தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று.
வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்கிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாக கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் "வாடிவாசல்", "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.