வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய வியாழன் என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாட்களை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற நாள்களில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும். பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது. இந்நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்விழா ஆண்டுதோறும் மார்ச் 19இலிருந்து ஏப்ரல் 22 காலப்பகுதியில் இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும். கத்தோலிக்க திருச்சபை உட்பட மேலைத் திருச்சபைகள் கிரகோரி நாட்காட்டியின் படியும், கீழைத் திருச்சபைகள் ஜூலியன் நாட்காட்டியின் படியும் இந்நாளை நிர்ணயிக்கின்றன. பெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி. மூன்றாம் நாள் புனித சனி என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.