வலைவாசல்:கிறித்தவம்/கிறித்தவ நபர்கள்/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசிசியின் புனித பிரான்சிசு (1182–1226) ஒரு கிறித்தவத் திருத்தொண்டரும், பிரான்சிஸ்கன் சபை என்னும் கிறித்தவத் துறவற அமைப்பின் நிறுவனரும் ஆவார். இவர் திருத்தொண்டராகப் பட்டம் பெற்ற பின் குருப்பட்டம் பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வு கொண்டு அப்பட்டத்தைப் பெற முன்வரவில்லை. பிரான்சிசு இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா நகருக்கு எதிராக அசிசி நகர் போர் தொடுத்தபோது, இருபது வயதே நிறைந்த இவரும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். பிரான்சிசு தம் தந்தையின் கனவைப் பொய்ப்பித்து துறவறம் பூண்டார். 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவறச் சபையைத் தொடங்கினார்.