிட்டவர். மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.


18 சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள். இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராக இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற பத்திரிகையில் எழுதத் தொடங்கினார்


19 சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - 1922, சுன்னாகம், யாழ்ப்பாணம்) இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர். யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் என்ற ஊரில் பிறந்த குமாரசுவாமிப்புலவரின் தந்தை அம்பலவாணர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை தமது பெரிய தகப்பனாராகிய முத்துக்குமாரக் கவிராயரிடம் கற்றுத் தேறியவர். அத்துடன் சைவ சமய ஈடுபாடும் கொண்டவர். தென்கோவை குமாருடையார் மகள் சிதம்பராம்மையரை 1840 வைகாசி ஐந்தாம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் முறையே சிவகாமிப்பிள்ளை, குமாரசுவாமி மற்றும் காமாட்சிப்பிள்ளை என மூன்று மகவுகளை பெற்றனர். 1854 ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் குமாரசுவாமி பிறந்தார்.


20 முத்துசுவாமி இராகவையங்கார் (1878 சூலை 26 – 1960 பிப்ரவரி 2) என்னும் மு. இராகவையங்கார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளர்; பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர். இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக 1878 சூலை 26 ஆம் நாள் இராகவையங்கார் பிறந்தார். இவர் இளமையிலேயே தன் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரை தேவர் இவரை வளர்த்து கல்வி புகட்டினார். மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896 ஆம் ஆண்டில் தன்னுடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரை தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.


21

உ. வே. சாமிநாதையர்

உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28, 1942, உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.


22

இரா. பெருமாள் ராசு

இரா. பெருமாள் ராசு (பிறப்பு: நவம்பர் 19, 1931) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஆன்மீகச் செல்வர் மற்றும் தற்காப்புக் கலை வித்தகரும் ஆவார். லெனின் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று இந்திய - ரஷ்யக் கலாசாரக் குழுவுடன் உருசியா சென்றுவர தேர்ந்து எடுக்கப்பட்டவர். தமிழ் நாடு மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டம் கருமலை என்றழைக்கப்படும் கிருஷ்ணகிரியில் 1931-ல் பிறந்து, ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார் இரா. பெருமாள் ராசு. இவருடைய மனைவியின் பெயர் மகாலட்சுமி. தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகள் திருக்குறள் வகுப்புகளையும், 1967-ல் திருக்குறள் மாநாட்டையும் நடத்தி குன்றக்குடி அடிகளார், கி. வா. ஜ, கி. ஆ. பெ. விசுவநாதம், திருக்குறள் வீ. முனிசாமி போன்ற அறிஞர் பெருமக்களை அழைத்துப் பெருமைப்படுத்தியவர். பேராசிரியப் பெருமக்களையும் துறை சார்ந்த வல்லுனர்களையும் அழைத்து, கவியரங்கம், ஆய்வரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நடத்திவருகிறார். 'ஆனந்த பரவசம்' என்ற ஆன்மீக மாத இதழின் 'கௌரவ' ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.


23 சபாபதி நாவலர் (1845/1846 - 1903) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழ் மிக்க பெரும்புலவராய், சொல்லாற்றல் மிக்கவராய், சைவத்துக்கும், தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றியவர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் தமிழ்நாட்டு மன்னர்களாலும், மடத்துத்தலைவர்களாலும் மற்றும் அக்காலப் புலவர்களாலும் பாராட்டப் பெற்றவர். இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில், வடகோவை என்னும் ஊரில் 1846 ஆம் ஆண்டில் சபாபதி நாவலர் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் சுயம்புநாதப் பிள்ளை. தாயின் பெயர் தெய்வயானை. சைவ வேளாளர் குலத்தினைச் சேர்ந்தவர். இவர் அக்காலப் புலவர்களில் சிறந்தவராகவும், சொல்வன்மை மிக்க கல்வியாளராகவும் விளங்கினார்.


24

பம்மல் சம்பந்த முதலியார்

பம்மல் சம்பந்த முதலியார் (பெப்ரவரி 9, 1873 - செப்டம்பர் 24, 1967) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். சென்னையில் பம்மல் விசயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 1873 மாசி முதல் நாளன்று பிறந்தார். விசயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ் புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.


25 சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் "வாடிவாசல்", "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.


26

கா. சு. பிள்ளை

கா. சு. பிள்ளை என அழைக்கப்படும் காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை (5 நவம்பர் 1888 - 30 ஏப்ரல் 1945) தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழறிஞர்; சைவசித்தாந்த வல்லுநர்; வழக்குரைஞர்; தமிழ்ப் பேராசிரியர்; சட்ட வல்லுநர்; மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர்; சொற்பொழிவாளர்; தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்த பன்மொழிப் புலவர்.

கா. சுப்பிரமணியபிள்ளை திருநெல்வேலியில் வாழ்ந்த காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை இணையருக்கு 1888 – நவம்பர் – 5ஆம் நாள் பிறந்தார். திருநெல்வேலியில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் தனது தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். மூன்றாண்டுகள் கடந்ததும் அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார். 1906ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.


27

ஏ. பெரியதம்பிப்பிள்ளை

புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை (பிறப்பு: சனவரி 8, 1899 - நவம்பர் 2, 1978) கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டக் கவிதைப் பாரம்பரியத்தின் சிறப்பு மிக்க ஒருவராக விளங்குகின்றார். இவர் கவிஞர் மாத்திரமல்ல, கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், மேடைப் பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி.

1899 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டம், மண்டூரில் ஏகாம்பரப்பிள்ளை வண்ணக்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். மண்டூரில் உவெசுலியன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்ற இவர் யாழ்ப்பாணத்துப் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியாயர் என்பாரிடம் தமிழ் படிக்கத் தொடங்கினார். தொடர்ந்து உயர்கல்வியினைக் கல்முனையிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையுடன் உடன் மாணாக்கராயிருந்தார்.


28 தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க (Proscenium) மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.


29

சா. கணேசன்

கம்பனடிப்பொடி சா.கணேசன் என அழைக்கப்படும் சாமிநாத கணேசன் தமிழக அரசியல்வாதி; சமூக சேவகர்; தமிழ் இலக்கியவாதி; காந்தியவாணர்; கம்பரின் தமிழ்மீது ஈடுபாடு கொண்டவர். காரைக்குடி கம்பன் கழகத்தை உருவாக்கி தமிழகத்தின் பல பகுதிகளில் கம்பன் கழகங்கள் உருவாக வழிகாட்டியவர் சிற்பக் கலை வல்லுநர்; கல்வெட்டாய்வாளர்; தமிழகத் தொன்மவியலாளர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் வாழ்ந்த சாமிநாதன் – நாச்சம்மை இணையருக்கு 1908 சூன் 6 ஆம் நாள் கணேசன் மகனாகப் பிறந்தார். சா. கணேசன் தனது தொட்டக்கக் கல்வியை காரைக்குடி ரெங்கவாத்தியார் என்பவர் நடத்திய திண்ணைப் பள்ளியில் பயின்றார். பண்டித வித்துவான் சிதம்பர ஐயர், பர்மா தோங்குவா பண்டித சேதுப்பிள்ளையிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பின்னர் வடமொழியும் ஆங்கிலமும் கற்றார்.


30 மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளைப் பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராக சேர்ந்தார்.


31 ந. பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீக்ஷிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீக்ஷிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா கலாட்சேபம் செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர்.


முன்மொழிதல்[தொகு]

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபர்கள் பற்றிய கட்டுரைத் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. நாமக்கல் கவிஞர்
  2. பாரதிதாசன்
  3. ஔவை
  4. கம்பன்