வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூலபத்திரர் (பொ.ஊ.மு. 297-198) என்பவர் சமணத்தின் சுவேதாம்பரப் பிரிவை நிறுவியவராவார். பொ.ஊ.மு. நான்காம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசில் நிலவிய 12-ஆண்டு நீண்ட பஞ்சத்தின் போது இப்பிரிவு நிறுவப்பட்டது. இவர் பத்திரபாகு மற்றும் சம்பூதவிசயர் ஆகியோரின் சீடராவார். இவரது தந்தையான சகடால என்பவர், சந்திர குப்த மௌரியரின் வருகைக்கு முன்னரான நந்தப் பேரரசில் அமைச்சராக இருந்தார். இவரது சகோதரர் அரசின் முதன்மை அமைச்சராக ஆகிய வேளையில், தூலபத்திரர் சமணத் துறவியானார். ஏமச்சந்திரரால் 12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமண நூலில் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

தூலபத்திரர், தன நந்தனின் அமைச்சரான சகடாலவின் மகனும், சிறீகயனின் உடன்பிறப்புமாவார். மரபு முறைப்படி இவரது காலம் பொ.ஊ.மு. 297 இலிருந்து 198 வரையாகும். தன நந்தனின் அரசவை நாட்டியக்காரியான ரூபகோசாவைக் காதலித்து அவளோடு வாழ்ந்து வந்தார். தனது தந்தையின் இறப்புக்குப் பின் அமைச்சுப் பொறுப்பை மறுதலித்து சமணத் துறவியானார். இவரது சகோதரர், பிற்காலத்தில் நந்தப் பேரரசின் முதன்மை அமைச்சரானார். இவர் சம்பூதவிசயர் (பொ.ஊ.மு. 347-257) மற்றும் பத்திரபாகு (பொ.ஊ.மு. 322-243) ஆகியோரின் சீடரானார். இவர் 12 ஆண்டுகள் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இவர் தனது சாதுர்மாச காலப்பகுதியை ரூபகோசாவின் வீட்டில் கழித்தார். இக்காலப்பகுதியில் ரூபகோசா இவரைத் தமது துறவு வாழ்வினின்றும் வழுவச்செய்து தன்வசப்படுத்த முயன்று தோற்றுப்போனாள். அதற்கு மாறாக, தூலபத்திரர் அவளை சிராவிகையாக (சமண இல்லறப் பெண்) உறுதிமொழி ஏற்கச்செய்தார்.