வலைவாசல்:இந்தியா/சிறப்புக் கட்டுரைகள்/காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய வலைவாசலின் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பு இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.


எண் கட்டுரை பொழிப்புரை
1

Indian Space Research Organisation Logo.svg

இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இசுரோ இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இசுரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். 1975 இல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இசுரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ்.எல்.வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகினியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனைய துணைக்கோள் ஏவுகலம் மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க ஜி.எச்.எல்.வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது. இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இசுரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது. மேலும்...

2

Cpmcongresssehgalyecuri309.JPG

கேப்டன் லட்சுமி எனப்படும் இலட்சுமி சாகல் 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைபடைப்பிரிவின் தலைவி. மேலும் இவர் நேதாஜியின் ‘ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர்; அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்தவர்; இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். இவர் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணம் பகுதியை சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்திய மேலவையில் உறுப்பினராகப் பணியாற்றினார். 2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் 23 சூலை, 2012 அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவர் ஜான்சி ராணிப் படையில் பணியாற்றிய போது அப்படையில் உள்ள பெண்கள் பிரித்தானிய படையிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதால் நேதாஜி அப்படையினரை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். மேலும்...

3

Chandrashekar azad.bmp.jpg

சந்திரசேகர ஆசாத் (1906–1931) பரவலாக அறியப்படும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுள் ஒருவர். இந்துத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோகி தொடருந்துக் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு படுகொலை போன்றவற்றில் பங்களித்தவர். இவரது தாயான தேவி இவரை காசியில் உள்ள வித்யா பீடத்தில் சமக்கிருதம் கற்பிக்க அனுப்புமாறு அவருடைய தந்தையிடம் கூறி ஏற்கச் செய்தார். ஆனால் இவரது பதினைந்தாவது வயதில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காக கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். அந்த நடுவரிடம் செய்த எதிர்வாதங்களுக்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் என்று புனை பெயரால் மக்களால் அதிகம் அறியப்படும் அளவுக்கு ஆசாத்தின் எதிர்வாதங்கள் அமைந்தது. மேலும்...

4

Topographic map of Tamil Nadu.jpg

காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான ஆற்று நீர்ப் பங்கீட்டுப் பிணக்கு ஆகும். காவிரியாற்றின் நீரை கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். 1892 மற்றும் 1924 ஆண்டுகளில் சென்னை மாகாணத்திற்கும் மைசூர் மாகாணத்திற்கும் இடையே நிகழ்ந்த இரு வேறு முரண்பட்ட ஒப்பந்தங்கள் இந்த நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் 1807-ஆம் ஆண்டு மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892-ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும்...

5

Fort St. George, Chennai.jpg

சென்னை முற்றுகை என்பது பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவர பிரெஞ்சு படைகள் டிசம்பர் 1758 முதல் பெப்ரவரி 1759 வரை, லல்லி தலைமையில் நடத்திய முற்றுகைப் போராகும். இது ஏழு ஆண்டுப் போரின் போது நடந்த போராகும். பிரித்தானியப் படைகள் வெற்றிகரமாக இந்த முற்றுகையை எதிர்கொண்டனர். இந்தப் போரில் சென்னை நகரைப் பாதுகாக்க பிரித்தானியப் படையினர் 26,554 பீரங்கிக் குண்டுகளையும் 200,000 தோட்டாக்களையும் பயன்படுத்தினர். சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றத் தவறியமை பிரெஞ்சுப் படையின் இந்திய நுழைவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்ததுடன் பின்னாளில் நடைபெற்ற வந்தவாசிப் போருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும்...

6

Onapookkalam.jpg

ஓணம் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா. கொல்லவருசம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்க மாதத்தில் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி இது கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருவதாக கிபி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மகாபலி என்ற கேரள மன்னன் வேள்வி செய்யும் போது திருமால் வாமணனாக உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் பலி. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தன் மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் பலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணம் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். மேலும்...

7

Madras Prov South 1909.jpg

சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிருவாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார் பகுதி, இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை இம்மாகாணத்தில் அடங்கியிருந்தன. இதன் கோடைக்காலத் தலைநகரம் உதகமண்டலம், குளிர்காலத் தலைநகரம் சென்னை. 1600 இல் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசி ஓர் ஆங்கிலேய வர்த்தகர் குழுமத்துக்கு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்னும் கூட்டுப் பங்கு நிறுவனத்தை உருவாக்க அனுமதி அளித்தார். இந்நிறுவனம் முதலாம் ஜேம்ஸ் மன்னரின் காலத்தில் இந்தியாவில் வர்த்தக நிலையங்களை அமைக்க முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதியைப் பெற்றது. முதலில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் வர்த்தக நிலையங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் சந்திரகிரி அரசரிடம் பேச்சுவார்த்தை நடத்திய கம்பனி நிருவாகி சர் பிரான்சிசு டே, மதராசப்பட்டினம் எனும் கிராமத்தருகே ஒரு வணிக நிலையத்தை நிறுவ நிலஉரிமை பெற்றார். மேலும்...

8

Sri Aravan.jpg

அரவான் இந்து காப்பியமான மகாபாரதத்தில் தோன்றும் ஒரு சிறிய கதாபாத்திரம். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன், மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன். அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். 'கூத்தாண்டவர்' என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானை கிராம தெய்வமாக வழிபடும் பகுதியில் தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் சமூகத்தின் காவல் தெய்வமுமாவார். குருசேத்திரப் போரில் அரவான் வீர மரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்கு காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே கடவுளுக்கு பலி கொடுத்ததை சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது. தன்னையே பலி கொடுத்ததற்காக கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. மேலும்...

9

கடமா (Bos gaurus) என்பது இந்தியக் காடுகளில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பிகள் குடும்பத்தை சேர்ந்த இனமாகும். உலகில் காணப்படும் ஆக்குடும்ப இனங்களிலேயே மிகப்பெரிய உடலளவைக் கொண்டது கடமா ஆகும். கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, கட்டேணி, காட்டுபோத்து என்று பல பெயர்களில் அறியப்பட்டுள்ளது. தென்கிழக்காசியா|தென்கிழக்கு ஆசியப்]] பகுதியில் கடமாவில் நான்கு உள்சிற்றினங்கள் (sub-species) இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கடமாவின் மூதாதைய இனம் ஆசியக் கண்டத்தில் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக அறியப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் கடமா கடமா தொலைச்சிய கானுறை வேங் கை (நாலடி, 300), மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331) என்றவாறு குறிக்கப்பட்டுள்ளது. இவை வெப்பமண்டல காடுகளில் வாழ்பவையாகும். மேலும்...

10

Mahavir.jpg

மகாவீரர் என்பவர் சமண சமயத்தின் மையக் கருத்துக்களை பரப்பியவரும் வர்த்தமானர் என்றும் அறியும் இந்திய துறவியாகும். சமண மத மரபு வரலாற்றில் அவர் 24ஆவதாகவும் கடைசியாகவும் தோன்றிய தீர்த்தங்கரர் ஆவார். பீகார் மாநிலத்தில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் "சத்திரியகுண்டா" என்ற இடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார். உலகெங்கும் உள்ள சமணர்கள் அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர். 12 ஆண்டுகள் ஆன்மீகத் தேடலுக்குப் பின்னர் சமண சமயத்திற்கு புத்துயிர் ஊட்டி இந்தியாவெங்கும் பரப்பினார். மேலும்...